சமூகம் எங்கே செல்கிறது

  • 11

அரசாங்கம் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகிறது. நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்ற அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது குடிமக்களின் தார்மீகப் பொறுப்பாகும். ஆனால் அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு மற்றும் சட்ட ஒழுங்களுக்கு கட்டுப்படுவது வாஜிபாகும்.

இந்த சட்ட ஒழுங்களை மீறுவது நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும். இஸ்லாமிய சட்டப் பரப்பில் தௌபாவை வேண்டி நிற்கும் பாவமாகும். நாளை மறுமையில் ஈடேற்றம் பெறுவதற்கு பாவ மன்னிப்பு அவசியமாகும்.

காட்டுத்தீ போல பரவும் வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என நாடு அவஸ்தை படும் போது, ஊரில் உள்ள சில மனிதர்கள் ஜும்மாவிற்கும் ஜமாஅத் தொழுகைக்கும் கவலைப் படுகிறார்கள். இந்நிலையில் குர்ஆனினய வழிகாட்டல்களையும், சுன்னாவின் போதனைகளையும் கடைப்பிடித்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்றுவதே முதன்மை தேவையாகும். இது கூட்டுத் தொழுகைக்கான தருணம் அல்ல. நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான தருணம். தொழும் இடம் சிகிச்சை தளமாக மாறும் காலமிது.

இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில், தாம் சார்ந்துள்ள சிந்தனை முகாம்களின் வட்டத்தின் நிழலில் நின்று பிரச்சினையை அணுகாமல் சத்தியம் – அசத்தியம், நீதி – நேர்மை, நன்மை – தீமைகள், உண்மை – பொய் சமூக எழுச்சி – வீழ்ச்சி, சமூக நலன்கள் என்ற விரிந்த அடிப்படையில் நின்று நிதானமாக பிரச்சினைகளை நிறுத்துப் பார்க்கும் போது தான் சரியான நிலைப்பாடுகள் பக்கம் சார்ந்து பயணிக்க முடியும்.

இன்று உலக அரங்கில் நிலவும் போராட்டம் முஸ்லிம்களின் சிந்தனைப் பிரிவுகளுடனான போராட்டம் அல்ல. அழைப்புப் பணியின் வித்தியாசமான அணுகுமுறை முகாம்களுக்கு எதிரான போராட்டமும் அல்ல. அது நேரடியாக இஸ்லாத்திற்கும் அதன் எழுச்சிக்கும் எதிரான போராட்டமாகும். அதனை புரிந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

நுணுக்கமும், சாணக்கியமும் இல்லாத தீர்மானங்கள், முட்டாள் தனமான நிலைப்பாடுகள், கண்மூடித்தனமாக ஒத்தோடும் கமிட்டி உறுப்பினர்கள், நிச்சியமாக முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சோதனையே. இந்த வேளையில் உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடு‌க்கு‌ம் உலமாக்கள் சோதனை மேல் சோதனையாகும்.

இபாதத்கள் பாழாகுதே என கண்ணீர் வடிக்கும் மக்கள் கூட்டம் வழிதவறிய விழிநீரையே வீணாக கொட்டுகிறது. இதற்கு உடந்தையாக உள்ள இமாம்கள் சோதனையாகவும் சுமையாகவும் மாறியுள்ளார்கள். வழிதவறும் இந்த உலமாக்கள் சமூக எழுச்சிப் பயணத்தில் பேரணர்த்தம் மட்டுமல்ல தோல்வியின் நிழலாகவே மதிக்கப்படுகின்றனர். வேதனையை விலை தந்து வாங்கும் இவர்கள் சமூகத்தின் அவமானச் சின்னங்கள்.

வெறும் அறிவு மட்டும் ஒரு ஆலிமுக்கு போதாது. காலம், இடம், சூழல், பொது நலன்கள் போன்ற அடிப்படைகளுக்கு ஏற்ப சட்ட வசனங்களை புரிந்து கொள்ள வேண்டும். புதிய சிந்தனைகளும் தூய எண்ணமும் இறைநாட்டமும் ஒன்று சேரும் போது தான் அறிவு அருளாக மாறும்.

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: துணிமணி இத்துப் போவது போல் சிலரின் உள்ளங்களில் மனனம் செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களும் இத்துப்போகும். அவர்கள் அதனை ஓதுவர்கள். ஆனால் அதற்கு சுவை இருக்காது. ஓதுவதில் ஆர்வவும் இருக்கமாட்டாது. அவர்கள் செம்மறித் தோல் போர்த்திய ஓநாய் உள்ளம் கொண்டவர்கள். (பசுத் தோல் போர்திய புலிகள்) அவர்களின் செயற்பாட்டுகளுக்கு பின்னால் பேராசைதான் இருக்கும். இறை பயம் இருக்காது. குறைகள் விட்டால் சரிசெய்யலாம் என்பர். தவறுகள் செய்தால் அல்லாஹ்வுக்கு நாம் இணைவைப்பதில்லை எனவே எங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பர்.’ (ஆதராம் தீர்மதி 3356, தாரமீ 3251)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தௌபான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நான் எனது சமூகம் குறித்து மிகவுமே பயப்படக் கூடிய விடயம் எனக்குப் பிறகு வரும் வழிகெடுக்கும் இமாம்கள் பற்றியேயாகும்.’ (ஹதீஸ் 1582, ஸில்ஸிலா ஸஹீஹா-அப்லானி (ரஹ்), பா:4, பக்:109)

இத்தகைய சில இமாம்கள், கதீப்மார்கள், தலைவர்கள் அசத்தியத்தை சத்தியமாக கூறும்போது மக்கள் அவர்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாக பொய்யை உண்மை என ஏற்றுக் கொள்வார்கள். சத்தியம் எது அசத்தியம் எது என தெரியாத நிலையில் பொது மக்கள் தடுமாறுவார்கள். இது சமூகத்தில் தோன்றும் மிகப் பெரிய சாபக்கேடு.

இறுதியாக, முன்மாதிரியாக வாழ்வோம். நலமாய் வாழ வழி செய்வோம். ஒரு போதும் மற்றவர்களுக்கு படிப்பினையாக ஆகாமல் காத்துக் கொள்வோம். அல்குர்ஆனில் மற்றவர்களுக்கு படிப்பினையாக எடுத்துக்காட்டப்பட்டவர்கள் அனைவரும் தோல்வி கண்டவர்களே. உதாரணமாக : பிர்அவ்ன், காரூன், ஆத் சமூகம், ஸமூத் சமூகம், லூத் சமூகம், நூஹ் நபியின் சமூகம், நம்ரூத்… இந்த வரிசையில் கொரோனா வைரஸின் பயங்கர ஆபத்தின் போது நாம் மற்றவர்களுக்கு படிப்பினையாக ஆகக்கூடாது. அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். முன்மாதிரியாக இருப்போம். அரசுக்கு ஒத்துழைப்போம். அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு கட்டுப்படுவோம்.

“கட்டுப்படுவதே அவர்களுக்கு மிகவும் உசிதமானது” (சூரா முஹம்மத் 22)

முஹம்மத் பகீஹுத்தீன்

அரசாங்கம் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகிறது. நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்ற அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது குடிமக்களின் தார்மீகப் பொறுப்பாகும். ஆனால் அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு மற்றும் சட்ட ஒழுங்களுக்கு…

அரசாங்கம் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருகிறது. நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்ற அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது குடிமக்களின் தார்மீகப் பொறுப்பாகும். ஆனால் அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு மற்றும் சட்ட ஒழுங்களுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *