முஸ்லிம் திருமணப் பதிவுகள்.

  • 9

திருமணம் என்பது ஈஜாப் கபூல் என்பதுடன் தொடர்புபட்டாலும் திருமணப் பதிவுகள் அரச, சட்ட பணிப்புரைகளுக்கமைய இடம்பெறுகின்றன. திருமண விபரங்களை சட்ட ரீதியாக பதியும் ஒருவராகவே திருமணப்பதிவாளர் உள்ளார். உள்நாட்டு அலுவலக அமைச்சின் கீழேயே திருமண பதிவாளர்கள் தெரிவுகளும் அவர்களது விடயங்களும் உள்ளன. பெரும்பாலும் அரசியல் பின்புலத் தெரிவுகளாகவே அவர்களது நியமனங்கள் இடம் பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு சில ஊர்களில் பல முஸ்லிம் திருமணப் பதிவாளர்களது முறையற்ற அட்டகாசங்கள் அதிகரித்து உள்ளன. இவர்களைக் கண்கானிக்கவோ அல்லது விசாரிக்கவோ முறையான எந்த பொறிமுறையும் இல்லை. அவ்வாறான ஒரு விஷேட பொறிமுறை இருக்க வேண்டுமென முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மேலதிக மாவட்ட பதிவாளரிடமோ (Additional District Registrar), பத்தரமுல்லையில் அமைந்துள்ள Registrar General’s Department இலோ அவர்கள் பற்றிய முறைப்பாட்டை முன்வைக்க முடியும்.

பல ஊர்களிலும் மணமகனின் மணமகளின் விபரங்கள் குறித்த பள்ளிகளின் கடிதங்கள் வேண்டப்பட்டாலும் காதோடு காது வைத்தாற் போல் ரகசியமாக கள்ளத் திருமணங்கள் நடைபெற, இந்த திருமணப் பதிவாளர்கள் சிலவேளை அவர்களது ஊது குழலாக இருப்பது சமூக அவலத்துக்குரியது. திருமணம் செய்ததை கண்டுபிடிக்க முடியாத நிலையிருப்பதால் முகமூடி அணிந்த முறையில் பலர் செயற்படுகின்றனர். இதற்கு மறைகரங்களாக முஸ்லிம் திருமண பதிவாளர்கள் மட்டுமல்ல சில ஓதிப் படித்தவர்களும் ‘பாதிஹா’ ஓதுவதற்காக அறிந்தோ,அறியாமலோ துணை நிற்கின்றனர்.

பணத்திற்காக விலைபோகும் இவர்களால் ஓடிவரும் காதல் ஜோடிகளின் திருமணங்கள் இலகுவில் நடைபெறுகின்றன. வலி பேமிட்டுகள் முறையற்ற விதத்தில் தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ள செய்தியொன்றும் அம்பலமாகியுள்ளது. அதுமாத்திரமல்ல பல கள்ள திருமணங்களை முடிப்பவர்கள் இவ்வாறான சமூகத் துரோக திருமண பதிவாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களது காரியங்களை கன கச்சிதமாகவே நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

சில திருமணப்பதிவாளர்களுக்கு திருமணப் பதிவுகள் பற்றிய சட்டங்கள் கூட தெரியாமல் இருக்கின்றன. உதாரணமாக 18 வயதுக்கு கீழ் ஒருவர் முறையான விதத்தில் வந்த போதிலும் கூட 18 வயது சம்பூரணம் அடைந்தவுடன் வருமாறு பணிக்கப்பட்ட சம்பவம்களும் நடைபெற்றுள்ளன. முஸ்லிம் விவாக சட்டத்தின் படி 12 வயதுள்ள ஒருவர் திருமணம் முடிப்பதற்கு மட்டுமே காதி நீதிபதியின் அனுமதி பெறப்படல் வேண்டும். கடந்த காலங்களில் திருமண வயது எல்லை குறித்து பல வாத, விவாதங்கள் நடைபெற்று வந்ததையும் நாம் அறிவோம்.

நிகாஹ் வைபவம் நடைபெறும் போது விபரங்கள் சம்பூரணமாக எழுதப்படாமலேயே கையொப்பங்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றின் விபரங்கள் கூடியிருக்கின்ற மக்களுக்கு மத்தியில் சப்தமாக கூறப்படுகின்றன. பதிவு பிறகு எழுதப்பட்டதால் சில சிக்கல்கள் ஏற்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பதிவு எழுதப்படும் போது சில விடயங்கள் மறைக்கப்படவோ அல்லது மயக்கமாக எழுதப்படவோ சூழ்நிலைகள் தோன்றலாம்.

கைக்கூலி என்பது அன்பளிப்பாகவோ வேறு பொருளிலோ வழங்கப்பட்டிருந்தாலும் திருமண பதிவு சான்றிதழில் கைக்கூலி என்ற இடம் பெரும்பாலும் நிரப்பப்படுவதில்லை. அது மணமகனின் கௌரவம் பாதிக்கப்படும் என்று வெறுமையாக விடப்படுகின்றது. அவ்வாறு வழங்கியும் எழுதப்படாமல் இருந்ததால் விவாகரத்தின் போது பல பெண்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளன.

30 பவுன்கள் நகையும் 10 இலட்சம் ரூபாய் பணமும் வழங்கப்பட்ட நேரத்தில் திருமணப் பதிவிலுள்ள ‘கைக்கூலி’ என்ற இடத்தில் எதுவும் அவை குறித்து பதியப்படவில்லை. அதனால் அந்த திருமணம் விவாகரத்திறகு வந்த போது குறிப்பிட்ட பவுன்கள் நகையையோ பணத் தொகையையோ குறிப்பிட்ட மணப் பெண்ணுக்கு மீளப்பெற முடியவில்லை. அந்த மணப்பெண் ‘வல்லாஹி’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, “ நாம் அந்த குறிப்பிட்ட நகையையும் பணத்தையும் கொடுத்தோம்” என்று அறுதியிட்டு உறுதியாக கூறிய போதிலும் அவற்றை பெற முடியவில்லை. ஏனெனில் அதற்கான ஆதாரங்களாக ஆவணங்களே தேவையே தவிர வார்த்தைகளோ சத்தியமோ அல்ல.

திருமணப் பதிவுகளுக்கு விபரங்களை வழங்கும் போது பெயர்களையும் ஏனைய விபரங்களையும் தெளிவான எழுத்தில் பிழைகளின்றி எழுதி, பல தடவை சரிபார்த்த பின்னரே பதிவாளர்களுக்கு வழங்குவது நன்று. அதுவும் தட்டச்சின் மூலம் ( typing ) எழுதப்பட்டு வழங்குவது மிகவும் சிறப்பானது. ஏனெனில் விபரங்கள் பிழையாக பல பதிவுகளில் இடம்பெறுகின்றன. சட்ட ஆவணங்களுக்காக எமது விபரங்கள் வழங்கப்படும் போது அவை பிழையாக ஆவணங்களில் இருப்பின் பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதற்காக பணங்களையும் நேரங்களையும் வீண் விரயமாக செலவளிக்க வேண்டி வரும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

திருமணப் பதிவுகளின் விபரங்களை இணையத்தில் பதிவேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அது நிறைவேற பல காலங்கள் செல்லும். ஒருவரது தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் மூலம் திருமண பதிவுகளின் விபரங்களை பெறும் நாடாளவிய வசதிகள் இன்னும் அமையாததால் குறிப்பிட்ட ஒருவரது விபரங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் காலப் போக்கில் இந்நிலையில் மாற்றம் ஏற்படும்.

ஒரு திருமண பதிவுக்கு செல்லும் முன்பு அந்த திருமண ஜோடிக்காக தான் சுன்னத் தொழுதுவிட்டு, வாழ்வு சிறக்க துஆக் கேட்பதாகவும் அவருக்கு வழங்கப்படும் திருமணப் பதிவுக்கான ஊதியத்திலிருந்து ஒரு பங்கை அவர் வைத்திருக்கும் உண்டியலில் இட்டு ஏழைக் குமர்களின் சில திருமணங்களுக்கு அதன் மூலம் முடிந்தளவு உதவுவதாகவும் ஒரு முஸ்லிம் திருமணப் பதிவாளர் என்னிடம் குறிப்பிட்ட போது மெய்சிலிர்த்துப் போனது. அவருக்காக மனம் பிரார்த்தித்துக் கொண்டது. அதனை ஒரு முன்மாதிரியான செயலாக மனம் கருதியதோடு, அதனை ஏனைய திருமணப்பதிவாளர்களும் பின்பற்றினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று மனதில் ஓர் ஆதங்கம் ஏற்பட்டது. இவ்வாறான நற்சிந்தனையும் சமூக ஆர்வமுமுள்ள திருமணப்பதிவாளர்கள் சமூகத்தில் இல்லாமலும் இல்லை.

ஊர்மட்ட ஜம்இய்யதுல் உலமாக்கள், பள்ளி பரிபாலன சபைகள், இயக்கங்கள், சங்கங்கள், ஊர் ஜமாஅத்தார்கள் ஆகியோர், தெரிவு செய்யப்படும் திருமணப் பதிவாளர்கள் பற்றி விழிப்பாக இருப்பது இன்றியமையாததாக உள்ளது. அந்த திருமணப் பதிவாளர்களது செயற்பாடுகள் குறித்து கூர்ந்து அவதானிக்கப்படல் வேண்டும். அவ்வாறு செயற்படாத விடத்து பல முறையற்ற குடும்பங்கள் உருவாகவும் பல பெண்கள் ஏமாற்றப்படவும் அது காரணமாக அமையக் கூடும்.

எம்.ரிஸான் ஸெய்ன்





yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

திருமணம் என்பது ஈஜாப் கபூல் என்பதுடன் தொடர்புபட்டாலும் திருமணப் பதிவுகள் அரச, சட்ட பணிப்புரைகளுக்கமைய இடம்பெறுகின்றன. திருமண விபரங்களை சட்ட ரீதியாக பதியும் ஒருவராகவே திருமணப்பதிவாளர் உள்ளார். உள்நாட்டு அலுவலக அமைச்சின் கீழேயே திருமண…

திருமணம் என்பது ஈஜாப் கபூல் என்பதுடன் தொடர்புபட்டாலும் திருமணப் பதிவுகள் அரச, சட்ட பணிப்புரைகளுக்கமைய இடம்பெறுகின்றன. திருமண விபரங்களை சட்ட ரீதியாக பதியும் ஒருவராகவே திருமணப்பதிவாளர் உள்ளார். உள்நாட்டு அலுவலக அமைச்சின் கீழேயே திருமண…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *