பல்கலை நற்புகள்

சிறுகதை

காலைக் கதிரவனின் செங்கீற்றொளி திரைச்சீலையின்றிய யன்னலினூடாக வதனத்தை முத்தமிட துயில் கலைந்தெழுந்தாள் ஆயிஷா. கட்டிலிலே குந்தியிருந்தவள் சக தோழிகளின் ஆழ்ந்த தூக்கத்தை ரசித்தவாறே தன் பணிகளில் மும்முராய் ஈடுபட்டாள். அது தீப்பெட்டி போன்றதொரு சிறு விடுதியறை. இரண்டு பேரே தங்க முடியுமான அவ்வறையில் ஒற்றுமையாய் நான்கு ஜீவன்கள். இடைக்கிடை குட்டிக் குட்டி செல்லச் சண்டைகளுடன் சங்கமித்து, துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் பங்கு கொண்டு ஒன்றரக் கலந்த சிநேகிதிகள்.

“பர்வீன்…. ரைஹானா…. அஸ்மா…. டீ ரெடி…. மூனு பேரும் தூங்கினது போதும் எழும்புங்கோ. டீ ஆறிட போகுது….” இது ஆயிஷாவின் குரல்.

“ம்ம்ம்… ஹ்ஹ்…”

முணங்கிக் கொண்டே பர்வீனும் ரைஹானாவும் படுக்கையிலிருந்து எழும்பினர். ஆயிஷாவின் ஓசை கேட்டு கண்ணைத் திறந்து பார்த்து விட்டு மறுபுறம் திரும்பி மீண்டும் கனவுலகில் சஞ்சரிக்கத் துவங்கினாள் அஸ்மா.

“அஸ்மா… இன்னமா தூக்கம்? நைட்கும் தூங்கி, ஸுபஹ் தொழுதுட்டும் தூங்கி இன்னம் தூக்கம் கலயல்லயா? போதும் தூங்கினது. எழும்பு. லெக்சர்கும் போகனும். எப்பவும் நாங்க தான் கடைசி (B)பஸ்” பர்வீனின் வழமையான ஏச்சுக்கள் செவிகளில் பட்டுத் தெரிக்க எரிச்சலுடன் எழுந்தாள் அஸ்மா.

“ஆய்ஷா ஏண்ட டீ ய தாவே…. நான் ஸுபஹ் தொழுதுட்டு (B)பிரஷ் பண்ணிட்டு தான் தூங்கின” ஆயிஷாவிடம் டீ யைப் பெற்று வாயில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள் அஸ்மா.

“நான் தான் பெ(f)ஸ்ட்கு அயன் பண்ற” என்றவாறு அபாயாவைத் தூக்கிக் கொண்டு ஓடினாள் ரைஹானா.

“சரி சரி… எப்பிடீம் ஒட்டிப் பிறந்தவங்க மாதி எல்லாரும் ஒரே டைம்கு தானே போக போற”
“ஓ ஆய்ஷா அதெண்டா உண்ம. எங்கள திருத்தவே ஏல. எரும மாட்டுக்கு மேல மழ பெய்ர மாதி தான் எங்கட கத. சரி சரி எல்லாரும் சுறுக்கா உடுத்துவம். இல்லாட்டி ஸேர் ‘மாமி ஊட்டுக்கா வந்த?’ எண்டு கேப்பாரு” என்றாள் பர்வீன் (பலத்த சிரிப்பொலிகள் அறை முழுதும் பட்டுத் தெரித்தன).

நால்வரும் பேசிக்கொண்டும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டும் தயாராகி முடிய நேரம் 08.25 ஆகி விட்டது.

“அல்லாஹ்… பூட்டு எங்க? நான் எத்துன தடவ தான் சொல்ற அத இந்த லாச்சீலயே வெக்க செல்லி. கேட்டாத்தானே” அஸ்மா உறுமினாள்.

“சரி சரி…. இப்ப பூட்டு தேட டைம் இல்ல. மத்த பூட்ட போட்டுட்டு போவம். அத வந்து தேடுவம்” என்ற ரைஹானாவின் ஆலோசனைக்கு இணங்கி நால்வரும் முச்சக்கர வண்டியொன்றில் பீடத்தை அடைந்தனர்.

“அப்பாடா நல்ல வேல இன்னம் ஸேர் வந்தில்ல” நால்வரும் ஒருமித்த குரலில் கூறியவாறே விரிவுரை மண்டபத்தின் முன் ஆசனங்களிலே உட்கார்ந்து கொண்டனர். விரும்பியோ விரும்பாமலோ அன்றைய நாளின் அனைத்து விரிவுரைகளும் இனிதே முடிந்தன.

“ரீங்ரீங்…ரீங்ரீங்…”

“ரைஹானா கொஞ்சம் இரீங்க பர்வீன் கோல் எடுக்குறா. அஸ்ஸலாமு அலைக்கும் பர்வீன்”

“வஅலைக்கும் முஸ்ஸலாம் ஆய்ஷா நீங்க எங்க?”

“ஆஹ் நானும் ரைஹானாவும் மல்டி சொப்ல. ரைஹானா கி(G)ப்ட் ஒண்டு வாங்கனுமாம்”

“சரி நானும் அஸ்மாவும் ரூம்க்கு போற. நீங்க ரெண்டு பேரும் வாங்க” என்று கூறி அழைப்பைத் துண்டிக்க முனைந்த பர்வீனைத் தடுத்து நிறுத்திய ரைஹானா

“பர்வீன் எங்களுக்கு சோர்ட் ஈட்ஸ் வாங்கி வைங்க. ஆய்ஷா வந்து டீ ஊத்துவது.” என்று சிரித்தாள்.

“ஆஹ் சரி மேடம்”

தொலைபேசி துண்டிக்கப்பட்டது. ரைஹானா ஆயிஷாவின் பக்கம் திரும்பிய போது அவள் தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஆயிஷாவின் கன்னத்தைக் கிள்ளி விட்டவள் தனது தேவைகளை விரைவாக முடித்துக் கொள்ள இருவரும் வெளியேறினர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு” என்ற கோரஸுடன் அறைக்குள் நுழைந்தனர் ஆயிஷாவும் ரைஹானாவும்.

“ஆய்ஷா டீ….” பர்வீன் முனங்கவே,

“இப்ப தானே வந்தன். அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா? என்ன வம்புக்கு இழுக்காட்டி ஒனக்கு டைம் போகாதே” ஆயிஷா பொய்க் கோபம் கொண்டாள்.

“இன்னம் ஒரேயொரு வருஷம் தான் இப்பிடி கலாய்க்கேலும். அதுக்கு பொறகு ஒனக்கு நிம்மதியா ஈக்கேலும்” அஸ்மா குண்டைத் தூக்கிப் போட்டாள்.

“ஓ இன்னம் ஒரு வருஷத்துல (G)கேட் கிட்ட இருந்து இவங்க (B)பாய் காட்டுவதே அஸ்மா” என்றாள் பர்வீன்.

“ஓஹ் பர்வீன் கப்பலா நிண்டு (B)பாய் காட்டுவது” இது ரைஹானாவின் குரல்.

“போதும் நிப்பாட்டுங்க. ஏண்டி அழ வெக்கிறீங்க? இதெல்லாம் இப்ப எதுக்கு பேசுறீங்க?” என்று கண் கலங்கினாள் ஆயிஷா.

“சரி சரி… இப்ப அதெல்லாம் விடுங்க. எனக்கு பசிக்குது டீ வேணும்” என்ற ரைஹானா தேநீர் குவளைகளைக் கழுவிக்கொண்டு வந்தாள்.

பல சுவாரஸ்யமான கதைகளுடனும் சோர்ட் ஈட்ஸுடன் தேநீரை ருசித்துக் கொண்டிருந்தனர் நால்வரும். பற்பல செய்திகளையும், தகவல்களையும் தாங்கிய நால்வரினதும் வட்ட மாநாடு இரவு நேரத் தொழுகைக்காக கலையப்பட்டு மீண்டும் துவங்கி இரவு தூங்கும் வரையும் நீடித்தது.

என்றும் இவ் அன்பான உள்ளங்களின் சங்கமம் நீடித்துக் கொண்டே இருக்கும். இன்ஷா அல்லாஹ். இவ்வினிய நற்புப் பயணத்திற்கு வல்ல அல்லாஹ் துணை புரிவானாக

நிஜத்துடன் சில கற்பனை மெருகூட்டல்கள் இடம்பெற்றுள்ளன
ILMA ANEES
SEUSL

One thought on “பல்கலை நற்புகள்

Fathima Faarah Liyas

Reply

I’m Raihana here! While reading I saw all the scences what happening at our room.
Ma shaa Allah great!❤
Good imagination
May allah increase your talents and May Allah bless us to take our friendship till Jannah in shaa Allah 💛💛💛💛💛💛💛💛

February 15, 2020 at 3:20 am

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: