நம்பிக்கையின் உதயம்

  • 11

வெறித்தபடி வானைப் பார்த்துக்கொண்டிருந்தார் காதர் நாநா. கருமுகில்களும் இடி முழக்கமும் மழை பெய்வதற்கான அறிகுறிகளை பறை சாற்றின. ஒருவாறு இன்றைய தினத்தை சோறும் தேங்காய்ச் சம்பலுடன் கழித்து விட்டோம் என பெருமிதம் அடைந்தார். அதே நேரம் நாளைய விடியலுக்கு என்ன செய்யலாம், குடும்பத்தினரது அன்றாட சாப்பாட்டு செலவு மற்றும் மனைவியின் மருந்து செலவினங்கள் என ஒவ்வொரு செலவாய் அவன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

இவற்றை எல்லாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று ஆயிரம் வலிகள். ஆயிரம் வழிகளில் சிந்திக்க அவர் மனதில் ஏதோ வலிகளின் ரேகைகள் அவரது இதயத்தை இழுத்து வைத்து தைப்பது போன்றிருந்தது.

தன் நிலைமை இவ்வாறிருக்க பக்கத்து வீட்டு வானொலியும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. “அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளுங்கள். வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள்” என்றெல்லாம் வானொலி எடுத்துரைத்தது. ஆனால் காதர் நானா வீட்டில் கைகளை கழுவிக் கொள்வதற்கேனும் சவர்க்காரத் துண்டுகள் இருக்கவில்லை. அவர் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடாத்துபவர். இந்த ஊரடங்குச் சட்ட காலத்தில் எங்கே சென்று வேலை செய்வது? எப்படி ஊதியம் பெறுவது? வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் எப்படி பெற்றுக் கொள்வது? யாரிடம் கேட்பது என்றெல்லாம் ஆயிரம் சிந்தனைகளோடு அவரது எண்ண அலைகள் மேலெழும்பின.

இருப்பினும் அரசாங்க சட்ட திட்டங்களை புரிந்து அறிந்து கொரோனாவின் கொடுமையையும் அறிந்தவராக தங்களைத் தாமே வீட்டிலேயே தனிமைப்படுத்தி காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள் காதர் நானா குடும்பத்தினர். காதர் நானா எத்தகைய சந்தர்ப்பத்திலும் மனந்தளராதவராக இறைவனிடமே மன்றாடி முறையிட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டில் ரேடியோவின் அலறல் செய்தியாக வந்து கொண்டிருந்தது. அதில் வசதி வாய்ப்புகளற்ற குடும்பத்தினர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் தருவதாக தகவல் வந்து கொண்டிருந்தது.

அப்போது அவரது மனைவி அஸ்மாவின் குரல் அவரது கவனத்தை திசை திருப்பியது.

“ஸஸ்னாட வாப்பா, ஸஸ்னாட வாப்பா, ரேடியோவில் சொன்னது கேட்டுச்சா? அரசாங்கம் வசதியில்லாத எல்லோருக்கும் உதவியா ஐயாயிரம் ரூபா தாராங்களாம். இது எமக்கு கிடைக்க வேண்டியது. கிராம சேவை மகத்தியாகிட்ட போய் கதைத்துவிட்டு வாங்கோவன். இந்தாங்கோ ஷேட். இந்தாங்கோ மாஸ்க். நல்லா மாஸ்க்க கட்டிக்கொண்டு போங்கோ. ஆள்களுக்குக் கிட்ட நிற்காமல் ஒரு மீட்டர் அளவு தூரமா நின்னு கதையுங்கோ” என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

ஒரு மாத வாழ்க்கை வீட்டுக்குள் ஏதோ ஒரு விதமாய் சென்று கொண்டிருந்தது பலரும் பலருக்கு கொடுத்தார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் எமக்கு எதுவும் கிடைக்கவில்லையே எனும் ஏக்கம் அஸ்மாவின் மனதுக்குள். எமக்கு ஏதாவது தாருங்கள் என்று கேட்கும் மனநிலைமையும் இல்லாமல் இறைவனை முற்றுமுழுதாக நம்பிய படியே காதர் நானா இருந்தார்.

காதர் நானா குடும்பத்தினருக்கு எந்தவித உதவியும் இது வரை கிடைக்கப்பெறவில்லை. இதனால் மிகவும் மனக் கஷ்டத்துடன் அவர் இறைவன் ஒருவனையே நம்பியபடி இருகரம் ஏந்தி நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். காலமும் மெழுகாய் உருகிக் கொண்டிருந்தது.

ஒரு நேரம் சாப்பிட்டு இரண்டு நேரம் வயிற்றை கட்டி, இரண்டு நேரம் சாப்பிட்டு ஒரு நேரம் வயிற்றை பட்டினி போட்டும் காலத்தையோட்டி விட்டார்கள் காதர் நானா குடும்பத்தினர். ஆம், அவர்கள் ஊடங்கு காலத்திலும் நோன்பு பிடித்தார்கள். இருகரம் ஏந்திக் கொரோனாவை அழித்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டித் தரும் படி இறைவனிடம் மன்றாடிக் கேட்டார்கள்.

ஷஃபான் மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்று வந்தார்கள். இனியென்ன ரமழான் அவர்களுக்கு கஷ்டமேயிருக்காது. மிகவும் விருப்புடனும் உவப்புடனும் ரமழானை எதிர்பார்த்திருந்தார்கள்.

ஒரு மாதம் மின்னலாய்க் கடந்து செல்கிறது. ஊரடங்கும் தளர்த்தப் படுகின்றது. கொரோனாவுக்கும் முற்றுப்புள்ளி எனும் அமைப்பில் அரசும் தகவல் பரிமாற அரசாங்கத்தால் கிடைக்கும் அந்த உதவியும் கிடைத்திட மிகவும் சந்தோஷப்பட்டார் காதர் நானா.

ஏற்கனவே ஸஸ்னாவின் திருமணத்திற்கு என்று சேர்த்து வைத்திருந்த கொஞ்ச பணமும் இந்த ஊரடங்கு சட்ட காலத்தில் பிரயோசனமானது. அதை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் தன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீரவேண்டும், தன்னுடைய குடும்ப சுமைகளில் இருந்து விடுபட வேண்டும், தன் பிள்ளைகளை கல்வி கற்பிக்க வேண்டும், மனைவியின் வருத்தத்திலிருந்து சுகம் அடைய வேண்டும், அதற்கு மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசித்தார் காதர் நானா.

என்றோ ஒரு நாள் இறைவன் இயல்பு வாழ்க்கையை தந்தருள்வான் என்ற நம்பிக்கையில் அடித்துக் கொண்டிருந்த அவரது இதயம் நிஜத்தை சீக்கிரம் கண்டது. அவரது நம்பிக்கையை வளமூட்டவும், அவரது தியானத்தை மெய்ப்படுத்தவும், கஷ்டங்களைப் போக்கவும் என வீட்டின் முன்னே கார் ஒன்று வந்து நின்றது. அந்தக் காரில் இருந்த மனிதர் ” என்னைத் தெரியுமா? ” என்று அன்புடன் வினவினார்.

முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் காதர் நானா யார் என்று தெரியாமல் திகைத்து நிற்க, “நான் தான் தரம் ஆறில் உங்கள் மகள் ஸஸ்னாவோடு படித்த உமைர். நேற்று நண்பர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் ஸஸ்னாவின் ஞாபகம் வந்தது. அப்போது தான் உங்கள் குடும்ப நிலவரங்களை தெரிந்து கொண்டேன். இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். நோன்பும் வருகிறது” என்று சொல்லி உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஒரு தொகைப் பணத்தையும் அன்போடு கையில் கொடுத்தார். காதர் நானாவும் அதனை ஏற்றுக்கொண்டார்.
காதர் நானாவின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது.

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
(இலங்கை அதிபர் சேவை-தரம் 2)
அதிபர்
மே.மா/மினு/எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயம்
பஸ்யால


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


வெறித்தபடி வானைப் பார்த்துக்கொண்டிருந்தார் காதர் நாநா. கருமுகில்களும் இடி முழக்கமும் மழை பெய்வதற்கான அறிகுறிகளை பறை சாற்றின. ஒருவாறு இன்றைய தினத்தை சோறும் தேங்காய்ச் சம்பலுடன் கழித்து விட்டோம் என பெருமிதம் அடைந்தார். அதே…

வெறித்தபடி வானைப் பார்த்துக்கொண்டிருந்தார் காதர் நாநா. கருமுகில்களும் இடி முழக்கமும் மழை பெய்வதற்கான அறிகுறிகளை பறை சாற்றின. ஒருவாறு இன்றைய தினத்தை சோறும் தேங்காய்ச் சம்பலுடன் கழித்து விட்டோம் என பெருமிதம் அடைந்தார். அதே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *