உயிர்ப்புகளின் உயிரைத்தேடி

நீண்ட நாட்களாக
முகநூல் பக்கம் வரவில்லை
வரவும் விருப்பமில்லை
எதை எழுவதென்றும் புரியவில்லை…

எதன் மீதும் ஆசையில்லை
எவற்றின் மீதும் வெறுப்பும் இல்லை
யார் மீதும் பாசம் இல்லை
எவர் மீதும் கோபமும் இல்லை

உலகம் இப்படித்தானா?
அனைவரினதும் முகங்களும்
கேள்வியின் சின்னமாக…

சுருங்கிப்போன பொழுதுகளில்
என் இரவுகள் மட்டும் தான்
நீண்டு செல்கிறதா?

அந்தகாரப் பொழுதுகளில்
ஊமையின் கதறல்கலாகிப்போன
அங்கலாய்ப்புகளும்
நெருடல்களாகி
எவர் செவிகளையும்
எட்டவில்லையா?

எதையோ தேடுகிறேன் எது?
தொலைத்தால் தானே தேடுவதற்கு
அது இடம் மாறி விட்டதுவோ?
கனவுகளைப் பொருக்கிக்
கொண்டிருக்கிறேன்
யாசகியாய்…

சில சமயங்களில்
நினைவுச் சங்கிலியை
அசைத்துப் பார்க்கிறேன்

ஏதோவொரு மூலையில்
உயிர்ப்புகள் தெரிகிறது
ஆஹா….
என் வாழ்விலும் வசந்தத்தின் பூக்கள்
வாசனை வீசித்தான் இருக்கின்றன.

நிலாக்கவி நதீரா


Leave a Reply