குரங்கு மனசு பாகம் 60

  • 16

உண்மையில் தன் இந்தப் பயணத்தில் தன்னவளுக்கு துளியும் உடன்பாடில்லையென அதீகிற்கு நன்றாகத் தெரியும். “நான் உம்மாக்கிட்ட போய் வரட்டா?” என்று கேட்டதும் அவள் வதனம் எந்தளவு மாறிப் போனது என்பதை அவன் நன்கு உணர்ந்து கொண்டான். என்றாலும் மனைவியா? தாயா? என்ற நிலையில் குழம்பிப் போயிருந்தவன் அகம் திடீரென இருதரப்புக்கும் சம அந்தஸ்து கொடுக்க சர்மியின் பிரசவ வேதனையைக் கண்ணால் கண்டதும் ஒரு காரணம் தான்.

ஆம் தன் தாயும் தன்னை இவ்வுலகுக்கு ஒருத்தனாய் பெற்று, ஆளாக்க எந்தளவு சிரத்தை கொண்டிருப்பாள் என்பதனை அப்பொழுது தான் அவனுக்கு ஊகிக்க முடியுமாயிருந்தது. அதன் பிற்பாடு அவன் சிந்தனைகள் வேறு திசையில் பயணிக்க, உண்மையில் தனக்காக இறுதிவரை போராடியவள் தன்னை ஈன்றவளே என்பதில் உறுதி கொண்டான். “நீங்க எனக்கு தேவயில்ல” என வாய் கூசாமல் சர்மி சொன்ன அப்பொழுது, உயிரே பிரிந்திடும் வலியைக் கண்டவன் அந்நேரம் தனக்கான ஒரே ஆற்றுப்படுத்தலாய் இருந்த அன்னையவளை அப்புறப் படுத்தயது பிழை தானே?

அதீகின் தாய் வாஹிதா சற்றும் இலகாமல் சர்மி விடயத்தில் குரங்குப்பிடி பிடிக்க, மகனின் விருப்புக்கு இணங்கி அவள் வீட்டுக்கே போய் திருமணப் பேச்சுப் போட்டு அவமானப்பட்டு வந்ததல்லவா காரணம்? வெறும் ஆட்டோ டிரைவர் என ஒதுக்கியவனை இப்பொழுது அந்த மாமிக்காரிக்கு பிடித்துப் போக, தன் மகன் கைநிறைய சம்பாதிப்பதே அடிப்படையென்று வாஹிதா சிந்திக்க மாட்டாளா என்ன?

இப்பொழுது மனைவி, பிள்ளையோடு வீட்டுக்கு வந்து மன்னிப்புக் கேட்டு ஏற்றுக்கொள்ளச் சொன்னால் தாக்கப்பட்ட உள்ளம் தாங்கிக் கொள்ளுமா? என்றாலும் தான் அவசரப்பட்டு திட்டி அனுப்பி விட்டேனோ என்ற எண்ணம் தான் வாஹிதாவுக்கு. அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்கிறது. மருமகளை விட்டு, மகனை பிரித்துப் போடாமல் தன் ஆத்மா சாந்தியடையாது என்பது போன்ற கல்மனம் வாஹிதாவின் தரப்பிலும் பிழை தான். ஒரு அழகான கூட்டை உடைத்துப் போட நினைப்பதா பெற்றவளுக்கு அழகு? மகன் மீது பொறிந்து விழுந்ததால் தன் இத்தீய எண்ணம் கைகூடாது போய்விடுமோ என்ற சலனத்தில் இருந்தவளுக்கு இனி எல்லாம் தனக்காகவே என்பது போல் அமைந்தது அதீகின் திடீர் வருகை.

“உம்மா…”

“என்னடா? உம்மாவே வேணாம்னு சொல்லி, கட்டின பொம்புளயோட இங்கிருந்து போனியே? திரும்ப எதுக்கு இந்த உம்மா? சொல்லுடா? நான் உனக்கு முழுமையா தேவல்லாம போயிட்டன்ல?”

“அப்புடி இல்லமா.. உங்கக் கூட கடுமையா பேசிட்டுப் போய் என்னால ரொம்ப கஷ்டமா இருந்திச்சுமா. அதுதான் மன்னிப்பு கேட்டு போக வந்தன்.”

“நான் உன்ன பெத்தவள் டா? என் மனசு உன்ன ஒதுக்கி வெக்க சொல்லல்ல அதீக்…” அந்த வார்த்தையை எதிர்பார்க்காதவன், ஆனந்த உச்சத்தில் தாயை நோக்க,

“நீ எனக்கு உலகம் டா. உனக்காக உன் பொண்டாட்டி வீட்டில போய் அவமானப்பட்டு வந்தனே மறந்துட்டியா? சர்மி மேல எனக்கு விருப்பு இல்லாம இருந்திருந்தா அப்புடி ஒரு காரியம் பண்ணி இருப்பனா? ஆனா அந்த நேரம் அவள் நீ வேணும்னு சொன்னாளா? சொல்லு…”

“உம்மா அதுக்கு ரீசன் இருக்கு” தன்னவளை விட்டுக்கொடுக்கவில்லை அவனும்.

“ஓஹ்! எல்லாத்துக்கும் நியாயம் வெச்சிட்டுத் தான் இருப்பாங்க, ஆனா நீ செஞ்சது தப்பு அதீக்” அவன் பேசவில்லை. வாய்மூடி நின்றான்.

“நீ வெளிநாட்டுல இருந்து நாடு வாரன்னு சொன்னப்போ, என் புள்ள என்கிட்ட வரப்போகுதுன்னு ஊரு எல்லாம் ஊர்வலம் போனன்டா. உனக்கு பிடிச்சதெல்லாம் பார்த்துப் பார்த்து சமச்சி வெச்சன். உன் முகம் பார்க்க ஆவலா இருந்த என்கத இளவுகாத்த கிளியா போயிட்டே அதீக். உன் தம்பி உம்மா நாநா கலியாணம் செஞ்சிட்டாறுன்னு கதறினப்போ பெத்த மனசு பொறுக்கல்லடா. நீ வருவாய் வருவாய்னு இருந்த நான், என்புள்ள என்ன விட்டு நிரந்தரமா இன்னொருத்திக்கு, அதுவும் நான் கடுகளவும் விரும்பாதவள் கூட மெரேஜ் பண்ணிப்பான்னு நம்பல்லடா… நான் நம்பல்ல” அதீகின் கண்கள் குளமாக ஓடிச்சென்று தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“எல்லாம் விதிப்படி நடந்து முடிஞ்சிருச்சி மா. இனியாவது சர்மி ய ஏத்துக்க ஏலுமே?”

“நான் உசுரோட இருக்குற வர அது நடக்காது அதீக். நீ போ… போய் உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா இரி…”

“நான் அதுக்காக இங்கவரல்லம்மா. எனக்கு சர்மி எந்தளவு முக்கியமோ நீங்களும் அப்புடி தான் மா…”

“அப்போ இன்னக்கி இந்த உம்மாக் கூட தங்குவியா?”

எந்த மறுப்பும் இன்றி, தன்னவள் குறித்த சிந்தனையே இல்லாமல் சரியென தலையாட்டியவனை எண்ணி உச்சி குளிர்ந்தவள் அகம் சர்மியின் அழிவு காலம் குறித்து சிந்திக்கலாவிட்டு.

கதை தொடரும்…
Aathifa Ashraf

உண்மையில் தன் இந்தப் பயணத்தில் தன்னவளுக்கு துளியும் உடன்பாடில்லையென அதீகிற்கு நன்றாகத் தெரியும். “நான் உம்மாக்கிட்ட போய் வரட்டா?” என்று கேட்டதும் அவள் வதனம் எந்தளவு மாறிப் போனது என்பதை அவன் நன்கு உணர்ந்து…

உண்மையில் தன் இந்தப் பயணத்தில் தன்னவளுக்கு துளியும் உடன்பாடில்லையென அதீகிற்கு நன்றாகத் தெரியும். “நான் உம்மாக்கிட்ட போய் வரட்டா?” என்று கேட்டதும் அவள் வதனம் எந்தளவு மாறிப் போனது என்பதை அவன் நன்கு உணர்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *