உயிர் கொடுத்து, உயிர்களைக் காப்பாற்ற முனைந்தவன்!

  • 18

Dr.Li Wenliang.

கொரோனா வைரஸை இனங்கண்ட  டாக்டரின் 40 நாட்கள்

“நீ என்ன வேலை செய்து விட்டாய்??”

“மருத்துவ அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் எவ்வாறு வெளியிடுவாய்??”

“பார், உன்னால் எமது வைத்தியசாலைக்கு எவ்வளவு அவமானம்!”

“வீணாக வதந்திகளைப் பரப்பி, ஏன் சமூகத்தைக் குழப்புகிறாய்!”

வைத்திய மேலதிகாரியின் காரசாரமான வார்த்தைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் வைத்தியர் லீ!!

‘சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி, மக்களைக் குழப்பியதாக’ குற்றஞ்சாட்டப்பட்டு, அடுத்த நாளே போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்!

“நீங்கள் செய்த செயலுக்கான தண்டனை என்னவென்று தெரியுமா??”

“மக்களுக்குப் பயம் காட்டும் வகையில் வதந்திகளைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று தெரியுமா??”

பொலிசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமின்றி, அமைதியாகவே இருந்தார் மருத்துவர் லீ!!

“இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று எழுதிக் கொடுத்து, கையொப்பமிட்டு விட்டுச் செல்லுங்கள்! இதேபோல் மீண்டும் நடைபெற்றால், உம்மீது வழக்குத் தொடர வேண்டி வரும் ஜாக்கிரதை!!!

எல்லாவற்றிற்கும் ‘ஆமா சாமி’ போட்டு விட்டு, மீண்டும் மருத்துவமனையை நோக்கிச் சென்றார், வைத்தியர் லீ வழக்கம் போல தன் சேவைகளைத் தொடர ஆரம்பித்தார். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். அவ்வாறே ஓர் நோயாளியிற்கு சிகிச்சையளிக்கும் போது, அந் நோயாளியிடம் புதிரான ஒரு சில நோய்அறிகுறிகள் தெரிந்தன. “இந் நோய் அறிகுறிகளுக்கும், சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும் நோயிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையே!!” குழம்பிப் போனார் ‘லீ’.

மனதில் கலக்கத்துடனேயே அன்றைய சிகிச்சைகளின் பின்னர் வீட்டுக்குச் சென்றார். அடுத்த நாள் ‘லீ’யிற்கு தொடர்ச்சியான இருமல். அதற்கடுத்த நாள் அனல் பறக்கும் காய்ச்சல். ‘லீ’யிற்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. “தான் அன்று சிகிச்சையளித்த நோயாளியிடம் இருந்து தனக்கு புதிதாய் ஓர் நோய் தொற்றியிருக்கக் கூடும்” என அனுமானித்தார்.

உடனே ஒரு ஹோட்டல் அறையைப் பதிவு செய்து, தன்னிடமிருந்து தன் குடும்பத்திற்கு நோய் தொற்றாதிருக்க ஹோட்டல் அறையையில் தங்கி தன்னைத் தனிமைப்படுத்தினார். நிலைமை மேலும் தீவிரமடைய, இரண்டு நாட்களின் பின்னர், தான் சேவை புரியும் மருத்துவமனையிலே நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். ‘லீ’யை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இடம் மாற்றினர். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்தார்! என்ன நோயென்று வைத்தியர்களால் இனங்கான முடியவில்லை. ‘லீ’யிற்கு கடுமையான காய்ச்சலுடன், மூச்சுத் திணறலும் அதிகமாயின.

‘லீ’யிற்குத் தெரியும் தனக்குத் தொற்றியிருப்பது, உலகையே சில வருடங்களுக்கு முன்னர் ஆட்டிப் படைத்த “ஸார்ஸ்” (SARS) வைரஸை ஒத்த வகையான ஏதோவொரு வைரஸென்று. இதைப் பற்றித் தெளிவுபடுத்த முற்பட்ட போது தானே, வைத்திய மேலதிகாரியிடம் கடுமையாக ஏச்சுப் பட்டதும், பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுக்க வேண்டி வந்ததும், எண்ணங்களில் தன் அன்பு மனைவியும், அருமை மகனும் தான் இருந்தனர். போதாக்குறைக்கு தன் மனைவி இரண்டாம் பிள்ளையைக் கருவில் சுமந்து கொண்டிருந்தார். எண்ணங்கள் அலை பாய, தன் வாழ்க்கையையே மாற்றிப் போட்ட அந்த கறுப்பு நாள் கண்முன்னே வந்து சென்றது.

கட்டிலில் சாய்ந்தவாறே பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை அசை போட ஆரம்பிக்கிறார், “டாக்டர் லீ வென்லியாங் (Dr. Li Wenliang)”.

கடந்த 2019 டிசம்பர் 30 இல், வழக்கம் போல தனது மருத்துவ சேவையை, சீனாவிலுள்ள, “வுஹான் மத்திய வைத்தியசாலையில் (Wuhan Central Hospital)” வழங்கிக் கொண்டிருந்தார், டாக்டர் லீ. ஒரு நோயாளியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்த போது “ஸார்ஸ் (SARS)” எனும் வைரஸினால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. விழிப்படைந்த லீ, உடனே அன்றைய நாளில் சிகிச்சை பெற சமூகமளித்த நோயாளிகளின் பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்த போது, அதிர்ச்சிக்குள்ளாகி, ஒரு கணம் ஆடிப் போனார்.

வுஹானில் உள்ள “ஹுவனான் கடலுணவுச் சந்தை (Huanan Seafood Market)” இல் பணிபுரியும் ஏழு பேருக்கு ‘ஸார்ஸ்’ வைரஸ் தொற்றியுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டன. “ஸார்ஸ்” ஆனது 2003 இல் சீனாவில் பரவிய ஓர் வைரஸ் வகையாகும். இது மனிதர்கள் முதல் பாலூட்டிகளான வவ்வால்கள் வரை பரவக்கூடியது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டிருந்தது.

‘அது மீண்டும் பரவ ஆரம்பித்துவிட்டதா?” எனும் பயம் வைத்தியர் ‘லீ’யை ஆட்டிப் படைக்க, துரிதமாக அனைவருக்கும் இதைப்பற்றி விழிப்புணர்வு வழங்க நினைத்தார். தனது மருத்துவக் கல்லூரித் தோழர்களைக் கொண்டிருக்கும் சமூகவலையத்தள குழுமமொன்றில், இந்தத் தகவல்களை வெளியிட்டார். சந்தேகத்திற்கிடமான நோயாளிகளின் பரிசோதனை அறிக்கைகளையும் வெளியிட்டு, அனைத்து மருத்துவர்களையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டினார். விசயம் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. மருத்துவர்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரினதும் காதுகளுக்கு எட்டியது. அனைவரும் பதற்றமடைய ஆரம்பித்தனர்.

“சீனப் புதுவருடம் (Chinese New year)” இனைக் கொண்டாட உலகமெங்கும் உள்ள சீனர்கள் சீனாவிற்கு வருகை தந்திருந்தனர். சீன அரசாங்கம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, இப் பாரதூரமான விடயம் பற்றிக் கரிசனை கொள்ளவில்லை. அரசாங்கமோ, புதிய வைரஸ் பற்றிய தகவல்களை மறுத்து அறிக்கைகளை வெளியிட்டது. சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளை அழித்துப் போட்டது. வைரஸ் பற்றி செய்தி பரப்புவோரை கைது செய்ய முன்வந்தது. இவ்விடயம் ‘லீ’யின் மேலதிகாரியின் காதில் போய் விழுந்ததும், ‘லீ’யை அழைத்து தாண்டவமாடினார். 2020, ஜனவரி 3 ஆம் திகதி பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டு, “இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன்” என வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்ட பின், மருத்துவமனைக்கு கடமையைத் தொடர அனுப்பப்பட்டார்.

2020, ஜனவரி 8ஆம் திகதியே குறித்த நோயாளி மூலம் ‘லீ’ யிற்கு வைரஸ் தொற்றியது. அரசாங்கம் என்றோ விழித்திருந்தால், தனக்கு இந்த நிலை வந்திருக்குமா எனக் கவலையுடன் கட்டிலில் சாய்ந்திருந்தார், மருத்துவர் லீ. இந்த வைரஸானது, வுஹான் மாகாணத்தில் தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது. இது “ஸார்ஸ்” வைரஸ் வகையைச் சாராத, ஓர் புதிய வகையான வைரஸென தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலமும், ஆராய்ச்சிகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஒரு மனிதன் மூலம் இன்னொரு மனிதனுக்குத் தொற்றக் கூடியதெனவும் அறியப்பட்டது. இதையறியாது, தகுந்த முன்னெச்சரிக்கை இன்றி ‘லீ’ யைப் போல பல வைத்தியர்களும், சுகாதார அதிகாரிகளும் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிருந்தனர். இவ் வைரஸுக்கு “Covid19” எனப் பெயரிடப்பட்டது. தினமும் “Covid19” இனால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, ஜனவரி 20 ஆம் திகதியே சீனா அரசு அவசர கால நிலையை அமுலுக்குக் கொண்டு வந்தது.

வைத்தியர் ‘லீ’யிற்கு பல தடவைகள் பரிசோதனை நடத்தப்பட்ட போதும், “Covid19” தொற்றியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், ஜனவரி 30 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கையில், தனக்கு “Covid19” தொற்றியதை அறிந்து கொண்டார், லீ. Covid19 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்ததால், குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸிற்கு அழைக்கப்பட்டது பற்றியும், பொலிஸாரிடம் எழுதிக் கொடுத்த வாக்குமூலத்தின் பிரதியையும் தனது சமூகவலையத்தள பக்கத்தில் பதிவு செய்தார். அத்துடன், தனக்கு Covid19 தொற்றியுள்ளதையும் பதிந்தார்.

உலகமே கொதித்தெழும்பியது. வைத்தியர் ‘லீ’யிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பல குரல்கள் எழுந்தன. உலக மக்களைக் காக்க முனைந்த நிஜ ஹீரோவென பாராட்டுக்களுடன், பிரார்த்தனைகளும் குவிந்தன. அவரது பேச்சைக் கேட்டிருந்தால், இன்று இவ்வாறான பேரவலம் ஏற்பட்டிருக்காதேயென ஆதங்கப்பட்டனர்.

பெப்ரவரி 4 ஆம் திகதி சீன உயர் நீதிமன்றத்தில் ‘லீ’ மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பரப்பியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கானது, தள்ளுபடி செய்யப்பட்டது. பெப்ரவரி 5 ஆம் திகதி, ‘லீ’யினது நிலைமை மேலும் கவலைக்கிடமாகியது.

அடுத்த நாள் நண்பரொருவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்தார் ‘லீ’. “மூச்செடுப்பது கடினமாக இருப்பதாகவும், ஒட்சிசனின் அளவு குறைந்திருப்பதாகவும்” நண்பரிடம் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கைச் சுவாசம் கொடுக்கப்பட்டது! மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிருந்தனர்.

தான் எத்தனை பேரையோ காப்பாற்றிய அவ்வறையில், முதல் முறையாக தன்னைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழுமியிருந்து போராடுவதைக் கண்டு, நிலையற்ற உலக வாழ்க்கையை நினைத்துச் சிரித்தார். வைத்தியர் ‘லீ’ சுகமடைய, ஆழ்ந்த பிரார்த்தனைகள் உலகெங்கிலும் அரங்கேறின. மக்கள் பதற்றத்துடன் இருந்தனர்!

“‘லீ’ பற்றிய சந்தோசமான செய்திகள் கிடைக்குமா?” என உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் தம் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் ஓர் அதிர்ச்சிகரமான செய்தியொன்று வந்தது, சீனாவின் பிரபல செய்தி நிறுவனமொன்றிலிருந்து, “இரவு 9.30 மணியளவில் மருத்துவர் ‘லீ’ இறந்துவிட்டார்” என்று. இணையத்தள உலகமே அல்லோல கல்லோலப் பட்டது. அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.

நிலைமை இவ்வாறிருக்கும் போது, ‘லீ’ யின் மரணம் பற்றி சீன அரச வலைத்தளங்களில் பதிந்திருந்த பதிவுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டன. பின்னர், வுஹான் மருத்துவனையில் இருந்து ஓர் அறிக்கை வெளியாகியது. வைத்தியர் ‘லீ’ உயிருடன் இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருந்து மீட்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் பிரார்த்தனைகள் ஆரம்பித்தன! மக்களிடையே பதற்றமானது மேலும் மேலும் அதிகரித்தது! 17 மில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தில் நேரலையாக புதிப்பிக்கப்பட்ட தகவலுக்காக (update) காத்திருந்தனர்.

புதியதொரு அறிவிப்பு வந்தது, வுஹான் மருத்துவனையில் இருந்து. “2020 பெப்ரவரி, 7 ஆம் திகதி அதிகாலை 2.58 மணியளவில் டாக்டர் லீ இறையடி சேர்ந்து விட்டார்!”

இறுதியில் மருத்துவர்களின் போராட்டம் தோல்வியிலேயே முடிந்தது. வைத்தியர்களாலேயே இன்னொரு சக வைத்தியரைக் காப்பாற்ற முடியவில்லை. இது தான்‌ உலக வாழ்க்கை. உள்ளக வைத்திய அதிகாரிகள் முதல், உலக சுகாதார அமைப்பு (WHO) வரை அனைவரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.

வுஹான் மக்கள் ‘வுஹான் மத்திய வைத்தியசாலை’யின் முன்னால் மலர்களை வைத்து விட்டு, விசில்களை ஊதிவிட்டு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தனர். வுஹான் நகர மக்கள் தமது வீட்டு விளக்குகளை தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு அணைத்து விட்டு, ஜன்னல்கள் வழியே ஒளிச் சுடர்களை அலை போல் ஆட்டி ஆட்டி மௌன அஞ்சலி செலுத்தினர். ‘லீ’ யின் வலைத்தளப் பதிவில் ஆயிரக்கணக்கானோர் தமது கருத்துக்களையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தனர். இன்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவில் ஒரு வைத்தியராக இருந்து, உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் Covid19 வைரஸை முதன் முதலில் இனங்கண்ட வெகு சிலரில் ஒருவராக இருந்து, சீனாவையே… ஏன், உலகமக்களையே காப்பாற்றும் முகமாக ‘தன் தொழில் பறிபோனாலும் பரவாயில்லை’ யென முடிவெடுத்து Covid19 இற்கு எதிராக போராடிய ஓர் கதாநாயகனாக உலக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், மருத்துவர் லீ வென்லியாங் (Dr.Li Wenliang).

Ifham Aslam
Beruwala
Sri Lanka

Dr.Li Wenliang. கொரோனா வைரஸை இனங்கண்ட  டாக்டரின் 40 நாட்கள் “நீ என்ன வேலை செய்து விட்டாய்??” “மருத்துவ அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் எவ்வாறு வெளியிடுவாய்??” “பார், உன்னால் எமது வைத்தியசாலைக்கு எவ்வளவு அவமானம்!”…

Dr.Li Wenliang. கொரோனா வைரஸை இனங்கண்ட  டாக்டரின் 40 நாட்கள் “நீ என்ன வேலை செய்து விட்டாய்??” “மருத்துவ அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் எவ்வாறு வெளியிடுவாய்??” “பார், உன்னால் எமது வைத்தியசாலைக்கு எவ்வளவு அவமானம்!”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *