சலிப்பூட்டும் Quarantine சந்தோஷமாக மாற்றுவதெப்படி?

  • 10

[cov2019]

கொரோனா பற்றிய பீதி உள்ளத்தை ஆட்டம் காண வைக்கிறதோ இல்லையோ சமூக இடைவெளிக்காக நடைபெறும் இந்த தனிமைப்படுத்தல் பலபேரை சலிப்பூட்டி, வெறுப்பூட்டி, வெறுமையை சுமந்து செல்பவர்களாக மாற்றியுள்ளது. வேலைப்பழு அதிகமாக இருக்கும் போது கூட அனுபவித்திராத ஓர் வெறுப்பை, சலிப்பை வெட்டியாக இருப்பதால் அனுபவித்திருப்பீர்கள்,

கிடைக்கும் சிறு இடைவெளிகளில் எல்லாம் ஸ்மார்ட் போனை நோண்டத் தூண்டும் ஆர்வம். இலவச டேட்டா சலுகைகளுடன் கூடவே தேவைக்கு மிஞ்சிய நேரமும் கிடைக்கப் பெறுகையில் ஆரம்பத்தில் கிக்காக, சுவாரஸ்யமாக இருந்த தேடல்களெல்லாம் திசையை மறந்து திக்கற்று போகையில் ஈர்ப்பை இழந்துவிடுகின்றன.

ஒருபுறம் ஒரு சிலரை கொரானோ நோய் பற்றிய அச்சம் ஆட்டிப்படைத்து

  1. பதகளிப்பு (anxiety),
  2. எண்ண மீள் சுழற்சி நோய் (OCD)
  3. பீதி நோய் ( panic attack),
  4. Hypochondriasis/Health anxiety

போன்ற நோய்களுக்கு ஆளாக்கி வருகிறது. மறுபுறம் மனம் கொரோனாவிற்கு எப்போது முற்றுப்புள்ளி வரும்? என எதிர்பார்த்து, ஏமாந்து நிராசையடைந்தும் போகிறது.

  1. கையிறுப்பு இல்லாமல் மீதி நாட்களை எப்படி நகர்த்திச் செல்வேன்?
  2. திருமணம் நடக்குமா வெளிநாடு சென்ற கணவன் பாதுகாப்பாக இருப்பாரா?
  3. மீண்டும் எப்போது இணைவோம்? மூடிய கடையால் அடைந்த நஷ்ட்டத்தை எவ்வாறு மீளஅடைப்பது?
  4. கிடைத்த வேலை நிலைக்குமா நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மகன் இடைவெளிக்குப் பின் கல்வியைத் தொடர்ந்தால் மீண்டும் பின்தள்ளப்படுவானா?

போன்ற ஏக்கங்கள் ஒருபுறம் உள்ளத்தை அலைக்கழிக்கிறது.

இவ்வாறு நிகழ்ந்து வரும் சடுதியான மாற்றம் எதிர்காலத்தை பற்றிய பயத்தை உண்டாக்கி, வாழ்வின் நிலையற்றத் தன்மை உணரவைத்து தொடர்ந்தேச்சையான கவலை, மாற்றத்திற்கு முகங்கொடுக்க முடியாமை, கையறுநிலை போன்றவற்றை ஏற்படுத்தி ஒருவரை மன அழுத்தம் (Stress) மற்றும் மனச்சோர்வுக்கு (depression) இட்டுச் செல்கின்றன.

இவ்வண்ணம் கொரோனா ஆடிய தாண்டவத்தால் கொந்தளிக்கும் உள்ளத்தின் பிரச்சினைகளை.

  1. நோய்ப் பற்றிய அச்சத்தால் ஏற்படும் பிரச்சினைகள் (Fear of Disease )
  2. நிலையற்றத் தன்மையால் ஏற்படும் பிரச்சினைகள் (Uncertainty)
  3. சமூக இடைவெளியால் ஏற்பட்ட தனிமையுணர்வால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் (Isolation)

என மூன்றாகப் பிரித்து நோக்கலாம். மேற்கூறிய உளவியல் நெருக்கீடுகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உளவளத்துணையாளரை நாடுவது அவசியம். அதைத் தொடர்ந்தே அடுத்த விடயங்களுக்குப் போகலாம். உளநோய்களைத் தாண்டி இந்த தனிமைப்படுத்தல் காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கான சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சிறு சிறு இலக்குகளை வரையறுத்துக் கொள்ளுங்கள்(Define the Goals) . (ஒரு மாதத்தில்/ஒரு வாரத்தில் அடைய வேண்டியவை). நாளொன்றுக்கு செய்ய வேண்டிய செயற்பாடுகளை பட்டியலிட்டு ( To Do List) அதன் படி இயங்குங்கள். நாள் முடிவில் உங்கள் செயற்பாட்டு வீதத்தை அளவிடலாம்.

குடும்பத்துடன் நேரம் செலவளியுங்கள். குழந்தைகளுடன் குழந்தையாகி மகிழுங்கள். தாய்மடியில் உறங்குங்கள். குட்டி அரட்டை, செல்லச் சண்டை, கூட்டத்தின் சிரிப்பொழி உங்களை உற்சாகமூட்டும். சுயநலமற்ற அன்பு இங்கு தான் ஊற்றெடுக்கும்.

இயற்கையுடன் இணைந்திருங்கள். இராவானம், பால்நிலா மரங்களின் குளிர்மை, சுத்தமான காற்று சற்று நிதானித்து அனுபவியுங்கள். சாத்தியமென்றால் வீட்டுத்தோட்டத்தை குடும்பத்தினருடன் இணைந்து உருவாக்குங்கள்.

வீட்டுத்தோட்டம் அமைத்தல். அறுவடையைக் கண்டு மகிழ்தல், நீர் ஊற்றல், தொடர்ந்தேச்சையான பராமரிப்பு என்பன மனதிற்கு ஒருவித புத்துணர்ச்சியை ஊட்டும். கவிதைகள், பிடித்த பாடல் வரிகள், ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல் போன்ற கலை தொடர்பான விடயங்களையும் சற்று எட்டிப் பாருங்கள். அவை மனதின் இரசனைத் தன்மையைக் கூட்டும்.

விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள் அவை உடலையும், உள்ளத்தையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். தன்னம்பிக்கையை கூட்டும்.

Quarantine என்பது சிறையோ, முடக்கமோ அல்ல. நோயின் விடுதலைக்கான ஓர் பாதுகாப்பு அரண். நீங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நேரம். Quarantine முடியும் போது அதை அர்த்தமுள்ளதாக பயன்படுத்தியதற்கான திருப்தி மேலோங்க வேண்டும்.

உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களை மேலும் முன்னேற்றுவது எவ்வாறு என்று சிந்தியுங்கள். செயற்படுங்கள். இறைவனுடன் நெருக்கமாகுங்கள். அவனின் அருள்களில் நிராசையடைய வேண்டாம். அவனை உறுதியாக நம்புங்கள். அவன் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும், பொறுப்பு சாட்டலும் உங்களை உறுதிப்படுத்தும். தளம்பலற்ற மனதை பரிசளிக்கும்.

றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்

[cov2019] கொரோனா பற்றிய பீதி உள்ளத்தை ஆட்டம் காண வைக்கிறதோ இல்லையோ சமூக இடைவெளிக்காக நடைபெறும் இந்த தனிமைப்படுத்தல் பலபேரை சலிப்பூட்டி, வெறுப்பூட்டி, வெறுமையை சுமந்து செல்பவர்களாக மாற்றியுள்ளது. வேலைப்பழு அதிகமாக இருக்கும் போது…

[cov2019] கொரோனா பற்றிய பீதி உள்ளத்தை ஆட்டம் காண வைக்கிறதோ இல்லையோ சமூக இடைவெளிக்காக நடைபெறும் இந்த தனிமைப்படுத்தல் பலபேரை சலிப்பூட்டி, வெறுப்பூட்டி, வெறுமையை சுமந்து செல்பவர்களாக மாற்றியுள்ளது. வேலைப்பழு அதிகமாக இருக்கும் போது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *