துன்பம் துடைத்தெழு! இனி எல்லாம் இன்பமே! 02

  • 14

துன்பமே உருவாய் துவண்டு கிடக்கும் உள்ளங்களே! துன்பங்களுக்கு சற்று விடுமுறை தான் கொடுக்கலாமே.

கவலைப்படாதே!
நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்!
( 9 : 40 )

முழு பிரபஞ்சத்தையும் உன் தலையில் தூக்கிச் சுமக்காதே! இன்றைய நாள் தான் உனக்குரியது! முதலில் எமது நாட்களைச் சரிசெய்து கொள்வோம். பின்பு முழு வாழ்நாளையுமே பற்றி யோசித்துப் புலம்புவதைப் பார்க்கலாம்.

கவலைப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை.
கொஞ்சம் சிரி…
இன்னும் கொஞ்சம்….
இன்னும் கொஞ்சம் சிரி…
இந்த முழு உலகிலுமே விலைகொடுத்து வாங்கிட முடியாத ஒன்றென்றால் அது அடிமனதில் இருந்து பூத்திடும் அழகிய புன்னகை கொண்ட வதனமே.

தினம் தினம் உன்னை ஏதேனும் ஒரு வகையில் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்களைக் கொஞ்சம் துடைக்கத் தயாரா நீ??

வாழ்க்கையில் வரவேற்றலும் வழியனுப்புதலும் மிக முக்கியம்! அந்த வகையில் சென்ற பதிவிலே எம்மை நாம் மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள சில பண்புகளை எம்முள் வரவேற்றுக் கொள்ள வேண்டும் என்று பார்த்தோம்.

இப்பதிவிலே மகிழ்ச்சியை வளர்த்திட எம்மில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட வேண்டிய சில பண்புகளைப் பார்க்கலாம்.

  • வீணானவற்றை வீணடித்துவிடு! நஷ்டமடையாதே… கைசேதப்படாதே… வீணான நாட்டங்கள், வீண் தர்க்கங்கள், வீணான பேச்சுக்கள், பழிவாங்கும் எண்ணங்கள் போன்ற காலத்தையும் நேரத்தையும் ஏன் உன் வாழ்க்கையையுமே சீரழிக்கக்கூடிய விடையங்களை உன்னை விட்டும் வழியனுப்பி விடு!

அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் : 9:69)

  • உன்னுடைய உடற்சுகாதாரத்திற்கும், உளச்சுகாதாரத்திற்கும், மகிழ்ச்சிக்கும், தூக்கத்திற்கும், சாந்தியான உள்ளத்திற்கும் பங்கம் விளைவிக்கும் விடையங்களையும் நபர்களையும் சார்ந்திருக்கும் பண்பை உன்னை விட்டும் வழியனுப்பி விடு!
  • பிறருடைய செயற்பாடுகளை விமர்சனம் செய்தல், மற்றவர்களை குறை காணுதல், பிறருடைய தவறுகளை பகிரங்கப்படுத்துதல், முதுகுக்குப் பின்னால் பேசுதல் போன்ற செயற்பாடுகளை உன்னை விட்டும் வழியனுப்பி விடு!
  • பெருமையை வெளிக்காட்டக் கூடிய சின்னச் சின்ன விடையங்களையும் அதற்காய் வீண் செலவு செய்வதையும் அதற்கென முக்கியத்துவம் கொடுப்பதையும் உன்னை விட்டும் வழியனுப்பி விடு

வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7:31)

  • அருட்கொடையாக கொடுக்கப்பட்டுள்ள உனது உடலை நல்லமுறையில் பராமரிக்காமல் விடுதல், உண்ணாமல், பருகாமல் உடலுறுப்புக்களின் உரிமைகளைக் கொடுக்காதிருத்தல், கவலைகளுக்கு பசியையும் தாகத்தையும் பலியாக்குதல் போன்றவற்றை உன்னை விட்டும் வழியனுப்பி விடு!

உண்ணாமல் இருந்தால் கஷ்டம் கலைந்திடுமா?
பருகாமல் தான் இருந்தால் துன்பங்கள் தொலைந்திடுமா?

உடல் ஆரோக்கியமும் உள ஆரோக்கியமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றன! உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளத்தில் தாக்கம்செலுத்தக் கூடியன. அவ்வாறே உள்ளத்தில் ஏற்படும் பாதிப்புகள் உடலிலும் தாக்கம் செலுத்தக்கூடியன!

உள்ளம் அமைதி பெற உடலையும் கொஞ்சம் கவனித்துக் கொள்!

  • அறியாமையால் கூட உணவு, உடை, உழைப்பில் ஹறாமான அம்சங்கள் சேர்ந்து விடக்கூடிய தருணங்களை உன்னை விட்டும் வழியனுப்பி விடு!
  • கடந்த காலம் பற்றிச் சிந்தித்தல், கவலையுறுதல், தன்னைத் தானே வருத்திக் கொள்ளல், நியாயப்படுத்தல், கைசேதப்படுதல் போன்ற உடலையும் உளத்தையும் பாதிக்கக்கூடிய அம்சங்களை உன்னை விட்டும் வழியனுப்பி விடு!

உனது கவலைகளால் உன் வாழ்க்கையோ இந்த உலகமோ கொஞ்சம் கூட மாறப்போவதில்லை என்பதை எப்போதும் மனதில் கொள்.

வாழ்தல் எனும் நீழ்தலில் எல்லா நாழிகைகளிலும் நீ நினைவில் கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

“இந்த நொடி நிரந்தரமில்லை!
எல்லாம் கொஞ்ச காலம் தான்!
இதுவும் கடந்து போகும்!
எதுவும் பழகிப் போகும்!”

அறிந்து கொள்ளுங்கள்:

“நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும். (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் : 57:20)

கடந்து வந்த பாதைகளில் இருந்து படிப்பினை பெற்றுப் புத்துயிர் பெறாது உடைந்து விடுவதை உன்னை விட்டும் வழியனுப்பி விடு!

விழுவது தவறில்லை…
விழுந்த இடத்திலேயே
விழ வைத்த நபர் முன்னே
எழுந்து நிற்பதே திறமை!

துன்பங்கள் கண்டு
துவண்டு விடாது அதைத்
துச்சமெனக் கொண்டு
உச்சம் தொடும்வரை உழைத்திடு!

நிச்சயமாக கவலைப்படுபவர் கண்டு ஷைத்தான் மகிழ்வுறுகின்றான். நினைவில் கொள்!

  • உன்னை நீ நேசி! தினமும் காலையில் கண்ணாடி முன் சென்று உன் முகம் பார்த்து,

• I’m sorry
• Please forgive me
• I love you
• Thank you

எனக் கூறி வரும்போது காலப்போக்கில் உன்னை நீயே காதல் செய்வாய்.

இது உளவளத்துணையில் சுய அக்கறை, தன்னைத் தானே நேசித்தல் போன்ற விடையங்களை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமே…

கொஞ்சம் சிரி!!
விடியல் ஒன்றும் தொலைவில் இல்லை!!
கொஞ்சம் பொறு!!
உன் இறைவன் ஒன்றும் பார்க்காமல் இல்லை!!

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
B.A (Hons) R SEUSL
Psychological Counsellor(R)
Maruthamunai.

துன்பமே உருவாய் துவண்டு கிடக்கும் உள்ளங்களே! துன்பங்களுக்கு சற்று விடுமுறை தான் கொடுக்கலாமே. கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்! ( 9 : 40 ) முழு பிரபஞ்சத்தையும் உன் தலையில் தூக்கிச்…

துன்பமே உருவாய் துவண்டு கிடக்கும் உள்ளங்களே! துன்பங்களுக்கு சற்று விடுமுறை தான் கொடுக்கலாமே. கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்! ( 9 : 40 ) முழு பிரபஞ்சத்தையும் உன் தலையில் தூக்கிச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *