இன்று இரு நகர்களுக்கிடையிலான அனுபவம்

இன்று அருகருகே உள்ள இரு நகர்களுக்கிடையே சில தேவைகள் நிமித்தம் பிரயாணிக்க நேர்ந்தது. கடுபொதை நகரைக் கடந்து சென்ற நேரம் மக்கள் பொதுவாக அனைவரும் போன்று முகக் கவசத்துடன் கடைகளுக்கும் வங்கிச் சேவைக்குமாக 1மீற்றர் இடைவெளியில் வரிசையாக நின்று செல்வதை அவதானிக்க முடிந்தது. இதனை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் இருந்து வழிநடாத்துவதையும் அவதானிக்க முடிந்தது. சிறிய பாமஸிகளுக்குக் கூட மக்கள் நீண்ட வரிசையில் நின்று செல்வதை அவதானிக்க முடிந்தது.

அதே நேரம் அதற்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் செறிவாக வாழும் நகரில் கடைத் தெருவிலும் பாதையிலும் மக்கள் நெரிசலாக நடமாடுவதையும் பொருட்கள் வாங்குவதற்காக முண்டயடித்துச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது. அங்கு முகக் கவசம் அணியாத பலரும் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்தது. பொருட்கள் வாங்குவதற்காகச் செல்கின்ற போது மிகுந்த சங்கடமாக இருந்தது. தூர விலகிச் சென்றாலும் சனம் வந்து வந்து நெரிசலடைவதை தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் சன நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்காக அனுப்பப்பட்ட பொலிஸார் இருவர் நகரத்தினைத் தாண்டி ஒரு ஒழுங்கையில் ஏதும் காரியமின்றி நின்று கொண்டு இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

ஒரு பாமஸிக்கு மருந்து எடுப்பதற்காக உள் நுழைந்தேன். போகும் போது ஒருவர்தான் உள்ளே இருந்தார். நான் உள் நுழைந்து சிறு நொடியில் சனம் வந்து நிறைந்து விட்டது. முன்னால் வந்தவரையும் தாண்டிக் கொண்டு எங்கள் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு மருந்து வாங்குவதற்கு பிரயத்தனப்படுவதை அவதானிக்க முடிந்தது. சற்று விலகி நின்று மருந்து வாங்கிக் கொண்டு மிகுந்த சிரமத்தில் வெளியே வந்தேன். வெளியே பொலிஸார் மாஸ்க் போடாதவர்களை நகரத்திலிருந்து அகன்று செல்லுமாறு ஒலிபெருக்கிகளில் அறிவித்துக் கொண்டிருந்தனர். மாஸ்க் போடாத பலர் தலைக் கவசம் அணியாமல் பொலிஸில் பிடிபடாமல் வந்து மறைவது போன்று மறைவதையும் மாஸ்க் தேடி பாமஸி உள்ளே ஓடி வருவதையும் அவதானிக்க முடிந்தது.

இது யாரையும் குறை காண்பதற்கான பதிவு அல்ல. இந்த நோயின் தொற்று மிகவும் ஆபத்தானது. அதனை ஒழிப்பதில் எமது பங்களிப்பு மிகவும் அவசியமானது. இதில் கவனம் எடுப்பது ஒரு மார்க்கக் கடமை என்பதனை கருத்திற் கொள்ளுங்கள் என்பதனை சுட்டிக்காட்டவே இதனை பதிகிறேன். பிரதேசத்தின் பள்ளிவாயில்கள், இளைஞர் அமைப்புப்புக்கள் இதில் கவனம் செலுத்தி நகரை ஒழுங்குபடுத்துவது அனைவருக்கும் பாதுகாப்பானது. அது அனைவரதும் கடமையும் கூட.

இப்படியான ஒரு ஆலோசனையை கடந்த டெங்கு பரவும் காலப்பகுதுியில் சில சமூக முக்கியஸ்த்தர்களிடம் சொன்ன போது. எங்களது ஊரில் டெங்கு இல்லை. வெளி ஊரில் இருந்துதான் வந்துள்ளது என பொருப்பற்ற பதில் கிடைத்தது. இந்த விடயத்திலும் அவ்வாறு நடந்து ஆபத்தில் சிக்க வேண்டாம். இந்த நோயின் பரவல் பெருக்கல் விகித்திலேயே செல்கிறது. இதன் பாரதூரத்தை நாம் விளங்க எடுப்போம். நாம் கவனயீனமாக இருப்பது எம்மை மாத்திரமல்ல முழு சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கக் கூடியது.

எனவே, பொருட்கள் வாங்குவதற்காக,

  1. தொலைபேசி வாயிலாக ஓடர் எடுத்து பொருட்களை வீடுகளுக்கு அல்லது பொதி பண்ணிய பின்னர் வந்து வாங்கிச் செல்ல வழியமைக்கலாம்.
  2. வட்சப் ஊடாக குழுக்கள் அமைத்து ஓடர் எடுத்து வீடுகளுக்கு ஒப்படைக்கலாம்.
  3. வீடுகளுக்கான மெபைல் சேர்விஸ் ஒழுங்கு பண்ணலாம்.

இதனை சுகாதரத் துறை மற்றும் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து பிரதேச பள்ளிவாயில்கள் சமூக, இளைஞர் அமைப்புக்கள் ஒழுங்கு பண்ணுவதற்கு முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஒழுங்குகள் குறித்து,

  1. பள்ளிவாயில்களின் ஒலிபெருக்கிகளை பாவித்து மக்களை விழிப்பூட்ட நடவடிக்கை எடுப்பது சிறந்தது.
  2. அதே நேரம் ஊரடங்கு இல்லாத நிலைகளில் பொருட்கள் வாங்க வரும் போது, பள்ளிவாயிலைப் பயன்படுத்தி அடிக்கடி நினைவுபடுத்தல்.
  3. நடமாடும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி நகரத்தில் பொருட்கள் வாங்கும் போது ஒழுங்குபடுத்தல்.
  4. ஒழுங்குபடுத்தல் செயற்பாட்டிற்காக ஆட்களை நியமித்தல்.
  5. மாஸ்க்குகளை தயாரித்து இலவசமாக விநியோகித்தல்.
  6. கடைத் தெருவில் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தல்…
  7. அத்தோடு இந்த அவசர நிலமையினால் தொழில்கள், வருமானங்களில் பாதிப்புற்றுள்ளவர்களுக்கான, ஏழைகளுக்கான வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் சிந்திப்பது சிறந்தது.

என இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவசரமாக சிந்திப்பது சிறந்தது.

யாரும் இங்கு சமூகத்தை ஏசும் பதிவுகளை இட வேண்டாம். ஒழுங்குபடுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைத்து நடவடிக்கைகளிற்கான திட்டங்கள், அதன் முன்னேற்றங்கள் குறித்து எழுதவும். இதற்கு நாம் அனைவரும் பொறுப்பானவர்கள். எனது ஒரு பொறுப்பை நான் இங்கு நிறைவேற்றியுள்ளேன்.

எம்.என்.இக்ராம்

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: