உலக நாகரிக வளர்ச்சியின் முன்னோடிகள்…

  • 163

நூல் கடந்த ஒரு சிறு வாசிப்பு

உலக வரலாற்றின் போக்கில் கிழக்குலகிற்கும் மேற்குலகிற்கும் இடையில் வரலாற்று வேர் கொண்ட போராட்டமும் முரண்பாடும் தொடர்ந்தும் நிலவி வந்துள்ளது. அதன் வளர்ச்சியடைந்த, திட்டமிடப்பட்ட வடிவமாக அது இஸ்லாமிய உலகிற்கும் மேற்குலகிற்கும் இடையிலான முறுகலாக முரண்பாடாக மோதலாக வடிவெடுத்துள்ளது. வடிவமைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் குரூரமான நேரடி விளைவுகளாக இஸ்லாமிய அறிஞர்களின் புலமைத்துவ, அறிவு ஜீவிதம் ததும்பும் காத்திரமான அறிவியல் பங்களிப்புக்களை புறக்கணித்து, புதைத்து, மூடுண்டசெய்து இருட்டடிப்புக்கும் இழுபறிக்கும் உள்ளாக்கி இஸ்லாத்தையும் அதன் முன்னோடிகளையும் இல்லாமலாக்கி எதுவுமே இயலாதவர்களாக ஆக்கி ஐரோப்பாவை மட்டும் புலமைத்துவத்தின் துருவமாக சிகரமாக ஆக்குவதுதான் இதுகாலவரை நிகழ்ந்து வந்துள்ளது.

இவை தவிர இஸ்லாமிய முதுசங்களை. அறிவுப்பாரம்பரிய கருவூலங்களை கடத்திச்சென்றும் மொழிமாற்றம் செய்தும் தமது பாரம்பரிய பெருமைகளைப்புகுத்தியும் புகுந்து விளையாடியும் கைவிளையாடல்களை செய்தும் உலகிற்கு புதுவடிவம் கொடுத்துக்கொடுத்து தாமே அறிவின் காவலாளிகளாகவும் காத்திரமான பங்காளிகளாகவும் காட்டியிருப்பதும் கட்டமைக்கப்பட்டிருப்பதும் கவலையான கசப்பான நிகழ்வுகள் தான்.

உலக வரலாற்றில், அறிவுத்துறை வரலாற்றின் நீட்சியில் மத்தியகாலத்தில் ஐரோப்பா இருண்ட யுகத்தில் புதையுண்டு கிடந்த போது உலகிற்கு அறிவொளி பாய்ச்சி புதுத்தெம்புடன் சுற்றவும் சுழலவும் மக்கள் சுகமாக வாழவும் பங்களித்தவர்கள் முஸ்லிம்கள். ஒரே நேரத்தில் பல்துறை விற்பன்னர்களாக, கைதேர்ந்த நிபுணர்களாக, ஆய்வாளர்களாக கண்டு பிடிப்பாளர்காக, பன்முக தளங்களில் பணியாற்றியவர்கள், பங்களித்தவர்கள் முஸ்லிம் புலமையாளர்களே.

இது மேற்குலக நூல்களின் பக்கங்களில் இருந்து தற்துணிவுடன் தாராளமாக தணிக்கை செய்யப்பட பக்கங்கள். ஆனால் இன்னும் சில நியாயமான கீழைத்தேய ஆய்வாளர்களின் பனுவல்களில் பக்கம் பக்கமாக பன்னெடும் காலமாக வாசிக்கக்கூடியதாக உள்ள உண்மைகள்.

உலகின் நாகரிக வளர்ச்சியில், அதன் நீண்ட வரலாற்றுப்போக்கில், செழிப்பான முடிவுறா பாதையில், பயணத்தில், விருத்தி நிலையில், ஐரோப்பாவின் கணிசமான செல்வாக்கை மிகைப்படுத்தும் வாதம் EUROCENTRISM. இதன்படி ஐரோப்பா உட்பட அமேரிக்கா சகிதம் ஐரோப்பியமயமான நாடுகளே அறிவுத்துறை, நாகரிக வளர்ச்சியின் முதுகெலும்பு. இங்குதான் அதன் தலைமையகம் உள்ளது. இங்கிருந்தே அதன் மிச்ச சொச்சங்கள் ஏனைய பின்தங்கிய நாடுகளுக்கு மிகவும் மெதுவாக பரவின என்பதே இந்த சிந்தனையின் மையப்பொருள்.

ஆனால் இந்த ஐரோப்பிய மையவாதம் என்பது போலியானது. இடையில் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது. வரலாற்றை திரிபு படுத்தவும் ஐரோப்பாவின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி மிகைப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இதனை மூன்றாம் மண்டல நாடுகளின் சிந்தனையாளர்கள் ஆய்வாளர்கள் கடுமையாக மறுத்து கண்டனம் தெரிவித்து நிராகரிக்கின்றனர். விமர்சிக்கின்றனர்.

வரலாற்றில் இதனோடு தொடர்பான இன்னொரு துன்பியல் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதுதான் இந்த ஐரோப்பிய மையவாதத்தை எதிர்த்த அதன் நாகரிக பண்பாட்டு? பரவலை தடுத்த ஏனைய குழுமங்களின் கலாசாரங்களும் பண்பாடுகளும் நாகரிக விழுமியங்களும் பாரம்பரியங்களும் மிகவும் குரூரமாக காட்டேரித்தனமாக சிதிலங்கள் சுவடுகள் கூட மிச்சம் வைக்காமல் அழிதொழிக்கப்பட்டன.

உண்மையில் ஐரோப்பிய அறிவெழுச்சிக்குப்பின்னால் இருந்த கிரேக்க சிந்தனையின் தாக்கம், முஸ்லிம் அறிஞர்களின் பங்களிப்பு ,எகிப்தின் கறுப்பின மக்களின் தாக்கம் போன்றவை குறித்த தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளன.

முஸ்லிம் அறிஞர்கள் முன்னைய நூற்றாண்டுகளில் கண்டுபிடித்த உண்மைகளை கண்டறியவும் அத்தகைய செல்வ வளங்களை சுரண்டி பிழைத்து ஏப்பம் விடவும் தமது நாடுகளையும் அந்த நிலைக்கு கொண்டு வரவும் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு ஏனைய நாடுகளில் ஊடுருவி தமது கிறிஸ்தவ பிரசாரத்தையும் மேற்கொண்டு அந்த நாடுகளின் சகலத்திலும் ஊடுருவி மூக்கை நுழைவிக்க வைத்து அந்தந்த நாடுகளில் அடிமைத்துவத்தை புகுத்தி விளையாடி மகிழ்ந்தது தான் மிச்சம்.

இந்த வரலாற்றுண்மைகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு வரும் சூழலில் தான் இஸ்லாமிய உலகம் கண்ட விற்பன்னர்களின் வரலாற்றுப்பக்கங்களை, பங்களிப்புகளை ஒரு துளியளவாவது மீளவாசிக்கவும் மீட்டவும் நினைவூட்டவும் போதிக்கவும் ஒரு சந்தர்ப்பத்தை பாதிஹ் நிறுவன மாணவச்செல்வங்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

“உலக நாகரிக வளர்ச்சியின் முன்னோடிகள்” எனும் தலைப்பில் ஒரு சிறு, ஆனால் மிகவும் கனதியான காத்திரமான எளிமையான நூலை வாசக வட்டத்திற்கு விட்டுள்ளனர். இவர்களின் இந்த கன்னி முயற்சி பாராட்டத்தக்கது.

ஆய்வு மரபும் வாசிப்பு கலாசாரமும் பண்பாடும் அருக, சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கிற்காக மட்டும் தமது ஒட்டு மொத்த வாழ்வையும் தொலைத்து புதைத்துள்ள இளவல்களுக்கு இவர்கள் ஓர் எளிய எடுத்துக்காட்டு.

உலகிற்கு உலகை அறிமுகம் செய்தவர்கள வரிசையில் ஒரு சில முக்கிய வரலாற்று பிரபலங்களே இங்கு கண்முன் வந்து செல்கின்றனர். கோப்பியை அறிமுகம் செய்தது தொட்டு அல்ஜிப்ரா சமன்பாட்டை அறிமுகம் செய்த அல் குவாரிஸ்மி, பாடசாலை கட்டமைப்பை உருவாக்கிய ஓர் பெண் ஆளுமை பாத்திமா அல் பிஹ்ரி, சமூகவியலின் உண்மை ஸ்தாபகர் முகத்திமா பிரபலம் இப்னு கல்தூண், புகைப்படத்துறைக்கு அடிகோலிய இப்னு ஹைஸம், குருதிச்சுற்றோட்டத்தை கண்டுபிடித்த இப்னு நபீஸ், ஆகாய விமானத்தை கண்டு பிடித்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என நீண்டு செல்லும் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அறிவியல் முதுசங்களின் பக்கங்கள் எம் கண் முன்னால் நிழலாடுகின்றன.

கணித மற்றும் வானியல் துறைக்கும் இதர வேறுபட்ட துறைகளுக்கும் அரும்பணியாற்றிய அல் பிரூணி, குறித்த தகவல்கள் அற்புதம்.

நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட மொரோக்கொவை சேர்ந்த சர்வதேச தேச சஞ்சாரி இப்னு பதூதா பற்றிய குறிப்புகள் அருமையானவை. (இப்னு பதூதா குறித்த வேறுபட்ட சுவாரஷ்யமான நியாயமான பார்வையை s.ராமகிருஷ்ணன் அவர்களது கோடுகள் இல்லாத வரைபடம் எனும் அற்புதமான நூலில் வாசிக்கலாம்).

சமூகவியலுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி நாகரிக கட்டமைப்பு ஒன்றின் தோற்றம், உச்சம், சரிவு, வீழ்ச்சி நிலை குறித்து அபாரமாக எழுதீர்த்த இப்னு கல்தூண் குறித்தும் உள்ளவை குறிப்பிடத்தக்கது. அவரது எல்லையற்ற படைப்பான பென்னம்பெரிய முகத்திமா குறித்து ஒரு சிறிய அறிமுகம் முகத்திமாவில் உள்நுழைய விரும்புவோருக்கு ஓர் எளிய குறிப்பாக உள்ளது.

இப்னு ஹைதம் குறித்த அறிமுகம், பல்துறை பங்களிப்புகள் குறித்து பேசும் அனைத்தும் ஐரோப்பாவிடம் காணப்பட்ட அனைத்தும் இப்னு ஹைதமிடம் கடன் வாங்கியவை என்பதை உணர்த்துகின்றது.

நவீன இரசாயனவியலை கட்டமைத்து வளர்த்து விட அடிகோலிய இப்னு ஹைய்யான் இன்றைய இரசாயனவியல் மாணவர்கள், ஆய்வாளர்கள்,வாசகர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை.

தாவரவியல் துறையில் கால் பதித்த இப்னுல் பைத்தார் குறித்த தகவல்கள் அருமையானவை. அவரது கண்டுபிடிப்புகளான மூலிகைகள் குறித்து இன்றைய நவீன மருத்துவ உலகு மீளவும் சிந்திக்க வேண்டும். அதன் தாத்பரியங்களை உணர வேண்டும்.

அப்பாசிய நிர்வாகத்தின் பொற்காலமாக விளங்கிய காலகட்டத்தில் அல் குவாரிஸ்மி எந்தளவு அற்புதமாக செயற்பட்டுள்ளார். ஆய்வுகளை மேட்கொண்டுள்ளார், அதற்கான அரச அனுசரணை கிடைத்துள்ளது என்பதனை அடுத்த பக்கங்களில் கண்டுகொள்ளலாம்.

அடுத்து பல்துறை அறிஞரான இமாம் ராசியின் மருத்துவ துறை மற்றும் இதர துறை பங்களிப்புகள் உள்ளன. அடுத்து கவிஞகராக மட்டுமே உலகம் அறிந்து வைத்துள்ள உமர் கையாமின் பன்முக ஆளுமை குறித்து ஓர் சிறு அலசல் இடம்பெற்றுள்ளது .

ஆக காலத்தின் சகடவோட்டத்தில் முஸ்லிம்கள் அவர்களது செல்வாக்கை இழந்துள்ள நிலையில் முஸ்லிம்கள் தமது வரலாற்று பெருமைகளை அறியாமல் உலகை ஆளும் மேற்கிடம் தஞ்சமடைந்து மேற்கிடம் புருவமுயர்த்தி அவர்களுக்கு புகழாரம் பெருமைகள் பாடும் காலத்தில் இந்த சிறு முயற்சி பாராட்டத்தக்கது.

இது நூல் குறித்தும் அதற்கு மேலாகவும் இலேசான எனது குறிப்புகள் மட்டுமே.

Bisthamy Ahamed

நூல் கடந்த ஒரு சிறு வாசிப்பு உலக வரலாற்றின் போக்கில் கிழக்குலகிற்கும் மேற்குலகிற்கும் இடையில் வரலாற்று வேர் கொண்ட போராட்டமும் முரண்பாடும் தொடர்ந்தும் நிலவி வந்துள்ளது. அதன் வளர்ச்சியடைந்த, திட்டமிடப்பட்ட வடிவமாக அது இஸ்லாமிய…

நூல் கடந்த ஒரு சிறு வாசிப்பு உலக வரலாற்றின் போக்கில் கிழக்குலகிற்கும் மேற்குலகிற்கும் இடையில் வரலாற்று வேர் கொண்ட போராட்டமும் முரண்பாடும் தொடர்ந்தும் நிலவி வந்துள்ளது. அதன் வளர்ச்சியடைந்த, திட்டமிடப்பட்ட வடிவமாக அது இஸ்லாமிய…

One thought on “உலக நாகரிக வளர்ச்சியின் முன்னோடிகள்…

  1. Pingback: scooter vegas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *