யார் இந்த பெரும் பாவிகள்

  • 16

அருள் பொருந்திய இந்த ரமழான் மாதத்தில் ஒரு கூட்டம் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்தி சுவாதீனம் இருந்தும் கூட நோன்பு நோற்காமல் அடுத்தவன் வீட்டில் திண்டு திரீதுகல். இதை எல்லாம் எங்க போய் சொல்ல யா ரப்பு.

நோன்பு என்றால் என்ன?

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.

  1. பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.
  2. வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.
  3. தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.
  4. பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது.
  5. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதி பெறுகிறது.
  6. பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறை நம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கின்றது.

“நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமழானில் நோன்பு வைக்கின்றாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரழியல்லாஹு அன்ஹு)  (ஆதாரம்:-புகாரி, முஸ்லிம், திர்மிதி)

“விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் தான் (நோற்பது கடமையாகும்)” (2:183,184)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்தாகும். அவை கலிமா, தொழுகை, ஸகாத், ஹஜ்ஜு, நோன்பு என நபியவர்கள் அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)

ரமழானில் நோன்பையும் விட்டுவிட்டு, மக்கள் முன்னால் அதனைப் பகிரங்கப்படுத்தியும் திரிகின்ற ஒருவர் குறித்த இஸ்லாமியச் சட்டத்தீர்ப்பு என்ன? அவரைத் தண்டனைக்குட்படுத்துவது ஆகுமானதா?

நோய்கள், பிரயாணம், வயோதிபம், கர்ப்பம் என்பன போன்ற தகுந்த காரணமின்றி ஒரு முஸ்லிம் நோன்பை விடுவது ஹராமானதாகும். அவ்வாறு ஒருவர் காரணமின்றி நோன்பை விட்டுவிட்டால் கழா செய்வதுடன் கஃப்பாரா-குற்றப்பரிகாரமும் கொடுக்க வேண்டியது அவரது கடமையாகிறது.

சில ஃபுகஹாக்கள் கழாவை மட்டும் கடமையாக்குகின்றனர். மேலும் சிலரது கருத்தானது கஃப்பாரா மட்டுமே போதுமானது என்கின்றனர். அவ்வகையில் ஒரு அடிமையை விடுவித்தல்; அது முடியாவிட்டால், தொடர்ந்து இரு மாதங்கள் நோன்புபிடித்தல்; அதுவும் முடியாவிடின் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

மேலும் ஒரு முஸ்லிம் நோன்பை விட்டுவிட்டால், அதனை அவன் பகிரங்கப்படுத்தாது மறைத்துவைப்பதே கட்டாயமாகும். நோன்பை விட்டுவிட்டு பகிரங்கப்படுத்துவது ஆகுமானதல்ல. அவ்வாறு யார் ரமழானின் பகல் வேளைகளில் உள்நோக்கங்களுடனோ அல்லது பரிகசிப்பிற்காகவோ தான் நோன்பை விட்டிருப்பதனை பகிரங்கமாக்கித் திரிகிறாரோ அவர் அதன் மூலம் தான் காபிராகிவிடுவது குறித்து அஞ்சிக்கொள்ளட்டும். ஏனெனில், அவர் இஸ்லாமின் அடிப்படைகளுள் ஒன்றைத்தான் பரிகசிக்கிறார்.

அதேநேரம் அப்பிரதேசப் பொறுப்பாளர்களைப் பொறுத்தளவில் நோன்பை விட்டிருப்பதாகக் கூறி அதனைப் பகிரங்கப்படுத்தியும் திரிவோரைத் தடுப்பதானது அவர்களுக்குரிய கடமையாகவும் மாறிவிடுகிறது. (சிறுபான்மைகளாக வாழும் நாம், இங்கு பொறுப்பாளர் என்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகங்கள் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்: மௌலவிமார்) அத்தோடு அத்தகையோருக்கு தஃஸீர் தண்டனை கொடுக்கவும் நீதிபதிக்கு உரிமையிருக்கிறது. அத்தண்டனை நீதிபதி நிர்ணயிக்கும் தண்டனையாகத்தான் இருக்கும்.

ரமழானின் பகல் காலங்களில் எவ்வித காரணங்களுமின்றி, நோன்பை விடுவோர் குறித்தும், அதனை மக்கள் முன்பு பகிரங்கப்படுத்தி சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் திரிவோர் குறித்தும் சட்ட வசனங்கள் வந்திருக்க வேண்டும்.

அத்தோடு யார் உரிய சலுகைகளுடன் இருக்கின்றனரோ அவர்கள் கூட அவர் பற்றி தப்பாக எண்ணாதிருப்பதற்காக மக்கள் மத்தியில் சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றை விட்டும் தவிர்ந்திருக்கவே வேண்டும். அவ்வாறுதான் முஸ்லிமல்லாதவர்கள் கூட முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் நோக்கில் பகிரங்கமாக சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் எவர் காரணமின்றி நோன்பை விட்டு இருக்கிறாரோ அவர் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து அறிவூட்டப்பட வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. மேலும் அவருக்கு நோன்பின் ஆத்மீக, ஆரோக்கிய பலாபலன்கள் குறித்தும் அவர் தன் பிள்ளைகள், நண்பர்களுக்கு முன்மாதிரியாய் இருப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட வேண்டும். ஏனெனில் நோன்பு ஒரு கேடயமாகும். அது தடுக்கப்பட்ட பாவங்களிலிருந்து பாதுகாக்கிறது. அதனோடு இம்மாதம் கொண்டிருக்கும் கண்ணியம் குறித்தும் அவருக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும்.

இம்மாதத்தின் கண்ணியத்தைப் பாழாக்குவது ஒரு முஸ்லிமுக்கு ஆகுமாகாது. அல்லாஹுத்தஆலா இம்மாதத்தையும் அதற்குரிய கூலியையும் தனக்கானதாக ஆக்கியிருக்கிறான். அது ஹதீஸுல் குத்ஸியில் வருவது போன்றே மகத்தான கூலிதான்: ”நோன்பு எனக்குரியது. அதற்கு நான் தான் கூலி கொடுப்பேன்.”

நான் நோய்வாய்பட்டிருக்கும் ஓர் இளைஞன். வைத்தியர் ஒருவர் எனக்கு, “நோன்பு பிடிப்பது உனக்கு தீங்களிக்கும்.” எனக்கூறுகிறார். இந்நிலையில் நோன்பு எனக்கு தீங்களிக்காது என்றே நான் கருதுகிறேன். எனினும் வைத்தியரின் அறிவுரைக்கேற்ப நான் நோன்பை விடுவது ஆகுமான விடயமா?

உங்களுக்கு நம்பிக்கைக்குரிய முஸ்லிம் வைத்தியர் ஒருவர் நோன்பு உங்களைப் பாதிக்கும் எனக் கூறினாலோ அல்லது சில வேளைகளில் பாதிக்கக்கூடும் என்றோ அல்லது உங்களைக் குணமடைவதனை விட்டும் தாமதப்படுத்தும் என்றோ கூறினால்; இவ்வாறான நிலைமைகளில் நீங்கள் நோன்பை விட்டுவிடுவது ஆகுமானதாகும். (நோயாளிக்கு சுய தீர்மானமும் எடுக்கலாம்.) அதாவது அவருக்கு நோயில்லாத நிலையில், நோய்க்கு அஞ்சினாலோ அல்லது நோன்பு பிடித்தால் நோய் வரும் என எண்ணினாலோ அவருக்கு நோன்பை விட்டுவிடுவது ஆகுமானதாகும். இவையனைத்தும் குறித்த நபரின் முன்னைய நோன்புகளின் அனுபவத்தை வைத்தோ அல்லது வைத்தியரின் ஆலோசனையுடனேயோ செய்யப்படும். இது விடயத்தில் எவ்விதக் கருத்து முரண்பாடுமில்லை.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:

“உங்களில் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கின்றாரோ…. அவர் ஏனைய நாட்களில் எண்ணிக்கொள்ளட்டும்.” (பகரா:184)

என்றாலும் நீங்கள் நோய் நிலையிலேயே, வைத்தியரின் ஆலோசனையையும் பொருட்படுத்தாது நோன்பு பிடிப்பீர்களாயின் உங்களது நோன்பு விருப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில் நீங்கள் உங்களுக்கு கஷ்டமானதொன்றை உங்கள் மீது சுமத்துகிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு இலகுபடுத்தும் நோக்கில் தந்திருக்கும் சலுகையொன்றை விட்டுவிடுகிறீர்கள்.

நோன்பை விடுவதற்குப் பரிகாரம் உண்டா?

நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒரு நோன்பை விடுவதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தில் அதிகமான மக்கள் உள்ளனர். நாமும் இக்கருத்தில் தான் இருந்தோம். ஆனால் ஆய்வு செய்யும் போது நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு நோன்பு நோற்கும் கடமையும் இல்லை. அவர்கள் இதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை என்பது தான் சரியான கருத்தாகத் தெரிகிறது.

இது பற்றிய முழுவிபரத்தைப் பார்ப்போம்.

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று 2:184 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வசனத்துக்கு பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன என்று எதிர்மறைச்சொல் பயன்படுத்தப்படவில்லை. எனவே சக்தியுள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்க சக்தியற்றவர்கள் என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டபோது “நோன்பு நோற்கச் சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்” என்ற சலுகை இருந்தது. அதுதான் இவ்வசனத்தில் (2:184) கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

இது குறித்து புகாரியில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது

صحيح البخاري 4507 حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ سَلَمَةَ، قَالَ: ” لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]. «كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «مَاتَ بُكَيْرٌ، قَبْلَ يَزِيدَ

சலமா பின் அக்வஃ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

“நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!”என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது. (நூல் : புகாரி 4507)

இதில் இருந்து தெரிய வருவது என்ன? நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம், அல்லது ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கான உணவு என்ற கணக்கில் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தைச் சொல்லவே இவ்வசனம் அருளப்பட்டது என்று தெரிகிறது.

மேலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் நோன்பும் நோற்க வேண்டாம்; பரிகாரமும் செய்ய வேண்டாம் என்ற கருத்தை இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது என்பதும் தெரிகிறது.

இது இப்போது மாற்றப்பட்டு விட்டதால் சக்தி உள்ளவர்கள் நோன்பு தான் நோற்க வேண்டும். அவர்கள் நோன்புக்குப் பகரமாக உணவு வழங்க முடியாது.

ஆனால் நோன்பு நோற்கச் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்காததற்காகப் பரிகாரம் செய்ய வேண்டுமா? என்றால் அது தேவை இல்லை என்பது தான் சரியான கருத்தாகும். ஏனெனில் மேற்கண்ட வசனம் நோன்பு வைக்கச் சக்தியுள்ளவர்களைத் தான் பரிகாரம் செய்யச் சொல்கிறது.

நோன்பு வைக்கச் சக்தியற்றவர்களுக்கு நோன்பு கடமையாகாது. எப்போது நோன்பு கடமையாகவில்லையோ அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. எப்போது ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் இதற்கு மாற்றமாகக் கூறியதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

 – حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقْرَأُ وَعَلَى الَّذِينَ يُطَوَّقُونَهُ فَلاَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ قَالَ ابْنُ عَبَّاسٍ: «لَيْسَتْ بِمَنْسُوخَةٍ هُوَ الشَّيْخُ الكَبِيرُ، وَالمَرْأَةُ الكَبِيرَةُ لاَ يَسْتَطِيعَانِ أَنْ يَصُومَا، فَيُطْعِمَانِ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا»

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“சக்தியுள்ளவர்கள் நோன்பை விட்டால் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்” எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாடும் முதியவரையும், தள்ளாடாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். (நூல் : புகாரி 4505)

Pஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போல் இவ்வசனம் முதியவர்களுக்கு நோன்பைக் கடமையாக்கும் வகையில் அமையவில்லை. அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் தரவில்லை. எனவே மேற்கண்ட வசனம் சொல்வதற்கு மாற்றமாக அவர்கள் சொன்னதாக இச்செய்தியில் கூறப்படுவதால் இதை நாம் ஏற்க முடியாது.

ஹஜ் செய்ய வசதியில்லாதவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை.

அது போல் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமையாக ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

NAFEES NALEER (IRFANI)

அருள் பொருந்திய இந்த ரமழான் மாதத்தில் ஒரு கூட்டம் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்தி சுவாதீனம் இருந்தும் கூட நோன்பு நோற்காமல் அடுத்தவன் வீட்டில் திண்டு திரீதுகல். இதை எல்லாம் எங்க போய் சொல்ல…

அருள் பொருந்திய இந்த ரமழான் மாதத்தில் ஒரு கூட்டம் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்தி சுவாதீனம் இருந்தும் கூட நோன்பு நோற்காமல் அடுத்தவன் வீட்டில் திண்டு திரீதுகல். இதை எல்லாம் எங்க போய் சொல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *