அழிந்து போயுள்ள பித்ஆக்களை உயிர்ப்பிக்க துணைபோகாதீர்கள்

  • 8

ஷஃபான் பிறை பதினைந்தை பறாஅத் இரவு என்று சமூகம் வெகு விமர்சையாக கொண்டாடி வருவதை நாம் பார்கலாம் இது பற்றி தலைப்புக்குள் நேரடியாக போகமுன் நாம் உடன்பட்ட அடிப்படையை ஞாபகப்படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.

தஃவதுத் தப்லீகில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை.

“தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்கை வழிமுறை இதை ஏற்று நடப்பதில் தான் ஈருலக வெற்றி இருக்கின்றது”

இதன் விளக்கத்தை சுறுக்கமாக சொல்வதாக இருந்தால் மார்கம் என்பது அல் குர்ஆன் அல் ஹதீஸ் இவை இரண்டிலும் இல்லாதவை மார்கமில்லை என்பதுவே மேலே நான் சுற்றிக்காண்பித்த வார்தையின் பொருள். இந்த அடிப்படையில் இருந்து பராஅத் இரவு பற்றி நாம் பார்போம்.

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்து கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 59:7)

وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (திருக்குர்ஆன் 6:153)

இந்த குர்ஆன் வசனங்கள் அல்லாஹ் ரஸுலுக்கே நாம் கட்டுப்பட வேண்டும் அதுவெல்லாத வேறு வழிகளை நாம் பின்பற்றக்கூடாது என்ற அடிப்படையை எங்களுக்கு கற்றுத்தருகின்றது. பாராஅத் இரவு என்பது மார்க கடமையாக இருந்தால் அல்லாஹ்வும் அவனதுதூதருமே அதற்க்கு வழிகாட்டி இருக்க வேண்டும் என்ற அடிப்படையை நாம் புரிந்து கொண்டோம்.

பாராஅத் இரவு தொடர்பான சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு:
  1. பராஅத் இரவு மார்க கடமை என்றால் அது எப்போது கடமையாக்கப்பட்டது..? ஹிஜ்ரத்துக்கு முன்னா? பின்னா..?
  2. பராஅத் நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது..? ஆசுரா நோன்புக்கு பின்னா..? ரமழான் நோன்புக்கு முன்பா..?
  3. நபி ஸல் அவர்கள் பராஅத் நோன்பு நோற்றமைக்கு சான்று என்ன..? அப்படி இல்லை எனில் மார்க வழிகாட்டல்களில் ஒன்றை நடைமுறைப்படுத்தாது நபி ஸல் அவர்கள் விட்டு விட்டார்களா..?
  4. எந்த நபித்தோழர் முதல் முதலில் ரொட்டியும் வாழைப்பழமும் சுட்டுக் கொடுத்து மறுமையில் குடையை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெற்றுக்கொண்டவர்..?
  5. மூன்று நிய்யத்துடன் மூன்று யாஸீன் ஒதி பராஅத் இரவில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்..? நபி ஸல் அவர்கள் இப்படி ஒரு காரியத்தை செய்தார்கள் என்பதற்கு என்ன சான்று..?
  6. மூன்று யாசீன் ஒதி மூன்று நிய்யத்தில் பிரார்த்தனை புரிவது நபி வழி என்றால் நபிகளாரின் மரணத்தின் பின் அதை நடைமுறைப்படுத்திய ஸஹாபாக்கள் யார்…? ஆரம்பகால இமாம்கள் யார்..?
  7. யாஸீன் சூராவின் சிறப்பு பற்றி ஆதாரபூர்வமான ஒரு ஹதீஸையாவது காட்ட முடியுமா..?
  8. நபிகாளார் ஸலாத்துல் பராஆவை எந்த நேரத்தில் தொழுதார்கள்..? எங்கே தொழுதார்கள்..? அவர்களை பின்பற்றித் தொழுதோர் யார்..? அன்றைய தினம் கியாமுல்லைல் தொழுதார்களா..?

அன்பார்ந்த தோழர்களே..! இப்படி பல கேள்விகளை பராஆத் நாள் பற்றி எழுப்பிக்கொண்டே போகலாம் எதற்கும் விடை ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து கிடைக்காது காரணம் ஷஃபான் பிறை பதினைந்தை சிறப்பித்து நபி ஸல் அவர்கள் எந்த சிறப்பையும் கூறவில்லை அவர்கள் அத்தினத்தை குறிப்பாக்கி எந்த அமலையும் செய்யவுமில்லை நபிகளார் செருப்பணிய சொன்ன ஒழுங்குமுறை முதல் ஆட்சி செய்த ஒழுங்குமுறை வரை அச்சுப்பிசகாமல் நபி ஸல் அவர்களின் சொல், செயல், அங்கிகாரங்களை அவதானித்து அறிவித்த அந்த உத்தம நபித்தோழர்கள் நபிகளார் அத்தினத்தை அமற்களால் சிறப்பித்திருந்தால் வருடா வருடம் வரும் பராஅத் இரவு பற்றி அறிவிக்க மறந்திருக்க மாட்டார்கள்.

இன்னும் இலகுவாக விளங்க வேண்டும் எனில் நபியவர்களின் ஹஜ்ஜை கவனிக்கவும் நபியவர்கள் வாழ்கையில் ஒருமுறைதான் ஹஜ் செய்தார்கள் ஹஜ்ஜை தன்னிடமிருந்தே கற்றுக்கொள்ளும்படி கட்டையிட்டார்கள். அந்த ஒரு ஹஜ்ஜை நபியவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து அறிவிக்கும் நபித்தோழர்கள் பராஅத் என்ற ஒரு வணக்கத்தை நபி ஸல் ஷஃபான் பதினைந்தில் செய்திருந்தால் அதை அறிவிப்பு செய்ய மறந்திருப்பார்களா..?

ஒன்றை மார்கமாக நாம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் ரஸூல் அதை மார்கமாக கூறி இருக்க வேண்டும். அவ்வாறு குர்ஆனிலோ ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ இல்லாத ஒன்று எப்படி மார்கமாகும்..?

அல்லாஹு தஆலா சொல்கிறான்:

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”. (அல்குர்ஆன் 5:3)

நபிகளாரை கொண்டு அல்லாஹ் இந்த மார்கத்தை பூரணப்படுத்தி விட்டான் அல்லாஹ்வால் பூரணப்படுத்தபட்ட மார்கத்தில் நல்ல விடம் தானே ஒதினால் பாவமா..? தொழுதால் பாவமா..? சாப்பாடு கொடுத்தால் பாவமா..? என்று சிலர் கேட்கலாம்.

ஓதுவது பாவமில்லை நபிகளார் சொல்லாத ஓர்சிறப்பை சொல்லி ஒருநாளை குறிப்பாக்கி ஓதுவது பாவமாகும். அதே போல் தொழுவது பாவமில்லை நபிகளார் காட்டித்தராத ஒரு தொழுகையை இஸ்லாத்தின் பெயரால் நடைமுறைப்படுத்துவது பாவமாகும். சாப்பாடு கொடுப்பது பாவமில்லை நபிகளார் சொல்லாத சிறப்பைக் கொண்டு அந்த சாப்பாட்டை குறித்த தினத்தில் குறிப்பாக்கி அதை மார்க்க கடமமையாக செய்வது பாவமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697))

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560))

قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 49:160)

அன்பார்ந்த உறவுகளே..! ஈருலக வெற்றியென்பது நானும் நீங்களும் தீர்மானிப்பதிலில்லை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்துள்ள நேரானபாதையில் தான் அது உள்ளது. நபிகளார் பகளை போன்று தொளிவான வெட்ட வெளிச்சமான மார்கத்தில் எம்மை விட்டுச்சென்றிருக்க அதில் மார்கத்தின் பெயரால் புதுமைகளை உருவாக்குவதும் அந்த புதுமைகளுக்கு சமூக அங்கிகாரம் பெற்ற அமைப்புக்கள் அங்கீகாரம் கொடுப்பதும் அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரும் செயலாகும். அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்.

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏

நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றார்கள். (அல்குர்ஆன் : 2:159)

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۙ اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இறக்கியருளிய சட்டங்களை எவர்கள் மறைக்கின்றார்களோ மேலும் (இம்மையின்) அற்ப இலாபத்திற்காக அவற்றை விற்கின்றார்களோ அவர்கள், உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் நிரப்பிக் கொள்வதில்லை. இன்னும் இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்! மேலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் உண்டு. (அல்குர்ஆன் : 2:174)

اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ‌ فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّار

இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்! நரக வேதனையைச் சகித்துக் கொள்வதற்கு(த் தயாராய் உள்ள) இவர்களின் துணிவு எத்துணை வியப்புக்குரியது! (அல்குர்ஆன் : 2:175)

உலமாக்களே இந்த வசனங்கள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் அல்லாஹ்வின் பொருத்தத்தை மறந்து உலக லாபங்களை அடைய இந்த மார்கத்தை நீங்கள் மறைத்தால் உங்களின் மறுமை வாழ்வு இழிவடைந்ததாக இருக்கும் அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக.

وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 4:14)

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல் குர்ஆன் 5:2)

நட்புடன்
இன்திகாப் உமரீ
அட்டுலுகம


[cov2019]

ஷஃபான் பிறை பதினைந்தை பறாஅத் இரவு என்று சமூகம் வெகு விமர்சையாக கொண்டாடி வருவதை நாம் பார்கலாம் இது பற்றி தலைப்புக்குள் நேரடியாக போகமுன் நாம் உடன்பட்ட அடிப்படையை ஞாபகப்படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.…

ஷஃபான் பிறை பதினைந்தை பறாஅத் இரவு என்று சமூகம் வெகு விமர்சையாக கொண்டாடி வருவதை நாம் பார்கலாம் இது பற்றி தலைப்புக்குள் நேரடியாக போகமுன் நாம் உடன்பட்ட அடிப்படையை ஞாபகப்படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *