குரங்கு மனசு பாகம் 05

அந்த நாள் திங்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதற்காய் தன்னை தயார்படுத்திக் கொண்டு பாதை வழியே தன்னந்தனி நடந்து போகிறாள் சர்மி.

“உம்மா சொல்றத கேட்டு ரெண்டு புடி சாப்புட்டு வந்தா உனக்கு என்னா ஆவும்? இப்போ பசிக்குதுல்ல, காலையில நேரத்தோட எழும்பினா இப்புடி எல்லாம் நடக்குமா? சரி சரி பஸ் வர டெய்ம் ஆவுது. என்னமோ உன் அப்பன் தான் பஸ் வெச்சிட்டு இருக்குற போல இப்புடி ஆம நட காட்ற? போ அவசரமா, போ சர்மி” யாருமில்லா அந்தப் பாதையில் தனக்குத் தானே பேசிக் கொண்டும், ஏசிக் கொண்டும் பஸ் தரிப்பிடம் நோக்கி வேகமாய் நடக்கிறாள் சர்மி. அவள் வீட்டிலிருந்து பஸ் தரிப்பிடம் காண அந்த ஒற்றையடிப் பாதையினூடாக கொஞ்சம் வர வேண்டும். இரவெல்லாம் விழித்துப் படிக்கும் இவளுக்கு காலையில் எழும்புவது சிரமம் தான். அதனால் தாய் ராபியாவின் நச்சரிப்புக்கள் காலையிலே துவங்கிவிடும். உம்மாவின் திட்டுக்களை கேட்டுக்கேட்டு பழகிப் போன சர்மி, அவசர அவசரமாய் எழுந்து தன்னை தயார்படுத்திக் கொண்டு சாப்பிடாமலே வெளியாகி விடுவாள்.

இன்றும் நடந்தது இது தான். தாமதமாய் எழுந்தவள், வழமை போன்று சாப்பிடாமலே மேலதிக வகுப்பென்று கிளம்பி விட்டாலும், வழமைக்கு மாறாக பசி அவள் வயிற்றை கிள்ளி விளையாட தனக்குத் தானே திட்டிக் கொண்டு  பயணத்தை தொடருகின்றாள். ஆனால் இந்தப் பயணம் சர்மியின் வாழ்கையை மாற்றப் போகும் முதல் பயணமாய் இருக்க, இப்பொழுதைக்கு அவள் இதுகுறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. இங்கு அவசர அவசரமாய் பஸ் தரிப்பிடம் வந்து சேர்ந்த சர்மிக்கு எல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது.

“யா அல்லாஹ்! தல சுத்துதே.” சொல்லி முடிக்க முன்னே அவ்விடம் விழுந்து விட்டாள். யாருமில்லாத அந்தப் பாதையில் இவளின் நல்ல நேரமோ என்னவோ, அவ்விடம் வந்து சேர்ந்தது அவன் தான். ஆண்களுக்கான திடமான தோற்றத்தோடு பார்க்க பெரிய இடம் போல் இருந்தாலும், வெறுமனே ஓர் ஆட்டோ டிரைவர் தான். ஆக ஒரே அவ்விடத்தால் வந்துபோகும் வழக்கம் இருக்க, சர்மியை நாளைந்து தடவைகள் கண்டிருக்கின்றான்.

“ரோட்ல விழுந்து கிடக்குறாள். என்ன இவளுக்கு?” சுற்றும் முற்றுப் பார்த்தவன், மனிதாபிமானம் தலைகாட்டவே, தன் ஆட்டோவின் பின்னால் இருந்த தண்ணீர் போத்தலை திறந்து சிறு துளிகளை சர்மியின் முகத்தில் தெளித்தான்.

“ஹலோ சிஸ்டர், என்னா உங்களுக்கு? எழும்புங்க, எழும்புங்க சிஸ்டர்” சங்கடத்தின் மத்தியில் நின்றிருந்தவன் எண்ணம் போல் சிறிது நேரத்தில் கண்களை திறந்தாள் சர்மி. அவள் கண்களுக்கு சூழ இருந்தவைகள் எல்லாம்  இருளாக விளங்கினாலும், இந்த வெள்ளை முகம் மட்டும் பளிச்சிட்டு விளங்கியது.

“ஆஹ் சிஸ்டர். எழும்பிட்டீங்களா? நான் என்னவோ ஏதோன்னு நெனச்சன்.”

உண்மையில் சர்மியால் எழுந்திருக்க முடியவில்லை, அவள் கை கால்கள் எல்லாம் நடுங்க, பசியின் அகோரத்தால் வந்த விளைவென்று புரிந்து கொண்டாள்.

“சிஸ்டர் உங்களுக்கு ஓகேவா?” பக்கத்தில் இருந்தவன் வாய் மூடாமல் கேள்வி கேட்க, சிறிது எரிச்சலாயிருந்தாலும் அவள் காட்டிக் கொள்ளவில்லை.

“உங்களுக்கு என்ன சிடியில ட்ரொப் பண்ணி விடலாமா?” அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலே, அவனைப் பார்த்துக் கேட்டாள் சர்மி.

“ஆமாம் வாங்க சிஸ்டர்” கஷ்டப்பட்டு எழுந்தவள் அவனின் ஆட்டோவில் பயணம் செய்ய,

“பிரதர் இந்த ஷொப்கிட்ட கொஞ்சம் நிப்பாட்டுங்க..”

“ஏன்?”

“இல்ல பசிக்குது, காலையில ஏதும் சாப்புடல்ல அது தான்…”

“ஓ! இனி இப்புடி தான் நடக்கும். பார்க்க படிக்குற பொண்ணு போல இருக்கீங்க, டெய்ம்கு சாப்புட படிச்சில்லயா?”

ஏதோ தன் தங்கை போல் உரிமையாய் பேசிக் கொண்டே போக..

“ஹலோ பிரதர்.. சொன்னத மட்டும் செய்யுங்க…” அவன் வாயை மூடச் செய்தாள் சர்மி.

“சரி நான் போய் வாங்கிட்டு வாரன், உங்களுக்கு என்ன வேணும்?

“ரெண்டு சமுசா போதும்”

“ஹ்ம்ம்ம்”

இரண்டுக்கு நான்கை வாங்கிக் கொடுத்தவன் அவள் சாப்பிட்டு முடிந்ததும், போய்சேர வேண்டிய இடத்துக்கு கூட்டிச் சென்றான்.

“எவ்வளவுன்னு சொல்லுங்க, சாப்பாட்டுக்கும் சேர்த்து.”

“நான் இது சல்லிக்கு செய்யல்ல ரெண்டுக்கும் வேணாம், போங்க”

“ஹலோ…”

“என்ன ஹலோ? போங்கமா இட்ஸ் ஓகே..”

சர்மியின் பதில் வார்த்தைகளுக்கு முன்னதே தன் ஆட்டோவை திருப்பிக் கொண்டு விடைபெற்றான் அந்த இளைஞன்.

“சிட்! இவ்வளவு நல்லவனா இருக்கிறவன் கிட்ட கடுமையா பேசிட்டனே” குற்றத்துடன் சர்மி கவலை கொள்ள, இப்பொழுதைக்கு இந்த உறவு முடிந்து விட்டது தான்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

2 thoughts on “குரங்கு மனசு பாகம் 05

Kelly Curtis

Reply

Very nice! Take care and thank you for the follow.

January 9, 2020 at 9:14 pm

    admin

    Reply

    Thanks for follow back

    January 12, 2020 at 11:55 pm

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: