வெறிச்சோடிப் போன மஸ்ஜித்கள்

வெறிச்சோடிப் போன மஸ்ஜித்கள்

இணை துணையில்லா
இறையோனின் இல்லமதில்
மறை வேதமுரைத்து
மறையோனைத் தொழுத
மங்காத பொழுதுகள்
மறைந்து விட்டன சின்னாட்களுக்கு

ஒற்றையைத் தவிர்த்து
ஒற்றுமையைப் பறைசாற்றி
ஒன்றாய்க் கூடிய ஜமாஅத்கள்
நின்று விட்டன
காலவரையறை இன்றியே

இரவு பகலாய் மக்களின்
எண்ணற்ற வரவுகளால்
அரவங்கள் குடி கொண்ட
அல்லாஹ்வின் மாளிகை
தாழிடப்பட்டு ஆளின்றி போனது

சதா கேட்கும் அதானொலி
செவிகளுக்கூட்டிய உற்சாகத்தால்
நவ்வியென துள்ளிக் குதித்து
பள்ளி நோக்கிய பாதங்கள்
இன்று ஏங்குகின்றன
நின்று தொழுத
கூட்டுத் தொழுகைக்காய்

உடைந்த உள்ளத்துடனும்
மடை திறந்த விழிகளுடனும்
படைத்தோனிடம் இரு கரமேந்துகிறேன்

மஸ்ஜித் பிரவேச தடைக்காய்
பிரசன்னமான பிரச்சினைக்கு
விடை கொடு யா ரப்பே!

நொடிந்து போன இதயங்களில்
படிந்து கிடக்கும்
பாவக் கரைகளை நீக்கி
கொடிய நோய் விட்டும்
அடியார்கள் எம்மை
பாதுகாத்திடு யா ரப்பே!

ILMA ANEES
SEUSL
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்