பயணத்தில் கஸர் செய்தல்

  • 26

எவ்வளவு தொலைவு பயணம் செய்தால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழும் சலுகை உண்டு? எத்தனை நாட்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்? தொழுகைகளை எவ்வாறு எந்த தொடரின் அடிப்படையில் தொழ வேண்டும்?

என்பது போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு உண்டு எனவே இப்பதிவு அதை தெளிவுபடுத்தும் என நம்புகின்றேன். ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழலாம். பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம். விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம். அதே போல் மக்ரிப் தொழுகையையும், இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம். அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர், இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்தாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாவுமே தொழ வேண்டும். அஸருடைய நேரத்தில் ளுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழும் போது முதலில் ளுஹரைத் தொழ வேண்டும் அதுபோன்றே இஷாவுடைய நேரத்தில் மஃரிபை சேர்த்து தொழும் போது முதலில் மஃரிபை தொழ வேண்டும். தொழுகையின் தொடர் சரியாக பின்பற்றப்படல் வேண்டும்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழும்போது இரண்டு தொழுகைக்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இகாமத் சொல்ல வேண்டும்.

சூரியன் சாய்வதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 1111)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 1091)

ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாட்களுக்குப் பிரயாணம் செய்தால் கஸ்ர் செய்வோம். அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1080)

இந்த ஹதீஸில் பத்தொன்பது நாட்களுக்கு மேல் முழுமையாகத் தொழுவோம் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாகவே கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூரில் அதிகப்பட்சமாகத் தங்கியது பத்தொன்பது நாட்கள்; அவர்கள் தங்கிய அத்தனை நாட்களிலும் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.

ஹாறூன் ஸஹ்வி

 

எவ்வளவு தொலைவு பயணம் செய்தால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழும் சலுகை உண்டு? எத்தனை நாட்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்? தொழுகைகளை எவ்வாறு எந்த தொடரின் அடிப்படையில் தொழ வேண்டும்? என்பது போன்ற…

எவ்வளவு தொலைவு பயணம் செய்தால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரகத்களாகத் தொழும் சலுகை உண்டு? எத்தனை நாட்கள் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்? தொழுகைகளை எவ்வாறு எந்த தொடரின் அடிப்படையில் தொழ வேண்டும்? என்பது போன்ற…