யூஸுப் நபியின் பொருளியல் கோட்பாட்டினூடாக  வறுமையை எதிர் கொள்ளல்

  • 10

பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன் இன்று அணு அளவு வைரஸுக்கு பயந்து  வீட்டில் பதுங்கிக் கிடக்கின்றான்.

முதலில் ஊரடங்கு, வீட்டில் இருக்கலாம் என்று சந்தோஷப்பட்டாலும் நாட்கள் கடந்து வாரங்களாக மாறும்போது வருமானங்கள் இன்றி செலவுகள் ஏற்படத்துவங்கும் போதுதான் நாம் பொருளாதார ரீதியாகவும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளோம் என்பதை உணர்ந்தோம். சர்வதேச, உள்நாட்டு மட்டத்தில் கொரோனாவின் பரவலானது பெருக்கல் விருத்தியாக விருத்தியடைவதால் உலகளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தற்போது உற்பத்தி, விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் பல மாதங்களுக்கு உலகளாவிய ரீதியில் இந்நிலமை தொடர்ந்தால். குறைந்த பட்சம் ஓர் மாதத்திற்கு தொடர்ந்தாலும் முதலில் அடிப்படைத் தேவையாக உள்ள உணவில்தான் பஞ்சம் ஏற்படும். அல்லாஹ் இந்த மாதிரி பஞ்சத்தை நமக்கு ஏற்படுத்தக்கூடாது. என்றாலும்  பொருளாதார வீழ்ச்சியை எவ்வாறு எதிர் கொள்வது பற்றி நபி  யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பொருளாதாரக் கோட்பாட்டின்  மூலம் ஓரளவு தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

ஸூரா யூசுப் பின் ஆரம்பத்தில், அஸ்ஸூராவை பற்றி அல்லாஹ் பின்வருமாறு விளக்கம் கொடுக்கின்றான்.

(நபியே!) நிச்சயமாக யூஸுஃபின் சரித்திரத்திலும் அவரது சகோதரர்களின் சரித்திரத்திலும் வினவுகின்றவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 12:7)

இவ்வகையில் இஸ்லாமிய பொருளாதார கோட்பாடு, பாதீட்டுக் கொள்கை, வருமானப் பங்கீட்டுக் கோட்பாடு, நுகர்வுக் கோட்பாடு என இஸ்லாமிய பொருளாதாரம் சார்ந்த விடயங்களை பேசுவோரும் பல முன்னுதாரணங்களை ஸூரா யூசுப்பின் மூலம் முன்வைக்கின்றனர்.

ஸூரா யூஸுப்பில் ​ஏற்படவிருந்த பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி நிலமைகளைப் பற்றி  கூறி அதில் நபி  யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பொருளாதார வளர்ச்சிக் காலத்திற்காக எடுத்த தீர்மானம் பற்றி ​பின்வருமாறு கூறுகிறான்.

(சிறைக்கூடம் சென்று அவன்,) “யூஸுஃபே! உண்மையாளரே கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை – அவற்றை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் பற்றியும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்து உலர்ந்த மற்ற (ஏழு) கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பொருள் என்ன? என்பதைப்) பற்றி நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! என்னை (அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது” (என்று கேட்டார். (அல்குர்ஆன் : 12:46)

அ(தற்க)வர், “தொடர்ந்து வழக்கப்படி (நல்ல விதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள், நீங்கள் அறுவடை செய்வதை – நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத் தவிர – (மற்ற யாவற்றையும்) அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் : 12:47)

“பின்னர், அதற்கப்பால், கடினமான (பஞ்சத்தைக் கொண்ட) ஏழு (ஆண்டுகள்) வரும், நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றிலிருந்து, (பஞ்சமான வருடங்களாகிய) இவைகளுக்காக நீங்கள் (கதிர்களில்) முற்படுத்தி வைத்தவற்றில் குறைவானவற்றைத் தவிர (மற்றதை) அவை தின்றுவிடும். (அல்குர்ஆன் : 12:48)

பின்னர், “அதற்கப்பால் ஒரு வருடம் வரும், அதில் மனிதர்கள் ஏராளமாக மழை பொழிவிக்கப்படுவர், (கனி வர்க்கங்களிளிருந்து அவற்றின் ரஸத்தைப்) பிழிந்து கொண்டுமிருப்பார்கள்” (என்றும் கூறினார்.) (அல்குர்ஆன் : 12:49)

மேற்குறித்த அல்குர்ஆன் வசனங்களை அவதானிக்கையில் நிதி அமைச்சராக செயற்பட முன்வந்த நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் முன்னால் 15 வருடங்கள் பற்றிய முன்னறிவித்தல் கனவு மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

எனவே அவரின் முன்னால் 14 வருடங்களுக்கான பாதீடு அல்லது பட்ஜட் தயாரிக்க வேண்டிய பொறுப்பு காணப்பட்டது. 14 ஆண்டுகளில் முதல் ஏழு ஆண்டுகளும் வளம் நிறைந்த ஆண்டுகளாகவும், இறுதி ஏழு ஆண்டுகளும் பஞ்சமான ஆண்டுகளாகும். இதனை பொருளாதார ரீதியில் முதல் ஏழு ஆண்டுகளையும் பொருளாதார வளர்ச்சிக் காலமாகவும் இறுதி ஏழு ஆண்டுகளையும் பொருளாதார வீழ்ச்சிக் காலமாகவும் இணங்காணலாம்.

பொருளாதார வளர்ச்சிக் காலமென்றால் பூரணமாக வளங்கள் காணப்படும், எனவே புதிய தொழில் முயற்சிகள் உருவாகும். இதனால் வேலைவாய்ப்புக்கள் உருவாகி நிறைதொழில் மட்டத்தை குறித்த நாடு அடையும். நுகர்வை விட உற்பத்திகள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்றுமதி துறையிலும் தடம்பதிக்கலாம். அவ்வாறே மக்களின் சேமிப்பு, முதலீடு, நுகர்வு என்பன உச்ச மட்டத்தில் காணப்படும்.

பொருளாதார வீழ்ச்சிக் காலமென்றால் வளங்களின் பயன்பாடு குறைந்து, உற்பத்திகள் குறைவடைந்து, வேலைவாய்ப்புக்கள் குறைந்து சமூகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும்.  அவ்வாறே நுகர்வு, முதலீடு, சேமிப்பு என்பன குறைவடையும். இந்நிலையில் நுகர்வுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அத்தியாவசிய  உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும்.

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியின் ஊடாக பொருளாதார  வீழ்ச்சியை தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் சிறந்த முதலீடு, சேமிப்புத் திட்டத்தையும் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில்  சிறந்த நுகர்வுத் திட்டத்தையும் கையாள வேண்டும்.

அவ்வகையில் கி.மு 1500களில் வாழ்ந்த நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாழ்ந்த எகிப்தை எடுத்துக் கொண்டால் அங்கு கி.மு 2700 முதல் பிரமிடுகளைக் கட்டும் கட்டிடக்கலை எனும் கைத்தொழில் துறை காணப்பட்டுள்ளது. அடுத்த தொழில்துறையாக விவசாயத்துறை காணப்பட்டுள்ளது. இச்சந்தர்பத்தில் ஸூரா யூசுப்பை தெளிவாக ஆராய்கையில் நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தமது முதலீட்டுத் தீர்மானமாக கைத்தொழில்துறைக்கு பதிலாக விவசாய துறைக்கு முதலீடு செய்து கிடைத்த தானிய உற்பத்தியில் நுகர்வு போக எஞ்சிய பகுதியை மேலதிக வருமானம் பெறும் நோக்கில் ஏற்றுமதி செய்யாமல் நாட்டில் சேமிக்கும் தீர்மானத்தை எடுக்கிறார். இங்கு தானியங்களை நீண்ட காலம் சேமித்து வைக்க அத்தானியங்களை கதிருடன் வைக்குமாறு குறிப்பிடுகின்றார்.

அடுத்தாக பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் நடந்து​​ கொண்ட விதம் பற்றி பின்வருமாறு கூறுகின்றான். இங்கும் அல்- குர்ஆன் வசனங்களை நுணுக்கமாக ஆராயும் போது தம்மிடமிள்ள பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் ஏற்றுமதி செய்யாத ​உணவுப் பொருட்களை பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் ஏற்றுமதி செய்துள்ளார்கள்.  மட்டுமல்லாது உதவியாக வழங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து​ கொள்ள முடியும்.

பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (“மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக்  கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்”  என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 12:88)

நபி யூஸுப் (அ​லைஹிஸ்ஸலாம்) அவர்களின் சகோதரர்கள் கன்ஆன் பிரதேசத்திலிருந்து எகிப்து நோக்கி தம்மிடமுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அதாவது அவற்றை பண்டமாற்றாமாக வழங்கி உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளார்கள்.

அடுத்தகட்டமாக பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் தமது குடிமக்களின் நுகர்வு விடயத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் குறிப்பிட்ட ஒரே அளவை அளந்து கொடுக்கும் தீர்மானத்தை எடுத்தார். இதனூடாக எகிப்து மாத்திரமல்லாது அண்டை நாடுகளுக்கும் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டு மக்களையும் நம்பி வந்த மக்களையும் பஞ்சத்திலிருந்து பாதுகாத்தார்.

அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி: “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள். (அல்குர்ஆன் : 12:63)

அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 12:65)

மேலுள்ள குர் ஆன் வசனங்களை ஆராய்​கையில் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் பொதுமக்களின் நுகர்வை முகாமை செய்ய அரச தலையீட்டுடன் ​உணவுப் பொருட்களை விநியோகம் செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இங்கு அனைவருக்கும் ஒரே அளவு என்ற அடிப்படையில் விநியோகம் செய்துள்ளார்கள். ஒவ்வொரு தனிநபருக்கும் ஓர் மூட்டை தானிய என்ற அடிப்படையில் தேவையுள்ளோருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. என்பதை (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; (12:65) பகுதினூடாக அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அன்று நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தமது பொருளாதாரக் கோட்பாட்டினூடாக பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் பெற்றுக் கொண்ட உற்பத்திகளூடாக பொருளாதார வீழ்ச்சியை முகாமை செய்து வெற்றிகண்டார்.

பொருளாதாரம் என்பது வெறும் சடப்பொருட்களுக்கிடையில் இடம் பெறும் விடயங்கள் அல்ல மாறாக மனிதர்களுக்கிடையில் நடைபெறும் விடயங்களாகும். எனவே முதலில் மனிதநேயப் பண்புகளான உண்மை, நீதி, நேர்மை போன்ற உயர்ந்த பண்பாடுகளை நமது பொருளாதார நடவடிக்கைகளூடாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை நபி யூஸுப் (அ​லைஹிஸ்ஸலாம்) அவர்களின் பொருளாதாரக் கொள்கையின் சில அடிப்படை விடயங்களாகும். தற்போது நடைமுறை விடயங்களுடன் இவற்றை அலசி ஆராய்வோம்.

தற்கால உலக ஒழுங்கமைப்பில் உற்பத்திகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் விவசாயத்துறை, கைத்தொழில்துறை, சேவைத்துறை என வகைப்படுத்தலாம். பொதுவாக பொருளாதாரமொன்றின்  பொருளாதார வளர்ச்சிக்கால தீர்மானமெடுத்தல்கள் இன்று கைத்தொழில் சார்ந்ததாக அல்லது சேவைத்துறை சார்ந்தாக இருக்கும். ஓர் பொருளாதாரம் உணவுத்துறையில் தன்னிறைவு அடையும் போது அவற்றில் உள்ள மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்து, அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கைத்தொழில்துறை​ அல்லது சேவைத்துறைகளில் முதலீடு செய்வதுதான் வழமையான பொருளாதாரங்களின் செயற்பாடாகும். இவ்வாறு அன்று நபி யூஸுப் (அ​லைஹிஸ்ஸலாம்)  அவர்கள் தமது முதலீடுகளை மாற்றும் தீர்மானங்களை எடுக்கவுமில்லை.  மாறாக குறிப்பிட்ட தமது பாதீட்டுத் திட்டத்திற்கமைய விவசாய துறையில் சிறப்புத் தேர்ச்சியடைந்து உற்பத்திகள் இல்லாத பொருளாதார வீழ்ச்சிக் காலத்திலும் தமது சேமிப்பின் கீழ் இருந்த தானியாங்களை ஏற்றுமதி செய்கின்ற நிலமைக்கு தமது பொருளாதாரத்தை  உறுதியடையச் செய்தார்கள்.

ஒரு பொருளாதாரம் தீடிரென ஏற்படும் பொருளாதார மந்தங்களையும் நீண்ட கால பொருளாதார வீழ்ச்சிகளையும்  எதிர் கொள்ள வேண்டுமாயின் அப் பொருளாதாரத்தில் விவசாயத்துறை¸ கைத்தொழில்துறை¸ சேவைத்துறை என்பவற்றில் சம அளவிலான வளப் பங்கீடும்¸ வெளியீடும் காணப்பட வேண்டும். அல்லது விவசாயத்துறைக்கு ஏனைய துறைகளைவிட அதிக வளப்பங்கீடுகளை ஒதுக்க வேண்டும். இதனைத்தான் அன்று நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தமது பொருளாதார திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தினார்கள்.

இன்றைய பொருளாதார யுகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூன்று மாத காலத்திற்குள் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவுள்ளாதாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இந்நிலையில் நாம் உலக உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இலங்கையின் உற்பத்தி கட்டமைப்புகளை அவதானித்தால் உலக உற்பத்தி கட்டமைப்பு விவசாயத்துறை 3%¸ கைத்தொழில் துறை 25%. சேவைத்துறை 65% ஆக காணப்படுகிறது.

இலங்கையின் வளக் கட்டமைப்பு மற்றும்​ பொருளாதாரக் கட்டமைப்பிற்கிடையிலான தொடர்பு எதிரும் புதிருமாகத்தான் காணப்படுகின்றது. அதாவது  இலங்கையானது விவசாயத்துறையில் சிறப்புத் தேர்ச்சியடையும் விதத்தில் பயிர்ச் செய்கைக்கு பொருத்தமான காலநிலை¸ மண்வளம்¸ நிலவளமுள்ள ஓர் நாடாகும். என்றாலும் இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான முதலீட்டுத் திட்டங்கள் சுற்றுலாத்துறை சார்ந்ததாக காணப்படுகிறது. 2018ம் ஆண்டின் நிதியறிக்கைகளின் படி விவசாயத்துறை வெறும் 7% இற்கும் 10% இடையில் காணப்படும் போது¸ கைத்தொழில்துறை 27%¸ சேவைத்துறை 56% ஆகவும் காணப்படுகிறது.

உலக மட்டத்திலும்¸ இலங்கை மட்டத்திலும் வெறும் 10% இற்கும் குறைவாகவே விவசாயத்துறையின் பங்களிப்பு காணப்படுகிறது. இவ்வாறானதொர் நிலையில் தான் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உலகம் முடங்கி சர்வதேச வர்த்தகமும் தடைபட்டு ஒவ்வொரு நாட்டு மக்களும் தத்தமது நாட்டுக்குள் அத்தியவசிய தேவையான உணவுத் தேவையை மாத்திரம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளனர். அதாவது உலகளாவிய ரீதியில் மக்கள் தமது அத்தியாவசிய தேவையான உணவுத் தேவைக்கு ஏனைய துறைகள் முடக்ப்பட்ட நிலையில் 3% விவசாயத்துறையினை நாட வேண்டிய நிலையிலுள்ளது.

தற்போது இலங்கையும் கடந்த 10 நாட்களாக ஊரடங்கிற்குள்ளாகி இலங்கையின் கைத்தொழில்¸ சேவைத்துறைகள் முடக்கப்பட்டு¸ சர்வதேச வர்த்தகமும் முடங்கி 100% மக்கற்தொகையும் தத்தமது  அத்தியவசிய தேவையான உணவுத் தேவைக்கு வெறும் 7% விவசாயத்துறையை நம்பியிருக்கும் நிலையேற்பட்டுள்ளது.

இலங்கையில் விவசாயத்துறைக்கு சாதாகமாக இயற்கை வளங்கள் காணப்பட்டாலும்¸ தற்போது பிரதான வருமானமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சுற்றுலாத்துறை வருமானத்தையாகும். ஆனால் குண்டு வெடிப்பு போன்ற செயற்கை அனர்த்தங்களாலும்¸ தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் போன்ற அனைத்து அனர்த்தங்களாலும் இலங்கையில் முதலில் சரிவடைவது சர்வதேச வர்த்தகர்களையும்¸ வாடிக்கையாளர்களையும் கொண்டியங்கும் சுற்றுலாத்துறையாகும். விவசாயத்திற்கு வளமான நாடாக இருந்தாலும் நாம் அத்துறையிலும் சிறப்புத் தேர்ச்சி¸ நிறையுற்பத்தி நிலையை அடையவில்லை. இதனால்தான் சந்தைக்குச் சென்றாலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற கிழங்கு¸ வெங்காயம் என்பவற்றை விட குறைந்த விலையில் வெளிநாட்டு கிழங்கு¸ வெங்காயம் வகைகளை கொள்வனவு செய்கிறோம்.

அதாவது நாம் நமக்குள்ள வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி நமக்குள் நிலையான அபிவிருத்தியடையாமல் பிற நாட்டவர் கைத்தொழில், சேவைத்துறை தொழிலாளர்களாகவும், சுற்றுலா பயணிகளாகவும் வந்து செலவளிக்கும் பணங்களை வருமானமாக பெற்று, வெளிநாட்டு பயணிகள் இல்லாத காலங்களில் அன்றாடச் செலவுக்கும் அல்லல் படும் நிலையில் வாழ்கின்றோம்.

ஊரடங்குடன் இரண்டாம் வாரத்தை ஆரம்பித்துள்ள நாம் தொடர்ந்தும் இதே நிலை நீடித்தால் 5ம், 6ம் வாரங்களை கடக்கும் போது உணவில்லாத பஞ்ச நிலையொன்றை எதிர்பார்க்லாம். இலங்கையில் கடந்த 2019 ஏப்ரலுக்கு பின்னரான காலத்தில் இருந்து வீழ்ச்சியுடன் கூடிய தளம்பலான நிலையில்தான் சுற்றுலாத்துறையும் காணப்படுகின்றது. இந்நிலமை  தொடர்ந்தால் பொருளாதார மந்தம்  ஏற்பட்டு நீண்ட காலத்தில்  பொருளாதார வீழ்ச்சியை  நோக்கிச் செல்லும்.

எனவே அவ்வாறானதோர் அவலநிலை ஏற்படாமல் இருக்க நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் முதலீட்டுத் கோட்பாட்டிற்கு  ஏற்ப இயற்கை வளங்களான மண், நீர் என்பவற்றை உச்ச பயன்பாட்டில் பயன்படுத்தி, வேலையில்லாதோருக்கு விவசாயத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி  தேசிய உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பை 30% ஆக உயர்த்த முன் வர வேண்டும். இவ்வாறு விவசாய உற்பத்திகளை உயர்த்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகங்களை மேற்கொள்ள சதாகமான  காலங்களில் ஏற்றுமதி செய்யவும், தற்போதைய நிலை போன்று முடங்கக் கூடிய காலங்களில்  நீண்ட காலத்திற்கு நமக்கு அவற்றை நுகரவும் முடியும்.

ஆனால் தற்போதுள்ள நிலையில் முதலில் செயற்படுத்த வேண்டியது  நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பகிர்வுக் கோட்பாடாகும். அதாவது இலங்கையில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 4ம், 5ம் வாரங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பொதுமக்களின் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு அன்று எவ்வாறு நபி யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) தனி நபருக்கு ஓர் ஒட்டகை மூட்டை தானியம் என்று அளந்து கொடுத்து நுகர்வைக் கட்டுப்படுத்தினாரோ அவ்வாறே இன்றைய அரசின் மூலம் ஒரு வாரத்திற்கு தனி நபருக்கு, இருவர் தொடக்கம் நால்வரை கொண்ட குடும்பத்திற்கு, ஐவர் முதல் ஐவருக்கு மேற்பட்ட குடும்பத்திற்கு என்று அரிசி, மரக்கறிவகைகள், மற்றும், ஏனைய அத்தியாவசிய உணவு வகைகளுக்கு என்று ஓர் நிறையளவுத் திட்டத்தை அறிமுகம் செய்து நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அத்துடன் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் அவசரமாக வீட்டுத் தோட்டம் அமைக்க முன் வர வேண்டும்.

அறிவுடையோருக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய வரலாற்றில் நல்லதொரு படிப்பினை திட்டமாக இருக்கிறது,(அல்குர்ஆன் : 12:111)

Ibnuasad

[cov2019]

பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன்…

பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *