நீங்கள் விபச்சாரத்தை நெருங்க வேண்டாம்

இஸ்லாம் பெண்ணுக்கு முக்கியத்துவமளிக்கும் அதே நேரம் அவளை பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்துள்ளது. இருந்தும் இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் மற்றும் வரம்புகளை அறியாத சில ஆண்களும் பெண்களும் தவறான நடைத்தையையும், தகாத தொடர்புகளையும் மனம் விரும்பி செய்வது பாரிய அளிவிக்கு இட்டுச்செல்லும்.

ஒரு பெண் திருமண வயதை எட்டியதும் பொறுப்பானவர்கள் திருமணம் முடித்து வைப்பது கடமை, அதே போல் அத்தாய் விதவையான பின்பு அவளுக்கு மறு திருமண முடிக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் ஆண் பிள்ளைகள் தனது தாயை திருமணம் முடித்து வைக்கவும் அனுமதியுண்டு.

அதிகமான பெண்கள் நல்லவர்களாக இருந்தாலும் இந்த சமூகமும், ஒரு சில நயவஞ்சகர்களும் அவர்கள் மீது வீணாக இட்டுக்கட்டுவது பெரும்பாவத்திற்குரிய செயல் என்பதை மறந்து செயற்படுகின்றனர். இருந்தும் தனிமையில் இருக்கும் சில விதவைப் பெண்கள் பாவத்தை தேடிப்போவதும் அல்லது ஆண்களது மாய வலையில் சிக்குண்டு வாழ்க்கையைத் தொலைப்பதும் பல இடங்களில் குறிப்பாக கிராமப் புறங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நிலவும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

மார்க்கம் அனுமதித்த இரண்டாவது திருமணம் வெறுப்பாக பார்க்கப்படும் நிலை தொடர்வதுடன் கள்ளத் தொடர்புகள் கௌரவமாக சித்தரிக்கப்படும் நிலை சமூக மட்டத்தில் அரங்கேறி வருவது யாவரும் அறிந்த உண்மை.

உண்மையாக ஒரு பெண்ணை திருமணம் முடிக்க விருப்பமிருப்பின் அவளுக்கு பொறுப்பானவர்களை அணுகி அப்பெண்ணை மணந்து கொள்வதே சரியான பொறிமுறையாகும். இதை விடுத்து கள்ளத்தனமாக பேசுவதும், அவளுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக மாய வார்த்தை கூறி அவளை நெருங்குவதும், மொத்தத்தில் தகாத உறவை நாடிச் செல்வதும் (ஏலவே திருமணம் முடித்தவராக இருப்பின்) கல்லெறிந்து கொள்ளும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.

இதன் காரணமாகவே அல்லாஹ் திருமறையில் “நீங்கள் விபச்சாரத்தை நெருங்க வேண்டாம்” என கட்டளையிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. விபச்சாரம் செய்வது ஒரு பக்கமிருக்க அதனை நெருங்கக் கூட வேண்டாம் என்று கட்டளையிடுவதானது அது பெரும்பாவம் மட்டுமல்லாது அதன் விளைவு மிகப்பாரதூரமாகும் ஆகியவற்றை புலப்படுத்துகிறது.

விபச்சாரம் தனிமனித வாழ்விலும், அவனது குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் பாரிய சீரழிவுகளை ஏற்படுத்தவல்லது என்பதனை நிதர்சனமாக காண முடிகிறது. தவறிழைக்க நினைக்கும் ஒவ்வொரு ஆணும் தமது உற்ற சகோதரி, மகள் இவ்வாறு பாவத்திற்கு உட்படுத்தப்படுவதை விரும்புவாரா என்று ஒரு கணம் நினைத்தால் திருந்துவதற்கான ஒரு வழியேனும் கிட்டும், இல்லையேல் அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். நஊதுபில்லாஹ்.

இறைக்கோபத்தை உண்டுபண்ணும் இத்தகைய பெரும்பாவத்தை நினைப்பதைத் தவிர்த்து தனிமையிலுள்ள பெண்களும் பாதுகாப்பாக இருப்பதுடன், ஆண்களும் பெண்களை ஏமாற்றி அவர்களது வாழ்க்கையை குட்டிச்சுவராக்காமல் இஸ்லாமிய ஒழுக்கநெறிகளைப் பேணி நடக்க முயல்வதே உகந்ததாகும்.

அல்லாஹ் அனைவரையும் பித்னாக்களிலிருந்து பாதுகாத்து, நல்லவர்களாக வாழ்ந்து, அவனுச அவனுக்கு விருப்பமான சிறந்த இறுதி முடிவுடன் மரணிக்கும் பேற்றை வழங்குவானாக! ஆமீன்

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: