தென்மாகாண முஸ்லிம்களது பரவல்

0 Comments

தென்மாகாணமானது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும்.தென்மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை மிகவும் பரந்த நிலப்பரப்பில் சிதறலாக வாழும் முதண்மை சிறுபாண்மை இனமாகும். தென்மாகாண மேற்கின் ஆரம்பப் புள்ளியான பென்தோட்டை துவக்கம் கிழக்கிலே இறுதிப் புள்ளியாகிய கிரிந்தை வரையில் பரந்த நிலப்பரப்பில் வாழ்கின்றனர்.

 காலி மாவட்டத்தை பொறுத்தவரை பென்தோட்டை, துந்துவை, அஹுங்கல்லை, பலப்பிடிய,.பனாபிடிய, மற்றும் காலி மாநகரை சூழவுள்ள கிந்தோட்டை, தடல்ல, நாவின்ன, ஹிரும்புரை, கட்டுகொடை போன்ற பிரதேசங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவிலும், சில இடங்களில் மிகவும் திரளாகவும் வாழ்கின்றனர். இதை விடுத்து காலி மாவட்டத்தின் சில உட்புற பிரதேசங்களிலும் அண்மைக் காலங்களில் இஸ்லாத்தை தழுவிய தோட்டப்பகுதி மக்களும் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காலி மாவட்டம் போலவே மாத்தறை மாவட்டத்திலும் மிகவும் சிதறலாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இங்கு வெலிகம, ஹொரகொடை, போர்வை, மீயெல்லை, புஹூல்வெல்லை, மாத்தறை, கந்தரை, திக்குவெல்லை, கிரிந்த போன்ற இடங்களில் முஸ்லிம்கள் சிதறலாக வாழ்கின்றனர். காலி மாவட்டம் போன்றே மாத்தறை மாவட்டத்திலும் மாவட்டத்தின் உட்புற பிரதேசமான தெனியாய பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இஸ்லாத்தை தழுவிய தோட்டப்பகுதி மக்களும் அதிகமாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மாத்தறை மாவட்டத்திலேயே தென்மாகாணத்தின் முஸ்லிம் பெரும் பட்டினமாகிய வெலிகமை அமையப்பெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

 காலி ,மாத்தறை மாவட்டத்திற்கு அப்பால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் முஸ்லிம்கள் வாழ்கின்றமை குறிப்பிட்டத்தக்கது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை ஹம்பாந்தோட்டை மாநகர் பிரதேசம், போலானை எனப்படும் அம்பலாந்தோட்டை நகரின் உடபகுதி, கிரிந்தை, பகிகிரி, தங்கால்லை, நளகமை,யங்கஸ்முள்ள, வலஸ்முல்லை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 தென்மாகாண முஸ்லிம்களது கலை கலாசார அம்சம்கள்

தென்மாகாண முஸ்லிம்களின் வாழ்வியலோடு காணப்படும் தமக்கே உரித்தான தனித்துவான பிரித்து நோக்க முடியாத, காலா காலமாக பல தலைமுறை தலைமுறையாக தெரடர்ந்து வருகின்ற கலை கலாசார அம்சம்களை நோக்குமிடத்து பல்வேறுபட்ட கலாசார முதுசங்களை சுமந்து வருகின்றதாகக் காணப்படுகின்றது. அதேநேரம் அன்றாட வாழ்வியலோடு தொடர்புபட்ட பல்வேறு கலை கலாசார அம்சங்கள் மறைந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். அதேநேரம் இங்குள்ள கலை கலாசார பண்பாட்டு அம்சம்களை ஆவணப் படுத்துவற்கான எந்தவொரு முயற்சியும் இதுவரையினிலும் மேற்கொள்ளப்படாதிருத்தலானது கவலைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக இப்பகுதிகளில் மீலாத் விழாக்கள், நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பன பிரதேசவாரியாக பெரும் விழாக்களாக தொடர்ந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அத்தோடு பல்லான்டு காலா காலாமாக பல முஸ்லிம் பெரியார்களின், முன்னோர்களின், ஸஹாபாக்களின் பெயர்களில் கந்தூரி போன்ற வைபவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அத்தோடு மீலாதுன்நபி விழா, கத்னா வைபவங்கள், திருமண, மரண வீடுகளில் இடம்பெருகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் என்பன தனியான ஆய்வினை வேண்டிநிற்பனவாகும். தென்மாகாண முஸ்லிம்களை கலாசார ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரதானமாக மூன்று பரிவினர்களாக வகுத்து நோக்க முடியும்.

1. காலி மாவட்ட முஸ்லிம்கள்
2. மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்
3. ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம்கள்
காலி மாவட்ட முஸ்லிம்கள்: 

காலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மேல் மாகாணத்தின் பாணந்துறை தொட்டு காலி மாநகர் பகுதி வரையிலும் ஒத்த தன்மையுடைய கலை கலாசார அம்சம்களை கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். இவ் ஒத்த தன்மையானது பேச்சு வழக்கு தொட்டு திருமண, மரண வீடுகளில் இடம்பெருகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் வரை நீடித்துக் காணப்படுகின்றது.

மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்:

காலி மாவட்டத்தின் கட்டுகொடை முதற்கொண்டு வெலிகம, திக்குவெல்ல, ஹம்பாந்தோட்டை எல்லையிலுள்ள முஸ்லிம் சிற்றூர்கள் வரையில் ஓர் ஒத்த தன்மையுடைய கலை கலாசார அம்சம்களை கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.எனினும் இவற்றுள் திக்குவெல்ல பகுதிகளில் பேச்சு வழக்கு போன்ற அம்சங்களில் வேறுபட்டதொரு தன்மையை கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம்கள்:

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவையிரண்டையும் விஞ்சியதாக ஓரு வித்தியாசமான இனக்குழுமமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மாத்தறை, காலி மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை சோனகர்காக உள்ள அதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம்கள் மலாய் சமூகத்தினாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் தம்மிடையே மலாய் மொழியை பேசிவருவதுடன் தம்மிடையே பல்வேறு விஷேட பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கின்றனர்.

தென்மாகாண முஸ்லிம்களது வரலாறு:

தென்மாகாண முஸ்லிம்களது வரலாற்றைப் பொறுத்தளவிலும் இருகூறுகளாக பிரித்து நோக்க முடியும். அதாவது இலங்கை சோனகர் மற்றும் மலாய் சமூகத்தினர் எனும் இருபெரும் பிரிவினராக முஸ்லிம்கள் இரண்டு வரலாற்றையுடையவர்களாக காணப்படுகின்றனர்.

இலங்கை சோனகக் குடியேற்றப் பகுதிகளை பொறுத்தவரையில் அவை முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றங்ளாக காணப்படுகின்றதோடு அதனை அண்டி அண்மைக்காலமாக பரவலுற்று சிற்சில உட்பிரதேசங்களுக்கும் நகர்ந்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

இங்குள்ள முஸ்லிம் குடியேற்றப் பகுதிகளுள் காலி, வெலிகம ஆகியன ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொண்மையான வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் குடியேற்றங்ளாக காணப்படுகின்றன. இதனை இப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அறபு, பாரசீக சிலாசனங்கள் மற்றும் மரண நடுகற்களில் (மீஸான் கட்டைகள்) உள்ள தகவல்களின் மூலம் உறுதியாகின்றன. இப்பிரதேசங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொண்மையான வரலாற்றைக் கொண்ட பள்ளிவாயல்கள் காணப்படுவதும் அவதானத்திற்குரியது.

ஹம்பாந்தோட்டை வாழ் மலாய் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் காலனித்துவ காலப்பகுதியில் படைவீராகளாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் ஹம்பாந்தோட்டை மாநகர் பிரதேசம் போன்ற பகுதிகளில் இலங்கை சோனக சமூகத்தோடு இணைந்து வாழ்கின்றமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

இஸ்லாமிய மதச் செல்வாக்கு:

தென்மாகாண முஸ்லிம்களது இஸ்லாமிய மதச் செல்வாக்கை பொறுத்தவரையில், இலங்கை முஸ்லிம் சமூகமானது விஜயனுக்கு முன்னைய அரபுக் குடியேற்றங்களுடன் இணைந்த வரலாற்றையுடையவர்கள் என்றும் இன்னோரு சாராரினால் இலங்கை ஆதிக்குடிகளான நாகருடன் இணைந்த வரலாற்றையுடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினை ஓர் இனக்குழுமம் என்ற கண்ணோட்டத்தில் நோக்கும் போது உமர் (ரலி) யின் காலத்திலேயே இலங்கையில் இஸ்லாம் அடியெடுத்து வைத்தது என்பதனை நாம் வரலாற்றினூடு அறிந்து கொள்ள முடியும் அவ்வகையில் இலங்கையின் ஆதி முஸ்லிம் குடியருப்புக்களாக நோக்கப்படும் காலி, வெலிகம ஆகிய துறைமுக வர்த்தகப் பட்டிணங்களை இக்காலப்பகுதில் இஸ்லாம் அடைந்து விட்டது எனக் குறிப்பிடமுடியும். எனவே தென்மாகாணத்தில் இஸ்லாத்தின் வரலாரானது ஆயிரம் வருடங்களுக்கு மேல் தொன்மையானது எனக் குறிப்பிடமுடியம்.

இலங்கையில் இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னரும் வர்த்தக நடவடிக்கைகளின் காரனமாக இலங்கை முஸ்லிம்கள் தொடர்ந்தும் அரபுநாடுகளுடனும் இஸ்லாமிய கிலாபத்துனும் நேரடித் தொடர்புகளை கொண்டிருந்தனர். இது அவர்களது தூய இஸ்லாமிய வாழ்வில் பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்தியது எனலாம்.மேலும் இங்குள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு அரபுநாட்டு அறிஞர்கள் தொன்று தொட்டு மார்க்கப் பணிகளுக்காக விஜயமளிப்பவர்களாக இருந்தள்ளனர். பெரும்பாலும் இவர்கள்கள் அனைவரும் யெமன் தேசத்தவர்கள் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இதனாலேயே தென்மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் யெமன் தேசத்து மார்க்க அறிஞர்களின் கல்லறைகள் (ஸியாரங்கள்) பல காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் யெமன் தேசத்து மார்க்க அறிஞர்களுக்கிடையே காணப்பட்ட ஸூபிஸ சிந்தனையின் தாக்கமானது இது கால வரையிலுமான தென்மாகாண முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படும் ஸூபிஸ சிந்தனையின் பிரதிபளிப்பாக கொள்ளமுடியும். மேலும் கலாநிதி எம், எம், எம் சுக்ரி அவர்கள் தென்மாகாண முஸ்லிம்களின் பல்வேறுபட்ட கலை கலாசார பண்பாட்டு ரீதியிலான அம்சம்களை யெமனின் ஹழரமெளத் பிரதேசத்தின் கலை கலாசார பண்பாட்டு அம்சம்களோடு ஓப்புநோக்கி அவற்றுள் பலவற்றின் ஒத்த தன்மையினை தனது ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ஹழரமெளத் கலாசார பண்பாட்டு தாக்கம் கூட யெமன் – தென்மாகாண முஸ்லிம் தொடர்புகளை இணைத்துக்காட்டுவதற்கு ஏதுவான புள்ளியாகும். அதேவேளை அன்று யெமனிலிருந்து தரிசித்த அரேபியப் பெரியார்களின் சந்ததிகள் இன்றும் கூட தென்மாகாண பகுதிகளில் “மெளலானாக்கள்” என்ற பெயரில் பெரும் சமூக அந்தஸ்துடன் வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதிலும் குறிப்பாக இவர்களின் பிரசன்னமானது வெலிகம பகுதிகளில் மிகவும் செறிவாக காணப்படுகினறது.

இவ்வளவு பெரும் பாரம்பரியமிக்க பெருமைமிகு யெமன் – தென்மாகாண முஸ்லிம் உறவுகள் 1505ம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகையுடன் தடைப்பட்டுப்போனது. இது தென்மாகாண முஸ்லிம்களை மாத்திரமின்றி முழு இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தமட்டிலும் பெரும் துரதிஷ்டமிக்க கசப்பான வரலாற்றுச் சம்பவமாகும். ஏனெனில் இது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அன்றைய உஸ்மானிய கிலாபத்துடனான நேரடித் தொடர்புகளை முழுமையாக ஓழித்து விட்டதெனக் கூறலாம். இதன் பின்பு 400 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த காலனித்துவ ஆட்சிக்காலப் பகுதியிலே தென்மாகாணம் மாத்திரமின்றி முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் வெளியக முஸ்லிம் தொடர்பு என்ற வகையில் தென்னிந்திய முஸ்லிம்களுடன் மாத்திரமே மட்டுப்டுத்தப்பட்ட அளவுகளில் காணப்பட்டது. இக்காலப் பகுதிகளிலயே கந்தூரி கத்தம் போன்ற சடங்குகள் தென்மாகாண முஸ்லிம் பகுதிகளில் அறிமுகமானதோடு இஸ்லாத்திற்கு ஓவ்வாத தென்னிந்திய இந்து சம்பிரதாய நடைமுறைகள் சிலவும் உட்பகுந்தன. மேலும் இக்காலப் பகுதிகளில் சில சாதகமான அம்சங்களும் இடம்பெற்றமையும் நினைவுறுத்தத் தக்கது. உதாரணத்திற்கு தென்னிந்திய தொடர்புகளின் விளைவாக இங்கு வருகைதந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் வெலிகமையில் இலங்கையின் முதல் மத்ரஸாவாக (மார்க்க அறிவு புகட்டுமிடம்) வரலாறு படைத்துள்ள “பாரி மத்ரஸா” நிறுவப்பட்டமையை குறிப்பிடமுடியும். மேலும் அவர்களால் அறிமுகப்படுத்தபட்ட “அரூஸியத்துல் காதிரிய்யா தரீக்கா”வானது மக்கள் மத்தியில் ஆன்மீகப் பயிற்சியைப் பரப்புவற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டது எனலாம்.அத்தோடு இப்பகுதிகளில் செயல்படும் மத, கலாசார அமைப்புக்களைப் பொறுத்தளவிலும் முன்னர் குறிப்பிட்டது போலவே தரீக்காகளே மக்களிடத்தில் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றிருந்தன. அவ்வகையில் “ ஷாதுலிய்யா, காதிரிய்யா, ரிபாயிய்யா, ஸைபுல்லாஹ்” போன்ற இன்னும் பல தரீக்காகளையும் குறிப்பிடமுடியும்.

அதேநேரம் 1980களின் பின்னரான காலப்பகுதியை தொடர்ந்தே இஸ்லாமிய இயக்கங்களான  தப்லீக் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்துஸ் ஸலாமா போன்ற அமைப்புகள் மக்கள் மத்தியில் உள்நுழைவை மேற்கொள்கின்றன. இவற்றுள் தப்லீக் ஜமாஅத், தௌஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் மக்கள் மத்தியில் பரவலான செல்வாக்கினை பெற்றுவிட்டமை கவனத்திற்குரியது. இவை தென்மாகாண முஸ்லிம்கள் மத்தியில்பல்வேறு பகைமைகளுக்கு இட்டுச்சென்றமையும் துரதிஷ்டமிக்க கசப்பான உண்மையாகும். எனினும் அண்மைக்காலமாக ஜமாஅத்துஸ் ஸலாமா, மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய இஸ்லாத்தின் பூரணத்துவத்தையும் சமநிலை சிந்தனையையும் கொண்டுள்ள அமைப்புகள் தென்மாகாண முஸ்லிம் பகுதிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருவது நம்பிக்கை கீற்றுகளை ஏற்படுத்துகிறது. அத்தோடு இலங்கையின் ஏனைய பாகங்களைப் போலவே இப்பகுதிகளிலும் “ ஷாபிஈ மத்ஹப் ” பின்பற்றப்படுகின்றது.

தென்மாகாண முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

இத்தகைய அறிவுப் பின்னணியோடு தென்மாகாண முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் அலசுவது பொறுத்தமானதாகும். அவ்வகையில் தென்மாகாண முஸ்லிம் சமூகமானது கல்வி, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளையம் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றது. பின்வருவன தென்மாகாண முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சில அறிமுகங்களை மாத்திரம் வழங்கக்கூடியதாக இருக்கும். பிரச்சினைகளுக்கான தீர்வுகள், முன்மொழிவுகள் என்பன தனித்ததோர் ஆய்வினை வேண்டி நிற்பவையாகும்.

கல்வி ரீதியிலான பிரச்சினைகள்:

முதலாவதாக நாம் கல்வி ரீதியிலான பிரச்சினையினை அணுகுவோமாயின், முஸ்லிம்களுள் பெரும்பாலானவர்கள்; சுமார் 60% ற்கும் மேலானவர்கள் தமிழ் மொழியை ஊடகமொழியாகக் கொண்டு தம் கல்வியைப் பெறுவதோடு ஏறக்குறைய 40%ஐ அண்மித்த தொகையினர் சிங்கள மொழியை ஊடகமொழியாகக் கொண்டு தம் கல்வியைப் பெறுகின்றனர். தமிழ் மொழியை ஊடகமொழியாகக் கொண்ட பாடசாலைகளில் பாரிய வளப்பற்றாக்குறை காணப்படுவது அவதானத்திற்குரியதாகும். அத்தோடு முழு தென்மாகாணத்திலும், ஏனைய தென்மாகாண சிங்களப் பாடசாலைகளோடு ஒப்பிடுகையில் ஓரளவுக்காவது வசதிகள் நிவர்த்திக்கப்பட்டு சமமான வளப்பகிர்வுடன் உள்ளன என்று கூறத்தக்க ஒன்றிரண்டு முஸ்லிம் பாடசாலைகளே உள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும். மேலும் பெரும்பாண்மையான சிங்களப் பாடசாலைகளோடு ஒப்பிடுகையில் தகுதிமிக்க ஆசிரியர்களின் தேவை முஸ்லிம் பாடசாலைகளில் நிலவுகின்றது. இதனால் தமிழ் மொழி மூல உயர்தர வகுப்பு மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்காக பேருவளை, கொழும்பு போன்ற தூர பகுதிகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். மேலும் உயர்தரத்தில் கணிதம், உயிரியல் பிரிவுகளில் கற்க விரும்பும் மாணவர்கள் மேல்மாகாணம், கிழக்குமாகாணம் போன்ற தூர பகுதிகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இவைகளால் கலாசார சீரழிவுளுக்கு உட்படுவதோடு தகுதியுள்ள திறமைமிகு பொருளாதார வசதி குறைந்த மாணவர்கள் தமது கல்வி வாழ்க்கைக்கு முற்றபுள்ளியிட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தநிலை ஏற்படுகின்றமை மிகவும் துரதிஷ்டமிகு நிலையாகும்.

இத்தகைய பின்னணியில், நாட்டில் உயர்கல்வியை மேற்கொள்ளும் போது Z–ஸ்கோர் புள்ளி முறைமை பின்பற்றப்படுவதனால் தென்மாகாண முஸ்லிம்கள் மாணவர்கள் உயர் பெறுபேற்றை பெற்றிருப்பினும் கூட பல்கலைகழக வாய்ப்பக்களை பெறுவது மிகவும் அரிதாகவே உள்ளது. இந்நிலை தென்மாகாணத்தில் பிரபல சிங்கள மொழிமூலப் பாடசாலைகள் உள்ளதனால், அம்மொழியை மாத்திரம் கருத்திற் கொண்டு கல்விவசதி கூடிய மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதனாலேயே ஏற்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் சிங்கள மொழியை ஊடகமொழியாகக் கொண்டு தம் கல்வியைப் பெறும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதனால் ஏற்படுகின்ற சமூகப் பிரச்சினைகள் பாரிய பிரதிகூலங்கைளை ஏற்படுத்தியுள்ளன. இவற்றுள் இன்று தென்மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மொழியை அறவே அறிந்திராத முஸ்லிம் சந்ததியொன்று உருவாகியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். மேலும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவிகள் சிங்கள பெரும்பாண்மையின மாணவர்களுடன் கலந்து பழகவேண்டி ஏற்படுவதனால் தம் கலாசார தனித்துவங்களை இழக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் கலப்புத் திருமணங்கள் ஏற்பட்டு மதம்மாறும் நிலைமைகளும் ஏற்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் மாத்திரம் கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் சுமார் 20 முஸ்லிம் மாணவிகள் மதம்மாறியுள்ளதாக களத்தகவல்கள் உறுதிப்படுத்துகினறன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் நிலைமை இதனைவிட கவலைக்குரியதாகவே உள்ளது.

அரசியல் ரீதியிலான பிரச்சினைகள்:

கல்வி ரீதியிலான பிரச்சினைகள் இவ்வாறிருக்க தேசிய மற்றும் மாகாண, மாவட்ட அரசியல் பிரதிநதிகள் இன்றிய அரசியல் அநாதைகளான ஓர் அவலநிலையை தென்மாகாண முஸ்லிம்கள் எதிர்கொள்கின்றனர். இன்று நாட்டில் விருப்பு வாக்கு முறைமை காணப்படும் விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுயிலுள்ள இந்நாட்டிலே, தென்மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம் வாக்காளர் தொகையையும் எடுத்து நோக்குகின்ற போது ஒன்றிணைந்து வாக்காளிப்பதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வோர் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநதிகளை பெற்றுக்கொள்ளும் வாக்குப்பலம் காணப்படுன்றது. எனினும் துரதிஷ்டவசமாக பாராளுமன்ற பிரதிநதியை மாத்திரமின்றி ஒரு மாகாணசபை பிரதிநதியையாவது பெற்றுக்கொள்ள திராணியற்று அரசியலிலும் அநாதரவாக தென்மாகாண முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. இவை தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டிய பள்ளிவாசல் நிர்வாகங்கள் போன்ற சமூக நிறுவனங்கள் பாராமுகமாக இருக்கின்றமை கவலைக்குரியதாக உள்ளது. மேலும் இவை ஊர்ச் சண்டைகளை தீர்த்துவைக்கும் இடங்களாகவோ அல்லது ஊர்ச் சண்டைகள் நிகழும் இடங்களாவோ காணப்படுகின்றமை இன்னும் கவலையளிப்பதாக உள்ளது.

மேலும் இம்மாகாணத்தில் வாழும் முதன்மை சிறுபாண்மை இனமாக வாழும் முஸ்லிம்கள் பொருளாதாரம், கலாசாரம், பண்பாடு என இன்னும் பலகையான சவால்களையும் எதிர்கொணடு வருகின்றனர். பொதுவாக முஸ்லிம்களை பொறுத்தவரை வியாபாரத்தையே தம் பொருளாதார ஆதாராமாக கொன்டு ஜீவிக்கின்றனர்.தற்போது இலங்கையெங்கும் மேலேழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவாதமானது முஸ்லிம் பொருளாதாரத்தை முறித்து நலிவுக்குள்ளாக்கும் வேலைத்திட்டங்களை மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் மேற்கொண்டு வருகின்றது. உதாரனமாக அண்மையில் “ வீரவதான ” எனும் சிங்கள அமைப்பானது வெலிகமை பிரதேசங்களில் முஸ்லிம்களிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனும் தொனியிலமைந்த துண்டுப் பிரசுரங்களை சிங்கள மக்கள் மத்தியில் விநியோகித்தது. அத்தோடு சிங்கள சமூகத்தை சார்ந்த சிறு வியாபாரிகளிடம் முஸ்லிம் மொத்த வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடாது என்று ஒரு இரகசியக் கூட்டமொன்றில் அறிவுறுத்தப்பட்டதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனமுறுகல் நிலைமைகள் தோன்றுகின்றபோது முஸ்லிம் பொருளாதார நிலையங்கள் தாக்கப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதம் விளைவிக்கப்படுவதும், அது செயற்படுத்தப்படும் முறைகளை ஆராயும் போது அதுதிட்டமிடப்பட்ட ஒரு குழுவினரால் மறைமுக நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்கொள்ளப்படும் செயல்களென புலனாகின்றமை மிகவும் அவதானத்திற்குரியது. அதேபோன்று முஸ்லிம் தனவந்த வீடுகளில் கொள்ளையிடப்படல், முஸ்லிம் தனவந்தர்களிடம் அச்சுருத்தி கப்பம் பெறல் போன்றனவும் பல தடவைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று தென்மாகாண முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் அப்பிரதேசமெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இளைஞர்களுள் போதைவஸ்துக்கு அடிமையானோர் தொகை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றவிட்டமை மிகவும் அவதானத்திற்குரியதோடு கவலையளிப்பதாகவும் உள்ளது. இது கல்வியில் ஏற்பட்ட விரக்தியின் உச்சநிலையாகவும் கருதலாம். ஏனெனில் கல்வியில் ஏற்பட்ட அசாதாரனத்தின் காரணமாக உயர்கல்வி வாய்ப்பை பெறமுடியாமல் போனமையின் காரணமாக தொழிற் சந்தையில் இவர்களின் நிலை கேள்விக்குறியாகின்றது. எனவே இவர்களின் எதிரகாலம் பற்றிய நம்பிக்கை சூன்யமாகின்றது. எனவே இந்நிலைமை கூட இவர்களின் நடத்தை பிரல்வுக்கு காரணமாய் அமைகின்றது எனலாம். மறுபுறம் நவீன தொடர்பு சாதனங்களின் தாக்கமானது இப்பகுதி முஸ்லிம் இளைஞர்களை சமூக நோய்களின் பால் இட்டுச்சென்றுள்ளது எனலாம். இந்நிலை படித்த முஸ்லிம் இளைஞர்கள் முதல் பாமர முஸ்லிம் இளைஞர்கள் வரை ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் ஆட்கொன்டிருப்பது தென்மாகாண முஸ்லிம்களின் எதிர்கால இருப்பை கேள்விக்குட்படுத்துவதோடு வேதனை அளிப்பதாகவும் உள்ளது.

இதேவேளை தென்மாகாண முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனறிகள் நன்கு திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றமையும் அபாயகரமான விளைவுகளைப் பெற்றுத்தரக்கூடியதாகவும் உள்ளது.

நிர்வாக ரீதியாக தென்மாகாண முஸ்லிம்கள் அநியாயம் இழைக்கப்பட்டு, அது தொடர்பில் எவ்விதக் கவனமுமற்று இருப்பதும் அவதானத்திற்குறியது. ஏனெனில் தென்மாகாணம் மழுவதுமே நிர்வாக எல்லைகள் பிரிக்கப்படும் போது எவ்வெவ் வகைகளில் அவர்களது வாக்குப்பலத்தை, அபிவிருத்தித் திட்ட நலன்களை மழுங்கடித்து சிதறடிக்க முடியுமோ, அவ்வவ் வகைகளில் திட்டமிடப்பட்ட எல்லைப் பிரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. உதாரனமாக மாத்தறை மாவட்டத்தின் சிறிய முஸ்லிம் கிராமமான கந்தறை, போர்வை மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை இழைக்கப்படுகின்ற அநியாயங்களுக்குச் சான்றாகும்.

இவ்வாறாக ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான வரலாற்றைக் கொண்ட தென்மாகாண முஸ்லிம் சமூகம் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமது தனித்துவத்தை பேணிக்கொண்டு ஓரளவுக்காவது போராட்ட வாழ்க்கை நடாத்துகின்றமை பாரட்டுகளோடு நினைவு கூறத்தக்கது. எனினும் இது தொடர்பில் மக்களை அறிவூட்டி இலங்கையின் ஏணைய முஸ்லிம்கள் போன்று புத்தெழுச்சி பெற்ற சமூகமாக மாற்றுவதற்கு, பிரதேசவாரியான அறிவுஜீவிகளும், இஸ்லாமிய அமைப்பகளும் கடும்உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும். தென்மாகாணம் தான் கலாநிதி பதியுதீன், கலாநிதி போன்ற புத்திஜீவிகளை வழங்கியது. எனினும் அச்சமூகம் அத்தோடு நிறுத்திக்கொண்டதும், தனது வளர்ச்சியிலே குன்றி விட்டதும் கவலையுடன் நினைவுகூரத்தக்கது.எது எவ்வாறிருப்பினும் இச்சிறு ஆய்வானது பல குறைபாடுகளை கொண்டிருப்பினும், அவர்களது பிரச்சினைகள் தொடர்பான பொதுவான சிறு அறிமுகத்தை தந்திருக்கும்.இது எமக்கு தென்மாகாண முஸ்லிம் சமூக முன்னேற்றப்படிகளில் ஓர் உந்துதலை தரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

– Siaaf Muhammedh –

Leave a Reply

%d bloggers like this: