முஸ்லிம் சமூகத்தின் தேவை!

  • 10

இலங்கை நாட்டிலே சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயமே! எனினும் அவ் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் அனைவரும் உணர்ந்த ஓர் விடயமே “ஒவ்வொரு துறையிலும் நம் முஸ்லிம் சமூகம் போதியளவு கால்பதிக்க வேண்டும்.” என்பதாகும்.

இதனையே இஸ்லாமும் வலியுறுத்துகின்றது. அதாவது சமூகத்தில் துறை சார்ந்த அறிஞர்களை உருவாக்குவதை இஸ்லாம் பர்ளு கிபாயாவாக நோக்குகின்றது. இக் கடமையை அச் சமூகத்தில் உள்ள எவரும் செய்யாதுவிடின் அது முழுச் சமூகத்தினதும் குற்றமாகவே கருதப்படும். இதனடிப்படையில் இன்று அல்லாஹ்வின் அருளினால் மார்க்கத்தைக் கற்ற ஆலிம்கள், ஹாபிழ்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் உருவாகியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

எனினும் இவர்களது தொகையுடன் ஒப்படும் போது முஸ்லிம் சமூகத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், தொழினுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், கலாநிதிகள், வரலாற்றாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், உளவளத்துறை ஆலோசகர்கள், கிராம சேவகர்கள், அரசாங்க அதிபர்கள், அரசியல்வாதிகள், படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று நீண்டு செல்லும் பட்டியலில் முஸ்லிம்களின் தடம் பதிப்பு ஓரளவு இருப்பினும் கூட அவை போதுமானதாக இல்லை. எனவே இவை அதிகரிக்கப்பட வேண்டும். அதனூடாகவே அல்லாஹ்வின் உதவி கொண்டு எமக்கான உரிமைகளையும் நியாயங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். (இன்ஷா அல்லாஹ்)

எனவே நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்கள் அர்ப்பண சிந்தனையுடனும் தியாக மனப்பான்மையுடனும் மாணவர்களின் திறமைகளையறிந்து முஸ்லிம் சமூகத்தின் தேவையுணர்ந்து அதற்கேற்றாற் போல் மார்க்கப் பின்புலத்துடனான அறிவுடன் குறிப்பிட்ட துறைகளில் மாணவர்கள் உருவாவதற்கு போதிய வழிகாட்டல்களை வழங்குவதோடு அவர்களை சிறப்பாக நெறிப்படுத்தவும் வேண்டும். அதேபோன்று இன்று ஆலிம்களாக, ஹாபிழ்களாக வெளியேறுகின்றவர்களும் இத் துறைகளிலும் கவனம் செலுத்தி அவற்றையும் கற்றுத் தேறுமிடத்து மார்க்கப் பின்புலத்துடனான அறிவுடன் அல்லாஹ்வைப் பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை கடைபிடித்து அத்துறையிலும் சிறப்பாக செயற்பட முடியுமென்பதே!

அதேபோன்று ஆலிம்கள் ஹாபிழ்களாக இல்லாதவர்களும் கூட அத்துறைகளைக் கற்றறிந்த அதில் பாண்டித்யம் பெற்றவர்களை அணுகி மார்க்கம் சம்பந்தமான தெளிவான நிலைப்பாடுகளையும், புரிதல்களையும் சரியான அமைப்பில் புரிந்து கொண்டு இஸ்லாத்தின் வரையறைகளை மீறாதும், அடிப்படைக் கடமைகளுக்குப் பங்கம் ஏற்படா வகையிலும் இத் துறைகளில் கால்பதித்து ‘அல்லாஹ்விற்காக’என்ற இஃலாஸான மனத்துடன் அல்குர்ஆன், ஸுன்னா வழிகாட்டலின் அடிப்படையில் சமூகத்திற்கு பயனளித்து அதனூடாக ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக! (இன்ஷா அல்லாஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குத் தௌபீக் செய்வானாக!

“…..உங்களில் அனைவரும் பொறுப்பாளர்கள்.உங்கள் பொறுப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்”(புகாரி,முஸ் லிம்)

“இம்மை மறுமையின் விளைநிலமாகும்”(அல்-ஹதீஸ்)

J.Noorul Shifa
(Jaffna)
SEUSL

இலங்கை நாட்டிலே சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயமே! எனினும் அவ் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் அனைவரும் உணர்ந்த ஓர் விடயமே…

இலங்கை நாட்டிலே சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயமே! எனினும் அவ் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் அனைவரும் உணர்ந்த ஓர் விடயமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *