இரவுகளும் சொல்லுமே ஆயிரம் காவியங்கள்!

  • 14

இரவுகளும் சொல்லுமே ஆயிரம் காவியங்கள்!
தூங்கா பாலகனை
“ஆராரிராரோ” சொல்லித் தாலாட்டும்
தூக்கம் மறந்த அன்னையும் ஒரு காவியம்!

பொறுப்புக்கள் சூழ் வாழ்வதனை‌
நித்தம் எண்ணியே தூங்க மறந்த
தந்தையுமொரு காவியம்!

இளசுகளின் திருமணத்தைத்
தினந்தோறும் பார்த்து
தனக்குமமையாதோ எனக் கண்ணீருடன்
எண்ணவோட்டங்களைப் படரவிட்டுக் கொண்டு
ஓட்டைக் கூரை வழியே
நட்சத்திரங்க ளெண்ணும்
ஏழை வீட்டு கன்னியும் ஓர் காவியம்!

மணமுடித்து குழந்தைகள் பெற்று
கையிலொன்றும் காலிலொன்றுமென
கொஞ்சிக் குலாவ வேண்டிய வயதில்
குடும்பப்பாரமதை தலையி லேற்றி
தலையணையில்
மனப்பாரங்களை யிறக்க முயலும்
நடுத்தர வீட்டு இளைஞனும் ஒரு காவியம்!

வாழ்க்கைப் பயணமதை சிறப்பாக்கி
தனக்காகவும் தன் சமூகத்திற்காகவும் முன்னிற்க
பரீட்சையதனை எதிர்கொள்ளத் தூங்காது
மேசையுடன் தோழமை கொள்ளும்
மாணவர்களும் ஓர் காவியம்!

இருள்சூழ் அறையில்
கையடக்கத் தொலைபேசியால் அடைக்கப்பட்டு
வீணாய் நேரமோடுவதையு‌ மறியாமல்
சமூகவலைத் தளங்களில்
தம்மை யிழக்கும் இளசுகளும் ஓர் காவியம்!

கஷ்டங்கள் பல கடந்து
துரோகிகளின் குத்துக்களை
முதுகில் தினந் தாங்கி
எதிரிகளின் வஞ்சகங்களை சமாளித்து
நாளைய விடியலுக்காய்
விதை போட‌ தலைமேல் சுற்றும்
மின்விசிறியை ஓரக்கண்ணால்
பார்த்துக் கொண்டிருக்கும்
போராளிகள் ஓர் காவியம்!!

நெருங்கிய சொந்தங்களை யிழந்து
கண்முன்னே வாழ்ந்த நினைவலைகளை
கண்ணீருடன் அசைபோட்டு
விக்கலையடக்கித் துயில‌ முனையும்
சொந்தங்களும் ஓர் காவியம்!!

பத்து மாதம் வயிற்றில் சுமந்த தலைப்பிள்ளையை
உயிரைக் கிழிக்கும் பிரசவத்திலே யிழந்த
தாயின் தூங்கா மனமும் ஓர் காவியம்!

மணமுடித்துப் பல ஆண்டுகளாகியும்
குழந்தைப்பேறு இல்லாமல்
சுற்றத்தாரிடம் பேச்சு வாங்கி
குடும்பத்தாரின் நச்சரிப்பு தாங்கி
கட்டிலைச் சுடுகாடாக எண்ணி‌த்
தூக்கம் போகாத தம்பதியினரும் ஓர் காவியம்!!

புருசன் விவாகரத்து வாங்கிக் கைவிட்டுப் போனபின்
தன் மகள்களைக் காத்து ஆளாக்க முனையும்
அத் தாய்ச் சிங்கப் பெண்ணும் ஓர் காவியம்!

வீடுவாசல் விட்டு குடும்பத்திற்காய்
உழைக்கத் தம்மைத் தியாகம் செய்து
ஒவ்வொரு இரவும் வீட்டெண்ணம் வந்து
தூக்கமின்றி தவிக்கும்
அவ் வீராதி வீரர்களும் ஓர் காவியம்!

நடந்து திரியக் கால்கள் இருந்தும்
பார்த்து ரசிக்கக் கண்கள் இருந்தும்
உண்டு களிக்க வாய் இருந்தும்
வைத்தியரின் சொல்லுக்கிணங்க
எல்லாமடக்கிக் கொண்டு
தூங்க முடியா மரணவேதனை யனுபவிக்கும்
நோயாளிகளும் ஓர் காவியம்!!

பாசம் பொழிந்து கஷ்டம் மறந்து
உன் உறக்கம் துறந்து ஆளாக்கிய
பிள்ளைகளின் வரவை யெதிர்பார்த்து
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும்
முதியோர் இல்லத்து கண்ணியவான்களும் ஓர் காவியம்!

இக் காவியங்கள் யாவும் எண்ணிலடங்கா
எழுத எழுத சொல்லிலடங்கா
கண்ணை மூடியதும்
தூக்கம் செல்லும் பாக்கியவானெனில்
நீ இறைவனைத் துதி செய்!
அடுத்தவர்களின் கண்ணீர்கள் யாவும் மறந்து
தூக்கக் கலக்கம் நிறைந்திட துவா செய்!

Ifham Aslam
B.Sc (hons) in Physics
MSc in Medical Physics(R)

இரவுகளும் சொல்லுமே ஆயிரம் காவியங்கள்! தூங்கா பாலகனை “ஆராரிராரோ” சொல்லித் தாலாட்டும் தூக்கம் மறந்த அன்னையும் ஒரு காவியம்! பொறுப்புக்கள் சூழ் வாழ்வதனை‌ நித்தம் எண்ணியே தூங்க மறந்த தந்தையுமொரு காவியம்! இளசுகளின் திருமணத்தைத்…

இரவுகளும் சொல்லுமே ஆயிரம் காவியங்கள்! தூங்கா பாலகனை “ஆராரிராரோ” சொல்லித் தாலாட்டும் தூக்கம் மறந்த அன்னையும் ஒரு காவியம்! பொறுப்புக்கள் சூழ் வாழ்வதனை‌ நித்தம் எண்ணியே தூங்க மறந்த தந்தையுமொரு காவியம்! இளசுகளின் திருமணத்தைத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *