ஏன் அரசியல்?

  • 8

2011 கள் காலப் பகுதி என்று நினைக்கிறேன். அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் பட்டப்பின் கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலப் பகுதி நாம் இருவர்தான் வகுப்பறை மாணவர்கள். நீண்ட உறையாடல்களும் கருத்துப் பறிமாறல்களும் எம் இருவருக்கும் விரிவுரையாளர்களுக்குமிடையே இடம்பெறும். அக்காலப் பகுதியில் அரசியல் நடத்தைகளுக்கு பின்னணியாக அமையும் சித்தாந்தங்கள் குறித்த ஈடுபாடு என்னிடம் அதிகமாக காணப்பட்டது. அது குறித்த நூல்களை அவ்வப்போதே பிரதி எடுத்து வைத்துக் கொள்வேன். அக்காலப் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு பிரதியில் அந்தோனியோ கிராம்ஸியினுடைய சிவில் சமூகத்தை மையப்படுத்திய மேலாதிக்கம், கருத்துநிலை குறித்த சிந்தனைகள் என்னை அதிகம் ஈர்ப்புக் கொண்டிருந்தவை என்பதற்கான குறிப்புக்கள் நிறையவே காணப்படுகின்றன.

இது குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக எண்ணியிருந்தேன் எனினும் அதற்கான மெய்யான வாய்ப்பு அமையப் பெறவில்லை. அது இப்போது வாய்த்திருக்கிறது என நினைக்கிறேன்.

பொதுவாகவே அரசியல் என்பது எமது நாட்டில் முப்பார்வை கொண்டதாக அமையப் பெற்றிருப்பதை அவதானிக்கலாம். அரசியல் அதிகாரத்தின் உண்மையான சொந்தக்காரர்களான மக்கள் பார்வையில் அது தமது நலன்களை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களாக நோக்கப்படுகிறது. அதிகாரத் தரப்பு அல்லது அரசியல் சமூகத்தைப் பொறுத்த வரையிலும் இதே விடயம் அதன் மறுதலையாக செயற்படுகிறது. தமது, தாம் சார்ந்தவர்களது நலன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக அதிகாரத்திற்கு வருதலை அவர்கள் கருதுகிறார்கள். மறுபுறம் இந்த நாட்டின் கேந்திரீய முக்கியத்துவத்தின் பொருட்டு இந்த நாட்டில் யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதனை நவீன காலனிய ஆதிக்க சக்திகள் தமது நலன் சார்ந்த நோக்கில் அணுகுகின்றனர். இந்த முத்தரப்பும் ஈற்றில் தமது நலன்கள் சார்ந்து எடுக்கும் தீர்மானங்களின் ஆடுகளமாகத்தான் அரசியல் களம் காணப்படுகிறது.

யதார்த்தத்தில் சிவில் சமூகமே அதிகாரத்தின் உண்மையான உரிமையாளர்கள். ஆனால், அரசியல் சமூகம் தனது நலன்களுக்காக சிவில் சமூகத்தின் மீதான மேலாண்மையை எப்போதுமே தக்கவைத்துக் கொண்டிருக்க முயற்சிக்கின்றது. இங்கு அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருப்பதாக ஒரு சாரார் போலியாக கட்டமைக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது நலன்களுக்கு விசுவாசமாக நடப்பதே சிவில் சமூகம் தனது நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏக மார்க்கம் என்ற பிரமை இயல்பாய் தோற்றுவிக்கப்படுகிறது.

இங்குதான் பட்டிதொட்டியெல்லாம் அந்த கட்டமைக்கப்பட்ட அதிகார வார்க்கம் என தம்மை போலியாக முதல்நிலைப்படுத்திக் கொள்பவர்களின் அடியாட்கள் தோற்றம் பெறுகிறார்கள் அல்லது விலை கொடுத்து தோற்றுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் எந்தக் கருத்துநிலைப் பின்னணிகளோ, புரிதல்களோ அற்றவர்களாகவே பெரும்பாலும் காணப்படுவார்கள். அப்படி இருப்பதுதான் அதிகாரத்திற்கு சேவகம் செய்வதற்கான அவர்களுக்கான முதன்மைத் தகுதி.

இனி, உண்மையான அதிகாரத்தை வைத்திருக்கும் சிவில் சமூகம் தனது அதிகாரத்தை இந்த அடியாட்களிடம் விற்பனை செய்துவிடுகிறார்கள். இந்த அடியாட்களிடமே தமது நலன்களை அடைவதற்கான அத்தனை அதிகாரத்தின் வாயில்களும் இருப்பதாக முட்டாள்தனமாக எண்ணத் தலைப்படுகிறார்கள். அப்போது எவ்விதத் தகுதியும் அற்ற இந்தக் கூலிகள் சமூகத்தின் கதாநாயகர்களாக முன் நிறுத்தப்படுவார்கள். உண்மையில் இவர்கள் எவ்வித உரிமமும் தகுதியுமற்ற சுயநலக் கூலிகள். இவர்களை நடாத்துவதற்குக் கூட சிவில் சமூகத்தின் உழைப்பும், வருமானமும், நலன்களுமே பயன்படுத்தப்படுகின்றன என்பதனை சிவில் சமூகம் விளங்கிக் கொள்வதில்லை.

இங்குதான் அரசியல் விழிப்பு சிவில் சமூகத்திற்கு யதார்த்தமாய் அவசியப்படுகிறது. தமக்கான அதிகாரங்களும் தமதான வளங்களும் ஒரு தரப்பால் சூரையாடப்படுவதையும் தமக்கான பிரதிநிதிகளை தாமாகத் தெரியும் சுதந்திரமும் தமக்கு மறுக்கப்படுவதையும் அவர்கள் புரிந்து கொள்ள வழியமைக்கப்படுவதற்கான உண்மையான தேவை இங்குதான் எழுகிறது.

உங்கள் அரசியல் பிரதிநிதிகளாக அடிமட்டங்களில் யார் நிற்கின்றார்கள் என்பதனை எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்களது தகுதி குறித்து கேள்வி எழுப்பியதுண்டா?

எம்.என். இக்ராம் (M.Ed)

2011 கள் காலப் பகுதி என்று நினைக்கிறேன். அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் பட்டப்பின் கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலப் பகுதி நாம் இருவர்தான் வகுப்பறை மாணவர்கள். நீண்ட உறையாடல்களும் கருத்துப் பறிமாறல்களும்…

2011 கள் காலப் பகுதி என்று நினைக்கிறேன். அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் பட்டப்பின் கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலப் பகுதி நாம் இருவர்தான் வகுப்பறை மாணவர்கள். நீண்ட உறையாடல்களும் கருத்துப் பறிமாறல்களும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *