பஞ்சமான காலத்தை எதிர்கொள்ள நபி யூஸுப் அலை அவர்கள் கையாண்ட நிர்வாக முறைகள்.

  • 13

பொருளாதாரத்தில் உச்சத்தை நாம் தொட்டு விட்டோம், தன்னை மிஞ்ச யாருமில்லை, நாம் நினைத்தால் யாரையும் வீழ்த்தி விடலாம், என அமெரிக்கா , சீனா, இஸ்ரேல் , ஈரான் போன்ற வல்லரசு நாடுகள் மார்தட்டிக் கொண்டிருந்த வேலையில் உலக மக்களின் உயிர்களை மாத்திரமின்றி பொருளாதரத்தையும் ஆட்டம்காண வைக்க இப்பூமிக்கு சோதனையாக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அணு அளவே கொண்ட கண்ணுக்குத் தெரியாத உயிரினம் தான் Covid19 ஆகும். அன்று அணு ஆயிதத் தயாரிப்பதில் போட்டி போட்ட நாடுகள் இன்று இந்த அணு அளவிலான கொரோனா வைரஸை அழிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் சீனாவை தாக்கிக் கொண்டிருந்த வேலை கடந்த பெப்ரவரி 4ம் திகதி அமெரிக்க அதிபர் நாட்டு மக்களுக்காற்றிய உரையில் தமது நாட்டின் பொருளாதாரம் 21.44 ட்ரில்லியன் டாலர்களைத் தொட்டு விட்டதாகவும், நாட்டில் தற்போது வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், ஏழ்மை நீங்கி வருவதாகவும் , வருமானம் உயர்ந்து நாடு செழிப்படைந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்நிகழ்வு நடந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் இன்று அமெரிக்காவின் நிலையோ தலைகீழாக மாறி விட்டது. தற்போது அங்குமட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு லச்சத்தை எட்டி விட்டது . மேலும் 12000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள். நாளுக்கு நாள் நோயாளிகளும், இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதே தவிர குறையவில்லை. மேலும் தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. பங்குச் சந்தைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் முன்னொருபோதும் இல்லாத அளவு மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகலாவியரீதியில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என ஆசிய வங்கி கருத்து தெரிவித்துள்ளது. அது போக நான் மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் உலகை ஆழும் வல்லரசு நாடான அமெரிக்காவின் நிலையாகும். இலங்கை போன்ற பொருளாதார மட்டத்தில் பின்தங்கிய நடுகள் இந்த பொருளார வீழ்ச்சியை எப்படி எதிர்கொள்ளப் போகின்றது..? அதற்கான முன்னேற்பாடுகள் என்ன என்பது விடை கிடைக்காத கேள்வியாகும்.

இப்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உள்நாட்டவரின் தகவல் முதல் 180 க்கு மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு ஆறு மரணங்கள் உள்ளடங்களாக மூன்றாவது வாரம் சென்று கொண்டுள்ள நிலையில் இலங்கையின் அனைத்து விதமான பொருளாதார நடவடிக்கைகளும் நிருத்தப்பட்டு நாடு பூராக ஊரடங்கு சட்டமும் தொடர்ச்சியாக அமுலில் உள்ளது .

ஏழைகள், கூலித் தொழிலாளார்கள் மற்றுமன்றி பலரும் அன்றாட வாழ்கையை கடத்துவதற்க்கு கடும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாவுக்கு ருசியான சாப்பாடுகளை தேடித் தேடி சாப்புட்டோர் ஏதோ ஒரு கறியும் சோறும் சாப்பிடக் கிடைத்தால் போதுமென்ற நிலைக்கு மாறி விட்டார்கள். பணம்படைத்தோர் ஊரடங்கு தளர்த்தப்படும் குருகிய நேரத்துக்குள் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் ஓரளவு தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியுமான நிலையிலிருந்த பொருட்களும் விலையுயர்ந்த அரிதான பொருட்களாக மாறிவிட்டது. இன்று கையில் பணம் இருந்தாலும் வாங்குவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத நிலை உருவாகி விட்டது.

இதே நிலமை இன்னும் ஒரு நான்கு ஐந்து வாரங்களுக்கு நீடித்தால் எமது நாட்டிலும் பாரியதோர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களுக்கு அன்றாட உணவுத்தட்டுப்பாடும் நிகழக்கூடும் அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ் சொல்கிறான்:

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:155)

இத்தகைய சோதனைகளின் போது நாம் அதிகமாக படைத்தவனை நெருங்குவதோடு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்காளாக சோதனைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிகளில் முயற்சி செய்ய வேண்டும். உணவழிப்பவன் அல்லாஹ் ஒருவனே.

உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும், சென்றுசேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் : 11:6)

வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்! (அல்குர்ஆன் : 51:22)

நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகின்றோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதனைக் கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் : 32:27)

(மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன்னுடைய அருளை பொழிகின்றான். அவனே பாதுகாவலன்; புகழுக்குரியவன். (அல்குர்ஆன் : 42:28)

இந்த உலகில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ் ஒருவனே மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் வாழ்வாதரத்தைப் பற்றிக் கூறும் போது அது வானத்தில் இருப்பதாகச் சொல்வதின் மூலம் மழை என்ற அவனின் அருளைப்பற்றியே அவன் சொல்கிறான் என்பதை மற்ற வசனங்களின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும் . மழை என்ற அவனின் அருள் இந்த பூமியிலுள்ள விவசாய நிலங்களை வந்தடைய வில்லையென்றால் அனைத்து உயிரினங்களும் வாழ்வாதரத்தை இழந்து பட்டினியில் மரணிக்கவே நேரிடும்.

அல்லாஹ் சொல்கிறான்.

அவனே அவர்களைப் பசியற்றுவாழ உணவை கொடுத்தான். மேலும், அவர்களை அச்ச மற்று வாழ அமைதியை வழங்கினான். (அல்குர்ஆன் : 106:4)

அல்லாஹ்வுடைய சோதனைகள் நாம் நினைக்காத வடிவங்களிளும் எம்மை வந்தடையும் என்பதற்கு இன்றைய Covid19 ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று விவசாய நிலங்கள் மழையின்றி முற்றாக வறண்டு விடவுமில்லை, தொழிலின்றி அதிகமானோர் நிர்க்கதியாகவுமில்லை. மாறாக விவசாய நிலமிருந்தும் விவசாயம் செய்ய முடியாத அச்சமான சூழ்நிலையும், தொழிலிருந்தும் தொழிற்சாலைகளுக்குச் செல்ல முடியாத அச்சமான சூழ்நிலையையும் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் எம்மை Covid19 என்ற இந்த வைரஸினூடாக மரணபயத்தை கொண்டும் வறுமையை கொண்டும் சோதிக்கிறான். இது இப்படியே தொடர்ந்தால் பாரியதோர் உணவுத்தட்டுப்பாடு எம்நாட்டிலும் ஏற்படலாம். அதை எதிர்கொள்ள இப்போதே நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களிளும் இது போன்ற சோதனைகளின் போது பஞ்சம் நிலவியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தங்களின் நூற்களில் பதிவு செய்துள்ளார்கள்.

ஹிஜ்ரி 448 ஆம் ஆண்டு எகிப்து மற்றும் ஸ்பெய்னில் முன்னெப்பொழுதும் இல்லாதளவு பெரும் பஞ்சமும் பாரிய தொற்றுநோயும் ஏற்பட்டது. அதனால் தொழுகையாளிகள் அற்ற நிலையில் பள்ளிவாசல்கள் எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. (வரலாற்றில்) இந்த ஆண்டு “பெரும் பட்டினியின் ஆண்டு” என்று அழைக்கப்படுகிறது. ( ஸியரு அஃலாமின் நுபலா :18/311)

வறுமையை போக்க என்ன வழி.?

ஏழு ஆண்டுகால பஞ்சத்தைப் போக்க நபி யூஸுப் அலை அவர்கள் கையாண்ட வழிமுறையைத் தான் நாமும் கையாள வேண்டும். கட்டாயம் அரசமட்டத்தில் உள்ளோர் அல் குர்ஆன் படிப்பினையாக கூறும் இந்த நிர்வாக முறைமையை அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே) யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாறு பற்றிக் கேட்பவர்களுக்கு அதில் பெரும் படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 12:7)

அல்லாஹ் நபி யூஸுப் அலை அவர்களின் வரலாற்றில் பல படிப்பினைகளை எமக்கு வைத்திருக்கிறான். அவற்றில் ஒன்று ஒரு நாட்டை நிர்வகிக்கும் நிதியமைச்சரிடம் இருக்க வேண்டிய பொருளாதரக் கோட்பாடாகும். இதைப்பற்றி சூரா யூஸுப் தெளிவாக பேசுகின்றது.

எகிப்தின் அன்றைய ஆட்சியாளர் ஒரு கனவைக் காண்கிறார்.

“கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகளைத் திண்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!” என்று மன்னர் கூறினார். (அல் குர்ஆன் 12:43)

கனவுகளுக்கு வஹியினூடக விளக்கம் சொல்லக்கூடியவராக இருந்த நபி யூசுப் அலை அவர்களிடம் மன்னரின் கனவுக்கான விளக்கம் வினவப்பட்ட போது. சிறைக்கைதியாக இருந்த அவர் அக்கனவுக்கான விளக்கத்தை கூறினார் :

யூஸுஃப் கூறினார்: “ஏழாண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பீர்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்! (அல்குர்ஆன் : 12:47)

அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர! (அல்குர்ஆன் : 12:48)

பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள் மாரி பொழியப்பட்டு மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிவார்கள் (செழிப்பாக வாழ்வார்கள்)!” (அல்குர்ஆன் : 12:49)

அந்த சம்பவத்துக்குப் பின் எந்த பெண்ணின் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாகி யூசுப் அலை அவர்கள் சிறை சென்றாறோ அந்தப் பெண்ணே நபி யூசுப் அலை அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறி தானே குற்றவாளி என குற்றத்தை ஒத்துக் கொண்ட பின் சிறையிலிருந்து அவர்கள் விடுதலையானார்கள்.

நபி யூசுப் அலை அவர்களின் பொறுமைக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு

அரசர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவராய் வைத்துக் கொள்கின்றேன்” என்றார். யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: “இப்போது நீர் திண்ணமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும் முழுநம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.” (அல்குர்ஆன் : 12:54)

அதற்கு யூஸுஃப் “நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 12:55)

நபி யூசுப் அலை அவர்களுக்கு நிதி அமைச்சுப்பதவி வழங்கப்பட்டது. அவர் மன்னரின் கனவுக்கு சொன்ன விளக்கத்தை அடிப்படையாக கொண்டு முற்கூட்டியே தான் அறிந்து வைத்திருந்த 15ந்து வருட காலத்தின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு சிறந்த பொருளாதர திட்டத்தை செயல்படுத்தினார். அந்த அடிப்படையில் முற்கூட்டியே தான் அறிந்த அந்தப்பஞ்சமான ஏழு ஆண்டுகளை கருத்திற் கொண்டு பொருளாதாரத் திட்டத்தைத் துவங்கினார்கள்.

நபி யூசுப் (அலை) அவர்களின் முதல் கட்டளை:

”செலிப்பான காலமாக உள்ள ஏழு ஆண்டுகளிலும் மக்கள் தோய்வின்றி தொடர்ச்சியாக விவசாயம் செய்ய வேண்டும்.”

அல்லாஹ் முற்கூட்டியே எதிர்வரும் காலங்களைப் பற்றி முன்னெச்சரிக்கையாக செயற்பட சில அடையாளங்களை எமக்கு வெளிக்காட்டி இருப்பதால் உணவுத்தட்டுப்பாட்டை போக்க வழியமைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும் மனிதனுக்குத்தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! (அல்குர்ஆன் : 53:39)

எனவே முதற்கட்டமாக செலிப்பான காலத்தில் எங்களின் வீட்டு நிலங்களை விவசாய நிலங்கலாக நாம் மாற்ற வேண்டும். இதற்குப் பெரிய தோட்டங்கள்தான் தேவையென்றில்லை. மொட்டை மாடி போன்ற வசதிகள் இருந்தாலே போதுமானது. அதற்கான உரிய வழிகாட்டலுடன் பயிற்ச் செய்கையை விவசாயத் திணைக்களத்தின் உதவி மற்றும் ஒத்துழைப்போடு ஆரம்பிக்கலாம்.

முதலாவதாக வீட்டுத்தோட்டத்தை செய்வதற்கான சரியான இடத்தையும், நடுகைப் பொருட்களான வித்துக்கள், நாற்றுக்கள், துண்டங்கள், கிழங்குகள் போன்றவற்றை தெரிவுசெய்து கொள்ளவேண்டும்.

இரண்டாவது நாம் பயிரிடத் தெரிவு செய்யும் மரங்கள் அல்லது செடிகள் குறைந்த காலத்தில் கூடுதல் பயன் தருவதோடு நிலைத்து இருக்கக் கூடியதாகவும் இருப்பது நல்லது.

மூன்றாவது இடத்துக்குக்கு ஏற்ற முறையில் பொருத்தமான விதத்தில் பயிர்களை பயிரிட வேண்டும். அதாவது வெண்டி, பாகல், பயற்றை, பீர்க்கு தக்காளி, கத்தரி மிளகாய் பட்டுக்காய் இவற்றை பை, வாளி, சிறிய போத்தல்கள் என்பவற்றில் நட்டி மொட்டைமாடி சுற்றுப்புறச் சூழல் போன்ற சிறிய இடங்களிலே பராமறிக்கலாம்.

வற்றாளை, மரவள்ளிக் கிழங்குவகைகளையும் பசளை , கங்குன், பொண்ணாங்கானி போன்ற கீரைவகைளையும் சூழலில் கிடைக்கக்கூடிய சிறிய நிலப்பகுதிகளிலே நடலாம்.

தென்னை, பப்பாளி மா போன்ற இன்னும் சில மரஞ்செடிகள் ஆறுமாதத்தில் வளர்ந்து ஒரிரு வருடங்களில் காய்க்கக்கூடிய விதத்தில் (பட்) என்று விற்பனையில் இருக்கக்கூடியவற்றை விரும்பினால் நற்றுக் கொள்வதுடன் மிகவும் முக்கியமான மூலிகைகளான கற்பூரவள்ளி, துளசி, இஞ்சி குப்பைமேனி போன்ற மருந்து மூலிகைகளையும் நட்டுவதின் மூலம் அதனூடாக சளி, காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்கான நிவாரணத்தையும் பொறலாம் இன்ஷா அல்லாஹ்.

நபி யூசுப் (அலை) அவர்களின் இரண்டாவது கட்டளை:

“(அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்!”

“செலிப்பான காலத்தில் நாம் அறுவடை செய்கின்றவற்றை முழுமையாக சாப்பிட்டு விடக்கூடாது “

உதாரணமாக இன்று Covid19 ஆல் பலருடைய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வசதிபடைத்தவர்கள் கட்டம் கட்டமாக பல பகுதிகளிலும் உலர் உணவுகளை வழங்குகின்றனர். இதன் மூலம் தேவைக்கு அதிகமான உலர் உணவுகளை பெற்றுக் கொண்டோர் அவற்றை ஒரேயடியாக சாப்பிட்டுமுடித்து விடக்கூடாது. இன்று உங்களுக்கு உதவி செய்வோருக்கு நாளை உதவி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

இதே நிலைதான் விவசாயத்திலும். செலிப்பான காலத்தில் விவசாயம் செலிப்பாகக் காணப்படும். வறட்சியான காலத்தில் விவசாயம் மந்தநிலையை அடைந்து விடும்.

எனவே செலிப்பான காலத்தில் விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினோம் என்றால் அறுவடை வழமையான காலத்தை விடக் கூடுதலாகக் கிடைக்கும். இப்படியான காலகட்டத்தில் அந்தத் தானியங்களை ஒரு சில தினங்களுக்குள் சாப்பிட்டு அழித்து விடக்கூடாது.

“உணவில் வீண்விறயம் செய்யக் கூடாது”

எந்த ஒன்றும் அளவுக்கு அதிகமாக கிடைக்கப் பெற்றால் வீண்விரயம் என்பது இலகுவாக எம்மிடம் வந்து விடும். இன்று அளவுக்கதிகமான உலர் உணவு கிடைத்துள்ள வீடுகளில் கூட இதை நாம் பார்கலாம் .

அல்லாஹ் சொல்கிறான்.

ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7:31)

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(ச் சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். (ஸஹீஹ் முஸ்லிம் : 4137)

பொதுவாகவே எல்லாக்காலாத்திலும் இஸ்லாம் வீண்விரயம் செய்வதை தடை செய்கின்றது. குறிப்பாகப் பஞ்சமான காலத்தை எதிர்கொள்வதாயின் இத்தீய பண்பு எம்மிடமிருக்கக் கூடாது .

“குறைவாகவே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்”

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4184)

இவை பொதுவாக எல்லாக்காலத்திலும் நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். என்றாலும் குறிப்பாக பஞ்சமான காலத்தை எதிர்கொள்வதாயின் வளமைக்கு நாம் சாப்பிடும் அளவைக் விட குறைத்து தேவைக்கு ஏற்ப உணவுப் பொருட்களை எமது அறுவடைகளில் இருந்து எடுக்க வேண்டும்.

“அத்தியவசியத் தேவை போக மீதமுள்ள உணவுப் பொருட்களை பழுதடையாது சேமிக்க வேண்டும்”.

நபி யூஸுப் அலை அவர்கள் தேவை போக உள்ள பயிர்களை அதன் கதிர்களுடன் சேமிக்க சொன்ன வார்தையினூடக நாமும் எமது சேமிப்புத் திட்டத்தில் அவை பழுதாகாத வண்ணம் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதே நேரம் இத்திட்டமானது தேவையுடைய உறவினர்களையும், அயலவரையும் பசியில் போட்டுவிட்டு சேமிக்கும் திட்டமுமில்லை என்பதை நபி ஸல் அவர்களின் ஹதீஸினூடாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் : நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர். (அறுத்ததிலிருந்து) மூன்று நாற்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின்a வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்’ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்’ என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புகாரி : 5569)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 1875)

உணவுகளை நான் மேலே சொன்ன அடிப்படைகளை கவனத்திற்கொண்டு சேமிப்பது நபிவழிக்கு மாற்றமான காரியமுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரிச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன் கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள். (ஸஹீஹ் புகாரி : 5357. முஸ்லிம்: 3613)

“பஞ்சமான காலத்தில் நபி யூசுப் அலை அவர்கள் நடந்து கொண்ட அழகிய முறை”

நபி யூஸுப் அலை அவர்கள் பதவியேற்று எட்டாவது ஆண்டை அடைந்த போது அவர்களின் நிர்வாகத்துக்குள்ளான பகுதியைத் தவிர ஏனைய பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்படுகின்றது. முற்கூட்டியே இதை அறிந்து விவசாயத்திலும் தானியங்களை சேமிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்திய யூஸுப் அலை அர்களின் மக்கள் இந்த பஞ்சத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

அவர்கள் யூஸுஃபின் அவைக்கு வந்தபோது கூறினார்கள்: “அரசாதிபதியே! எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் கடுந்துன்பம் பீடித்துள்ளது. மேலும், நாங்கள் அற்பமான சில பொருள்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; (அவற்றுக்குப் பதிலாக) நீங்கள் எங்களுக்கு நிறைவாக தானியம் வழங்கி எங்களுக்கு நன்மை செய்யுங்கள்! இவ்வாறு நன்மை செய்வோருக்குத் திண்ணமாக அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.” (அல்குர்ஆன் : 12:88) மேலும் சூரா யூசுபின் 58,59,60,65,70, பொன்ற வசனங்களையும் பார்வையிடுங்கள்)

பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உதவி கோரி எகிப்தை நோக்கி வந்தபோது அம்மக்களுக்கு தன்நாட்டுப் பொருளாதரத்தையும் கருத்திற்கொண்டு அதிலும் குறைவு ஏற்படாது சிறந்த நிர்வாகத் திட்டத்தினூடக உதவினார்கள். பண்டமாற்று முறையிலும் தர்மமாகவும் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தனிபருக்கும் ஒரு மூட்டை அளவு தானியம் என்ற வரையறையில் உதவினார்கள்.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நபி யூசுப் அவர்கள் உதவிய முறை

  1. அன்றைய காலத்தில் நடைமுறையிலிருந்த பண்டமாற்று முறை வியாபார அடிப்படையில் தானியங்களை வழங்கி உதவினார்கள். (இது அவர் தனது நிர்வாத்துக்கு பாதிப்பு ஏற்படாதிருக்க செய்த காரியம் )
  2. ஒரே முறையில் தங்களிடமுள்ள தானியங்கள் அனைத்தையும் உதவி கோரி வந்த மக்களுக்கு வழங்கிட வில்லை மாறாக கட்டம் கட்டமாகவே உதவினார்கள்.
  3. ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு மூட்டை அளவு தானியம் என்ற அளவீட்டை வகுத்தார்கள்.
  4. தன்னை நம்பிவந்த ஏழைகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்கி உதவினார்கள். (இன்று எம்மத்தியிலுள்ள வளர்முக நாடுகள்மற்றும் எம் வியாபாரிகளைப் போல் சந்தர்பம் பார்த்து பொருட்களை அளவுக்கதிகமாக விலையேற்றி பசித்தவனின் பொருளாதரத்தை அடியோடு சுரண்டும் பழக்கம் அவர்களிடமிருக்க வில்லை)

அல்லாஹ்வின் உதவியால் முற்கூட்டியே பஞ்சமான காலத்தை எதிர் கொள்வதற்கான நடவடிக்களை நிதி அமைச்சராக இருந்து மக்களுக்கு தெளிவுபடுத்தி திட்டமிட்டு செயல் படுத்தியமையால் தம் நாட்டு மக்களையும் பட்டினி மரணத்திலிருந்து காத்துப் பிறநாட்டு மக்களுக்கும் உதவ முடியுமான முறையில் விவசாயத்தை நபி யூசுப் அலை அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அரசமட்டங்களில் இப்படியான தீர்மானங்கள் எடுக்கப்படா விட்டாலும் கூட நாம் எங்கள் ஊர்களிலுள்ள மஸ்ஜித் நிர்வாகங்களை அனுகி நபி யூசுப் அலை அவர்களின் பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த முயற்சிக்கலாம். அதுசிறந்த முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ் சொல்கிறான்: அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தியல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது. (அல் குர்ஆன் 12:111)

நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
அட்டுலுகம

பொருளாதாரத்தில் உச்சத்தை நாம் தொட்டு விட்டோம், தன்னை மிஞ்ச யாருமில்லை, நாம் நினைத்தால் யாரையும் வீழ்த்தி விடலாம், என அமெரிக்கா , சீனா, இஸ்ரேல் , ஈரான் போன்ற வல்லரசு நாடுகள் மார்தட்டிக் கொண்டிருந்த…

பொருளாதாரத்தில் உச்சத்தை நாம் தொட்டு விட்டோம், தன்னை மிஞ்ச யாருமில்லை, நாம் நினைத்தால் யாரையும் வீழ்த்தி விடலாம், என அமெரிக்கா , சீனா, இஸ்ரேல் , ஈரான் போன்ற வல்லரசு நாடுகள் மார்தட்டிக் கொண்டிருந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *