வழிதவறிய விழிநீர்

உலகையே ஆட்டிப்படைக்கும் ‘கொரோனா’ வைரஸ் பயங்கரத்தின் சோதனை நீங்கும் வரை ஜமாஅத் தொழுகைகளையும், ஜும்மாவையும் தற்காலிகமாக இடைநிறுத்தக் கோரி பல இஸ்லாமிய சட்ட மன்றங்கள் பத்வா வெளியிட்டன. இது முறையான ஆதராங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாகும். இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அறிஞர்கள் சபைகள் கூட்டிணைந்து வழங்கிய அந்த தீர்ப்பு காத்திரமான மனிதநேயமிக்க ஒரு பத்வாவாகும். இருப்பினும் சில மனிதர்கள் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதே என கண்ணீர் வடிக்கின்றார்கள். இந்த அசாதாரண சூழ்நிலையில் வழங்கப்பட்ட பத்வாவுக்காக வருத்தப்படுகிறார்கள். அறிவுக்கு கொடுக்கும் பங்கைவிட அதிகமாக உணர்ச்சிகளுக்கு கொடுத்து ஆதங்கப்படுகிறார்கள். இந்நிலையில் அவர்களுடைய விழி வழியே வரும் கண்ணீர் வழிதவறியே சிந்துகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. உண்மையில் அவர்களின் அழுகை ஒரு முரண் நகையாகும். அந்தக் கண்ணீர் பார்ப்பதற்கு பரிதாபம் போல வெளியில் தோன்றுகிறது. ஆனால் அர்த்தமற்ற கவலையாக கதை இருக்கிறது.

பள்ளிவாசல்களில் இறை தியானம் செய்ய யாரும் இல்லையே என அவர்கள் அழுகிறார்கள். உயிர்களை காப்பாற்றுவதற்கு தேவையான கருவிகள் இல்லாத மருத்துவமனைகள் குறித்து அழுவதற்கு யாரும் இல்லை!

பெருந்தொகை பணம் செலவழித்து வண்ணக் கோலங்கள் கொண்டு கட்டிய பள்ளிவாசல்கள் பாழாகுதே என அவர்கள் அழுகிறார்கள். ஆனால் எந்த அடிப்படை முதலுதவி கருவிகளும் இல்லாத சுகாதார நிலையங்கள் குறித்து யார் அழுவார்!

பள்ளிவாசல்களை மத்திய தளமாகக் கொண்டு செய்ய வேண்டிய பணிகள், வழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயலிழந்து போயுள்ளதே என அவர்கள் அழுகிறார்கள். ஆனால் அநேகமாக இன்றைய வெள்ளிமேடைப் பேச்சுக்கள் வானத்திற்கு மேலும் பூமிக்கு கீழும் உள்ள வாழ்கையை பற்றி மாத்திரமே போதிக்கிறது. பூமியில் பற்றி எரியும் சமூகப் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் குறித்து பேசுவதற்கு யாரும் இல்லை. காரணம் அதனை மார்க்கமாக பார்ப்பதில்லை. மார்க்கம் என்பது மரணம் சார்ந்தது. தீன் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டும் மார்க்கமல்ல என்ற சிந்தனையை அவர்கள் மக்கள் மனதில் பதிக்கிறார்கள். இதன் விளைவாக இந்த உலமாக்கள் மார்க்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளும் மக்கள் பரம்பரையை உருவாக்குகிறார்கள். அதன் அடுத்த விளைவாக சடவாத சிந்தனை பரவலுக்கு அவர்கள் உடந்தையாக ஆகிவிடுகிறார்கள்.

உண்மையில் பள்ளிவாசல்களில் நிரம்பிவழிய வேண்டிய கனவான்கள், நல்லவர்கள், மக்கள் மனம் வென்ற வீரர்கள் இன்று சிறைக் கூடங்களில் அவலப்படுகிறார்கள். அநியாய ஆட்சியாளர்களுக்கு முன்னால் சத்தியத்தை உரைத்த ஒரே ஒரு காரணத்திற்காக அவர்கள் சிறைப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்காக அழுவதற்கு யாரும் இல்லை.

அவர்கள் எந்த பள்ளிவாசல்களுக்காக அழுகிறார்களோ அந்த பள்ளிகளில் தொழுகைக்கு பிறகு வரண்ட சிந்தனை பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் சில்லறைப் பிரச்சினைகளுக்கான கருத்து வேறுபாடுகள் குறித்துமே பேசுகிறார்கள். பயனில்லாத பைஸான்திய சர்ச்சைகளே செவிக்கு எட்டுகின்றன. மனிதகுலத்திற்கு பயனுள்ள அறிவுசார் விடயங்கள் குறித்து பேசப்படுவதில்லை.

எமது பல்கலைகழகங்களில் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இல்லையே என அவர்கள் அழுவதில்லை. இருந்த மேதைகளும் அவமதிக்கப்பட்டு விரட்டப்பட்டார்களே என்பதற்காக யாரும் கண்ணீர் சிந்துவதில்லை. ஆனால் கொடிய கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை மேற்கிலிருந்து பெறுவதற்கு வரிசையில் முண்டியடிக்கின்றனர்.

இப்படித்தான் அவர்களின் விழிகளில் இருந்து வரும் வழிதவறிய விழிநீர் உள்ளது. சத்தியமாக சொல்லுகிறேன் நான் அத்தகைய பள்ளிவாசல்களுக்காக அழமாட்டேன். காரணம் ‘நீ எங்கிருந்தாலும் தொழுகை நேரம் வந்தால் தொழுகைக்காக எழுந்து நில். பூமி முழுவதும் எனக்கு மஸ்ஜிதாக ஆக்கியருளப்பட்டுள்ளது’ என இறை தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

அவர்கள் போல் எனக்கு போலிக் கண்ணிர் சிந்த முடியாது. ஒரு போதும் அப்படி நான் அழுதவனுமல்ல. காரணம் நான் உமரின் வாரிசு. கஃபாவிற்கு பட்டுச் சேலை கட்டி அழகுபார்க்கலாமே என கூறப்பட்ட போது, மனிநநேயத்தின் தூதுவர் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். ‘ கஃபாவிக்கு ஆடையணிவிப்பதை விட பட்டினியோடு வாழும் முஸ்லிம்களின் வயிற்றை கவனிப்பதே முதன்மையான தேவையாகும்’

முகஸ்துதிக்காக ஒதும் குத்பாக்களுக்காக நான் அழுபவன் அல்ல. ஆனால் இந்த இக்கட்டான பிரச்சினைக்குரிய காலத்தில், அறிவுக்கும் ஆராய்ச்சிக்குமுரிய மத்திய நிலையங்கள் இல்லையே என்று அழுகின்றேன்.

கஃபாவும், மஸ்ஜிதுன் நபவியும் வெறிச்சோடியுள்ளதே என நான் அழுபவனல்ல. காரணம் அந்த மின்பர்கள் அரசியல் பிரசாரத்தின் ஊதுகுழலாக மாறியுள்ளன. அங்கு கருப்பு அரசியலை வெள்ளையாக்கும் மின்பர் மேடைகளே உள்ளன.

எனவே அவர்களுடைய அழுகைக்காக நான் அழபவனல்ல. இந்த இக்கட்டான காலத்தில் எமது உம்மத்தின் அவலநிலைக்காக கண்ணீர் சிந்துகின்றேன்.

அஷ்ஷெய்க் பஷீர் ஹஸன்

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: