பிரார்த்தனைகளுக்கும் லொக் டவுண் ஆ??

  • 28

நடுநிசித் தூக்கம் துறந்து
நடுங்கும் குளிரில்
கதகதப்பான
போர்வை விலக்கி
கஷ்டத்தை இஷ்டமாய்
ஏற்று எழுந்தேன்.

அழகிய தஹஜ்ஜுத் தொழுகையை
அம்சமாய் நிறைவு செய்து
அவ்விடமே அமர்ந்து
அமைதியாய் ஆர்வமாய்
ஆர்ப்பாட்டமற்று இறையோனிடம்
இருகரமேந்தி இனிதே
பிரார்த்தக் கொண்டிருந்தேன்
எம் முழு மனித வர்க்கத்திற்குமாய்

அக்கணமே என்
நினைவலைகளில் ஓர்
குறுக்கலை சங்கமித்து
கொஞ்சம் சிந்திக்கவும்
நெஞ்சம் துயர் கொள்ளவும்
இருகரங்களை இன்னும்
கொஞ்சம் உயர்த்திடவும் செய்தது.

Lockdown! Lockdown! Lockdown!

எங்கும் Lockdown
எதிலும் Lockdown
எவருக்கும் Lockdown
எத்திசையிலும் Lockdown

அப்படியென்றால்
தினம் தெருவோரத்தில்
கிழிந்த குடையின் கீழ்
மர நிழலில் சாய்ந்து
செருப்பு தைக்கும்
மாமாவின் வயிற்றுக்கும்
லொக் டவுண் ஆ??

பஸ்ஸில் பல்கலைக்கழகம்
செல்கையில்
“அக்கா… சொகமில்ல
சல்லி தாங்கோ…” என
கறைபடிந்த ஆடைபூண்டு
புழுதி கலந்த
வதனம் தாங்கி வந்து
உதவி கேட்கும் அந்த
தங்கையின் வயிற்றுக்கும்
லொக் டவுண் ஆ??

பாதையோரப் பழக்கடை
அப்பாவின்
உக்கிப்போன வயிற்றுக்கும்
லொக்டவுண் ஆ??

தினம் தினம் ஹதியா
கேட்டு வந்து
நீ நல்லா இருக்கனும் என
ஆசீர்வதித்துச் செல்லும்
ஜீவன்களின் வயிற்றுக்கும்
லொக் டவுண் ஆ??

பாதையோரம்
சின்ன விறாந்தை தாங்கி
உச்சி வெயில் நச்சென
நடுமண்டை பிளக்கையில்
பார்ப்போர் போவோர்
வருவோர் யாவருக்கும்
ஜில்லென்ற இளநீர் விற்று
பிறர் வயிறு குளிரச் செய்து
அதில் தானும் வயிறு நிரப்பிடும்
பழைய சேட் போட்ட
அண்ணா வயிற்றுக்கும்
லொக் டவுண் ஆ??

தானும் தன் குடும்பமும்
பிளைத்திட
தினந்தோறும் பிழைப்பு
நடத்தி நாலு காசு சேர்க்கும்
உழைத்து உழைத்து
உடைந்து போன
உள்ளங்களுக்கும்
அவர்களின் வயிற்றுக்கும்
லொக் டவுண் ஆ??

இப்பாவப்பட்ட
இக்கட்டுகள் சஞ்சரித்த
நபர்களுக்கும்

வறுமையின் வலையில்
அகம் நோகச் சிக்கி
ஏழ்மையால் கோர
தாண்டவமாடிக்
கொண்டிருக்கும்
நபர்களுக்கும்

ஒரு கணம் ஒதுக்கி
இரு கரம் ஏந்தி
சிறு பிரார்த்தனையாவது
செய்யலாமே??
எம் கைகளுக்குமா
லொக் டவுண் ஆ??

பூமாதேவியோ
ஊரடங்கு முடக்கத்தில்
சிலர் இங்கு
உணவு முழக்கத்தில்
உண்ணும் பருகும்
தவறேதுமில்லை
ஊனும் உயிரும் பருக்கட்டும்
பிழையேதுமில்லை
அதுவே இல்லாதோன்
காண பதிவிட்டு
அவர் துயர் உயர்த்தாது விடுதல்
தப்பேதுமில்லை
மரத்தால் விழுந்தவனை
மாடேறி மிதித்தாற்போல்.

யா அல்லாஹ்!
வறுமையின் கோரப்பிடியில்
வாடி வதங்கிக் கிடப்போருக்கு
ஈடேற்றம் இயம்பிடு
ஈடேற்றமளிப்பவர்களிலெல்லாம்
சிறந்தவன் நீ!

யா அல்லாஹ்!
உண்ண வசதியின்றி
உழலுவோர் உண்டிகளை
நிரப்பிடு…
உணவளிப்பவர்களுக்கெல்லாம்
உணவளிப்பவன் நீ!

யா அல்லாஹ்!
பசிக் கொடுமையால் பதறும்
உயிர்களுக்கு உணவளித்திடு…
நினையாப்புறத்தில் இருந்து
உணவளிக்கும்
கொடைதாங்கி நீ!

யா அல்லாஹ்!
ஒன்றுக்கும் வசதியின்றி
இந்த ரமழானை
அடைந்தோருக்கெல்லாம்
உனது ரஹ்மத்தை வழங்கிடு.
நீயே அருளாளன்.
நீயே அன்புடையோன்.

அல்லாஹும்மா ஆமீன்.

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
B.A (Hons) Ⓡ _ SEUSL
Maruthamunai

நடுநிசித் தூக்கம் துறந்து நடுங்கும் குளிரில் கதகதப்பான போர்வை விலக்கி கஷ்டத்தை இஷ்டமாய் ஏற்று எழுந்தேன். அழகிய தஹஜ்ஜுத் தொழுகையை அம்சமாய் நிறைவு செய்து அவ்விடமே அமர்ந்து அமைதியாய் ஆர்வமாய் ஆர்ப்பாட்டமற்று இறையோனிடம் இருகரமேந்தி…

நடுநிசித் தூக்கம் துறந்து நடுங்கும் குளிரில் கதகதப்பான போர்வை விலக்கி கஷ்டத்தை இஷ்டமாய் ஏற்று எழுந்தேன். அழகிய தஹஜ்ஜுத் தொழுகையை அம்சமாய் நிறைவு செய்து அவ்விடமே அமர்ந்து அமைதியாய் ஆர்வமாய் ஆர்ப்பாட்டமற்று இறையோனிடம் இருகரமேந்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *