காலத்தின் தேவை “படித்த” சமூகமே!

  • 10

நேற்றொரு சம்பவம்! நண்பர்களுடன் சேர்ந்து நேரம் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எமது ஊரிலுள்ள ஒரு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வது வழமை. நேற்றும் அவ்வாறே காலை ஆறரை மணிக்கெல்லாம் சென்று விட்டோம். ஒன்பதரை மணி வரை விளையாடினோம். அம்மைதானத்திற்குப் பக்கத்தில் ஓர் பாடசாலை இருக்கிறது. ஏழரை மணிக்கு பாடசாலையில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது! கூடவே பழைய ஞாபகங்களும் திரும்பி வந்தது!

காலையிலேயே உற்சாகமாக நின்றுகொண்டு, அதிபர் மைக்கில் சீராப்புராணம் வாசிக்கும் போது, நண்பர்களுடன் அடித்த ஜோக்குகளுடன் காலைக்கூட்ட ஞாபகங்கள் கண்முன்னே வந்து போனது! தினமும் செக்யூரிட்டிக்கு முன்னாலேயே பாடசாலைக்கு சமூகமளிக்கும் நண்பரொருவர் முதல், மணியடித்த பின்னரே வீட்டிலிருந்து கிளம்பி, மூடப்பட்டிருக்கும் பாடசாலை Gகேட்டை தட்டித் திறந்து பாடசாலைக்கு வரும் நண்பரொருவர் வரை அத்தனை பேரும் கண்முன்னே வந்து சென்றனர்!

இவ்வாறே ஞாபகங்களை அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு சில ரசிகர்கள் மைதான‌ மதிலில் அமர்ந்திருந்தார்கள்! ஒவ்வொரு ஷொட்(shot)டுக்கும் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார்கள்!

“அந்த Ball’ல Off side’ல போடனும்டா!”

“அந்த Player எல்லா Ball’இற்கும் ஓங்கி தான்‌ அடிக்கிறாரு, Slow Ball ஒண்ட போட்டால், ஆள் Out!”

என்ன‌‌ ஒரு விமர்சனம்! சுனில் கவாஸ்கரே ஓடுர அளவுக்கு யார்ரா இப்படி Commentary பண்ணுறாங்க’னு திரும்பி பார்த்தால், அந்த ரசிக சிகாமணிகள் வேறுயாருமல்ல.

2010’s Kids!!! ஆமா அடுத்த Generations! பாடசாலை மாணவர்கள்! பாடசாலைக்கு சமூகமளிக்காது மைதானத்திற்கு இற்கு வந்திருக்கிறார்கள், இந்த மாபெரும் ரசிக சிகாமணிகள்! எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது!

“தம்பி…. எந்த ஸ்கூல்??” கையைக் காட்டினான் பக்கத்தில் இருக்கும் பாடசாலையை நோக்கி!

“எத்தனையாம் ஆண்டு??”

ஏழாம் ஆண்டு!”

“ஏன் பாடசாலைக்கு போகவில்லை??” சொன்னான் ஒரு காரணம்! அர்சே நடுங்கிப் போகும்!

“கொண்ட வெட்ட நானா!!!”

எனக்கு Shock! பொடியன்‌ Rock! இவ்வாறு ஒரு பத்து சிறார்கள் இருந்தார்கள்! கூட்டத்துக்கு தலைவன் பதினொராம் ஆண்டு மாணவரொருவன்! (வெளங்கிடும்!) விடயத்தை சக நண்பர்களிடம் எடுத்துரைத்தேன்! பாடசாலைக்கு போகாமல் இருந்தால் வீட்டிலேயே இருக்குமாறும், மீண்டும் நாளை அவர்களைக் கண்டால் அதிபரிடம் கூறிவிடுவதாகவும், பொலிஸிற்கு அறிவிப்போம் என்றும் கூறி, அவர்கள் பற்றி விபரங்களை அறிய முன்வருகையில் ஒரு சம்பவம்! (சம்பவத்திற்குள்ளே இன்னொரு சம்பவம்!)

எனது நண்பர்களைத் தவிர்த்து இன்னும் நிறைய பேர்கள் விளையாட வந்திருந்தார்கள்! அதிலொருவர் கூறினார்.

“School’க்கு போகவில்லை என்று ஏசாதேடா, மதில் மேல இருப்பவன் தான் ஒருநாளையிள பெரிய வியாபாரி ஆகுவான்டா! பெரிய சல்லிக்காரன் ஆகுவான்டா!” என்றான்.

இதைக் கேட்டதும் அந்த சிறார்களுக்கு அப்படியொரு ஆனந்தம்! அவர்களுக்கு ஆதரவாக பேசியவரை ஹீரோவாக பார்த்தனர்!

“பொறாம தானே!”

என்று லுக்கு விட்டே எங்களைப் பார்த்தனர்! அந்தாள் புதிய பணக்காரராம்! கையில் பணம் வந்ததும் விதண்டாவாதமாம்! அந்த நபருடன் பேசிப் பயனில்லை, என்று விட்டுவிட்டோம்! அச்சிறார்களுக்கு சில அறிவுரைகளைக் கூறியனுப்பினோம்! இறைவன் நேர்வழி காட்டுவானாக!!

எமது சமூகத்தில் இப்படியும் ஒருசில இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள், என்பதை நினைத்து மனது வலிக்கிறது. எமது சமூகம் வியாபாரத்தில் தலைதூக்கி வருவது காலாகாலமாக தொடரும் ஒரு‌ உண்மை! அது இறைவன் அளித்த ஒரு‌ நன்கொடை. பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வியாபாரிகளாக்கவே அல்லது தொழிலாளிகளாக்கவே விரும்புகிறார்கள். தமக்குத் தெரிந்த தொழில் நுட்பங்களை தமது சந்ததிகளுக்கும்‌ கற்றுக்கொடுக்க நினைப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம். தமது தொழிலைப் பழக்க முன்னர், குறைந்த பட்சம் எழுத்தறிவையாவது கற்றுக்கொடுக்க நினைக்க வேண்டும்,

கடந்த சில வருடங்களாக எம் சமூகத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், சமூகத்திற்கு எதிராக நடைபெறும் கசப்பான சம்பவங்களின் காரணமாக எதிர்கால சமூகத்திற்கு நிகழக்கூடிய விபரீதங்களையும் பற்றி அறிந்து கொள்ள போதிய எழுத்தறிவோ எழுத்துக்களில் பொதிந்துள்ள உண்மைகளை ஆராயும் பக்குவமோ பெரும்பாலானோருக்கு இல்லையென்பது‌ ஓர் கவலைக்குரிய விடயமே!

தமிழ், சிங்களம், ஆங்கிலம் என‌ எமது நடைமுறையில் இருக்கும் மொழிகளையாவது எழுத வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்திற்கெதிராக எத்தனையெத்தனை பிரச்சினைகள் எழுகிறது, சமூகத்திற்காக குரலுயர்த்த எத்தனை பேர் இருக்கிறார்கள்? எத்தனை கல்விமான்கள் இருக்கிறார்கள்? எமது சமூகத்தில் எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்? எத்தனை பணக்கார முதலாளிமார்கள்/வியாபாரிகள் இருக்கிறார்கள்? அது நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காதது.

இருந்தும், தமது செல்வங்களை சமூக நலனுக்காக செலவிடும் அதேவேளையில் சமூகத்திற்காக குரலுயர்த்திய / குரலுயர்த்தும் மர்ஹூம் நளீம் ஹாஜியார், ரிஃபாய் ஹாஜியார் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தனவந்தர்களே இருக்கிறார்கள்.

உள்நாட்டு அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாட்டு‌ மக்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றனர். எம் நாட்டைச் சுற்றி‌ சர்வதேச ரீதியில் ஒரு‌ வலை பின்னப்பட்டு வருவதை அரசியல் நோக்குநர்கள் நன்கறிவார்கள். சுற்றி என்ன நடக்கிறது என்பதையறிய‌ மும்மொழி எழுத்தறிவு முதல் சர்வதேச வர்த்தக அறிவு வரை ஓரளவேனும் அறிந்திருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகளுக்கு விருப்பமிருந்தால் அவர்களை கல்விமான்கள் ஆக்குங்கள், அவர்களுக்கு விருப்பமிருந்தால் அவர்களை வியாபாரிகளாக்குங்கள். மன்னிக்க வேண்டும், “கற்ற” வியாபாரிகளாக்குங்கள். அவர்கள் சூழலுக்கு ஏற்ப தன்னை‌ மாற்றிக் கொள்வார்கள்.

பாடசாலைப் படிப்பினால் ஒரு மாணவன் தன்னைச் சுற்றியிருக்கும் உலகைப் பற்றியும் அதன் நவீன போக்கைப் பற்றியும் அறிந்து கொள்கிறான். இன்றைய காலகட்டத்தில் பாடசாலைக்கு போகாத சிறுவர்கள் கிணற்றுத் தவளைகளாகவே இருப்பார்கள். இன்றைய வர்த்தகமானது உலகமயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள உயர்தர பொருட்களையும் இலங்கையில் இருந்து கொண்டே வாங்கலாம்.

இலங்கையில் நடக்கும் பெரும்பாலான வர்த்தகத்திற்கு மூலப்பொருட்கள் சீனா, பெங்கொக், இந்திய போன்ற‌ பல்வேறு நாடுகளில் இருந்தே கொண்டுவரப்படுகின்றன. மடகாஸ்கர், பெங்கொக், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான மாணிக்க வியாபார உறவு பலம் பொருந்தியதொன்று.

உலக நாடுகள் பற்றியும் அவற்றின் தலைநகரங்கள் முதல் அவற்றின் சிறப்பியல்புகள் வரை அனைத்து விடயங்களும் பாடசாலையில் சொல்லிக்கொடுக்கப் படுகின்றன. உலகின் வர்த்தக ரீதியான தொடர்புகளையும், வர்த்தகம் பற்றிய அறிவையும் முகாமைத்துவம் மற்றும் வரவு செலவுகளைக் கையாளும் விதங்களையும் Commerce and Business Studies இல் சொல்லித்தரப்படுகின்றன.

நடைமுறையில் இருக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுகள், எண்‌ கணித அறிவுகளென பல்வேறுபட்ட விடயங்களுக்கு பாடசாலையிலேயே ஆரம்பப் புள்ளியானது இடப்படுகிறது! அதேபோல் வர்த்தகங்களில் ஈடுபடும் போது பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் நபர்களை சந்திக்க வேண்டி வரும். தமிழ், சிங்கள, ஆங்கில மற்றும் பல மொழியறிவுகளை பாடசாலையிலேயே பெற்றுக் கொள்ள முடிவதால் வர்த்தகங்களில் ஈடுபடுவதும் இலகுவாக இருக்கும்.

அதேபோல், விளையாட்டுத் திறன்களையும் தமது ஆளுமைகளையும் வளர்த்தெடுக்க பாடசாலையானது மிகச்சிறந்த களமாகும். வியாபாரத்தில் தமக்கு கீழ் பலரை முகாமை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மாணவர் தலைவர்களாக ஈடுபட வாய்ப்பு இருப்பதால், அந்த முன்னனுபவமும் கிடைக்கும். O/L அல்லது A/L வரை ஒழுங்காக கற்று தற்போது சிறப்பாக வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களைக் கேட்டுப் பாருங்கள். பாடசாலையில் கற்ற‌ கல்வி அவர்களுக்கு பலவகையில் உபயோகமாகியிருக்கும்.

சமூகம் பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள். உலக நடப்பு பற்றி தெளிவாகத் தெரிந்திருப்பார்கள். வறுமைக் கோட்டில் இருக்கும் மாணவர்கள் தம் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப கல்வியொரு மிகச்சிறந்த ஆயுதமே!! அத்துடன், இலங்கையில் சிறார்கள் O/L வரை கற்பது கட்டாயமாகும். பாடசாலையில் இருந்து இடைநிறுத்துவது ஓர் தண்டனைக்குரிய குற்றமாகும்!

“பாடசாலைக்கு போனால் என்ன? போகாவிட்டால் என்ன? பாடசாலைக்குப் போவதால் என்ன இலாபம் இருக்கிறது? எப்படியும் ஒரு‌ தொழில் செய்யத்தானே போகிறான். அவனுக்கும் படிக்க ஆசையில்லை. நாங்க வற்புறுத்தி என்ன செய்ய!! அவனுக்கும் செலவுக்கு காசு கிடைக்கும் தானே, அவன் விரும்பும் படி ஒரு‌ தொழிலை செய்ய வைப்போம்!!”

என்று கூறிக்கொண்டு திரியும் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். இன்று நான் சந்தித்த அந்த நபரைப் போல் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை ஆதரிப்போரும்‌ ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். முடியுமானால் அவர்களைப் போன்றோருக்கு தெளிவூட்டுங்கள். சிறார்களை வழிகெடாதிருக்க வையுங்கள். உங்கள் ஊரில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை இருந்தால், அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள். படித்த சமூகத்தைக் கட்டியெழுப்புவோம். கல்விமான்களையும், “படித்த” வியாபாரிகளையும், “படித்த” தனவந்தர்களையும் எதிர்காலத்தில் உருவாக்குவோம்.

Ifham Aslam
BSc(Hons) in Physics
MSc in Medical Physics (R)

 

நேற்றொரு சம்பவம்! நண்பர்களுடன் சேர்ந்து நேரம் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எமது ஊரிலுள்ள ஒரு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வது வழமை. நேற்றும் அவ்வாறே காலை ஆறரை மணிக்கெல்லாம் சென்று விட்டோம். ஒன்பதரை…

நேற்றொரு சம்பவம்! நண்பர்களுடன் சேர்ந்து நேரம் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எமது ஊரிலுள்ள ஒரு மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடச் செல்வது வழமை. நேற்றும் அவ்வாறே காலை ஆறரை மணிக்கெல்லாம் சென்று விட்டோம். ஒன்பதரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *