மீண்டும் பள்ளிக்கு போகலாம்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்

ஸாஹிரா தாய் பிரசவித்த
சாந்தி மார்க்கத்தின் சகோதர சொந்தங்களுக்கு
சுவனத்தின் காணிக்கைகள்

அமுத விழாவின்
அமிர்தம் மிகு தினத்தினிலே
பால்ய பருவத்தின்
பசுமையான நினைவுகளை
பெருமையாய் மீட்டிச் செல்லும்
அருமையான தருணமிது

எங்கிருந்தோ வந்தோம்
எதிர்பாராமல் சந்தித்தோம்
நட்புறவை வளர்த்தோம்
என்றென்றும் தொடர்கிறதே நெடுஞ்சாலையாய்

மிளிரும் முத்துக்களினூடே
துளிர்த்த ஆரக் கோவையாய்
ஒன்றோடு மற்றொன்றாய் கைகோர்த்து
நடைபயின்ற இனிமையான நாட்களின் நினைவுகள்
நெஞ்சோடு முட்டி மோதி
அலையென ஆர்ப்பரிக்கின்றனவே

புள்ளி மானென துள்ளியோடிய
பள்ளிக்கூடமதில்
தோள் மீது கரம் சுமந்து
தோழிகளாய் வலம் வந்த
தூய்மையான நட்பினை எண்ணுகையில்
தித்திக்குதே உள்ளம்

எல்லே, கிரிக்கெட் என்றும்
கபடி, கண்ணாமூச்சி என்றும்
எண்ணிலடங்கா விளையாட்டுகளுடன் சங்கமமாகியே
மைதானத்தை ஆட்சி செய்த
மங்காத நாட்களின்
நீங்காத சுவடுகள்
என்றென்றும் இதயவோரத்திலே

மாணவர் மன்ற மேடையிலே
தண்ணொளி பொருந்திய
விண் நிலவாய் பிரகாசித்து
எண்ணங்களின் வண்ணங்களை
திறம்படத் தீட்டியே
மகிழ்ந்திற்ற மறையாத பொழுதுகள்

ஸாஹிரா கலையகத்தில்
தூய்மையாய் துளிர்த்திற்ற நட்புகளுடன்
உறவாடிய பொன்னான பொழுதுகளோ
ஏராளம்… தாராளம்…

பசுமையான தருணங்களை
பசுமரத்தாணியாய்ப் பதித்திங்கே
இன்றைய பிணைப்பு
இனி என்றும்
இணை பிரியாது தொடர
இறை துணையை வேண்டியவளாய்
விடை பெறுகின்றேன்

ILMA ANEES
SEUSL
SECOND YEAR

கவிதை வியூகம் வெளியீட்டு மையம்