நோம்புக் கஞ்சி

நோம்புக் கஞ்சி

“உம்மோவ்…. வாப்போவ்…. நாளக்கி நோம்பாம்…. இப்ப தான் பள்ளீல சென்ன”

“மகேன் பார்த்து மெதுவா வாங்க. எந்தக்கி இப்பிடி ஓடி வார. செல்லீக்கி தானே இப்பிடி பா(f)ஸ்ட்டா ஓடினா புளுவீங்கண்டு”

“இல்ல வாப்பா… நாளக்கி நோம்பாமே… அப்ப பள்ளீல கஞ்சி குடுப்பதே. வாப்பா நானும் ஒங்களோட வார. அய்ய்ய்ய் ஜோலி…” ஐந்து வயது மகன் அல்மாஸ் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான்.

“வாப்பாம் மகனும் சேந்து எந்த பேசிட்டு நிக்கிய? நாங்களும் வந்து கலந்து கொண்டா பரவாயில்லயா? எங்கட மகன்ட மொகத்துல சந்தோஷம் நெறஞ்சீக்கிது. எந்த சமாச்சாரம்?”

“நாளக்கி நோம்பாம். கஞ்செடுக்க போக ரெடியாகுற ஒங்கட மகன்” கவலை தோய்ந்த முகத்துடன் பதிலுரைத்தார் தந்தை நிப்ராஸ். இதனைக் கேட்ட தாய் மிப்ராவிற்கு திக்கென்றிருந்தது. அவளது கண்கள் குளமாகின.

“உம்மா…. உம்மா…. உம்ம்ம்ம்ம்மா….”

பிள்ளையின் அழைப்பு கேட்டு தன்னை சுதாகரித்துக் கொண்ட மிப்ரா,

“ஓ…. மகன், இப்ப எல்லாவெடத்துலேம் கேபி போட்டீக்கி தானே… அதால இந்த வரிஷம் பள்ளீல கஞ்சி குடுக்குஅல்லயாம். கஞ்சி காச்சினா பொலிஸால புடிச்சிட்டு போவாங்களாம்”

“அப்ப இந்த வரிஷம் கஞ்சில்லாட்டி நாங்க ராவக்கி எந்தும்மா தின்னுஅ? போன வரிஷமும் பள்ளியால எடுத்தூ வந்த கஞ்ச தானே ராவக்கி குடிச்ச. அடுத்தூட்டு அப்ஸலாங்கட ஊட்டுல நோம்புக்கு நெறய சோட்டீஸ் செய்த. ஆனா எங்கடூட்டுல போன வரிஷமும் கஞ்சி மட்டும் தான். இந்த வரிஷம் அந்தக் கஞ்சீம் இல்லயா?”

பழைய நினைவுகளை ஆறாத வடுக்களாய் மனதில் பதித்து வைத்திருந்த பிள்ளை அழும் குரலில் முணுமுணுத்தான். பாவம் அப்பாவி சிறு பிள்ளைக்கு எங்கே தெரியப் போகிறது தன் குடும்பத்தின் வறுமை நிலை?

அது வரை மௌனமாக இருந்த தந்தை , “சரி மகன் நாங்க பார்த்து எந்த சரி செய்வம் நீங்க அழ வாணம் மகன்”

“இல்ல வாப்பா எனக்கு கஞ்சோனம். அடுத்தூட்டு மாமா நெறய சாமான் கொந்து அவங்கடூட்டுல எறக்கின. அந்த சாமனெல்லம் நோம்புக்கு கஞ்சி காச்சவாம். அப்ஸல் தான் சென்ன. வாப்பா நாங்களும் எங்கட ஊட்டுல கஞ்சி காச்சுவமே”

“சரி மகன் நீங்க இன்னம் எஷா தொழல்லே. பெய்த்து தொழுது அல்லாட துவா கேளுங்க. அவன் ஒங்களுக்கு நெறய தருவான். தன் இயலாமையை மறைத்து பிள்ளையை அனுப்பினார் அந்த ஏழைத் தந்தை.

“ஏய்… இப்ப எந்த செய்த? மகன எப்பிடி சமாளிக்கிய? பாவம் சின்னவனுக்கு சென்னாலும் ஒண்டும் வெளங்காதே. பாவம் புள்ள. நாங்க பசி தாங்கினாலும் அவன் தாங்க மாட்டான்”

“அது தான் மிப்ரா. கேபி போட்டீக்கியதால வேலேம் இல்ல. போன வரிஷ நோன்புளேம் தெஹ்ரான்ட கொழப்பத்தால தொழிலில்லாம, தின்ன ஒண்டுமில்லாம பள்ளீல தந்த நோம்புக் கஞ்ச வெச்சி சமாளிச்ச. இந்த வரிஷமும் ஒண்டுமில்ல”

“ஏய்… நாளண்டக்கி வெளனேல ஈந்து பகலாகங்காட்டீம் கேபிய எடுக்குஅ தானே. அந்த டைம்கு ஏண்ட இந்த காதுல ஈக்கியத்த வித்து கொஞ்ச சாமானுவல் வாங்குவமா?”

“ஒங்கள்ட தங்கம் எண்டு ஈக்கியதே அந்த காதுல ஈக்கியது மட்டும் தான். அதேம் வித்தா எபிடி? தங்கம் வாங்கி போட்டு ஒங்கள அழகு பார்க்க வேண்டிய நானே அத விக்கவா? ஏண்டல்லா ஏனிந்த சோதன? வாணம் மா நீங்க அத வெய்ங்க. எங்கள படச்ச ரப்பு ஒரு நாளும் எங்கள கையுடமாட்டான். அவன்ட மேல்ல எல்லா பாரத்தயும் போடுஅத தவிர வேற வழியில்ல மிப்ரா. நோன்பு பரக்கத்தான மாஸம். அதால, அல்லாஹ் எங்களுக்கு வழி காட்டுவான்”

வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய ஆண் சிங்கத்தின் உள்ளம் தன் இயலாமையை எண்ணிக் குமுறியது. அதேநேரம் மிப்ராவின் விழிகள் சுரந்த நீர் மடை திறந்த வெள்ளமாய் அவள் கன்னத்தில் கோடு கிழித்துக் கீழே சிந்திக் கொண்டிருந்தது.

“வாப்பா… வாப்பா… அடுத்தூட்டு மாமா, அது தான் அப்ஸல்ட வாப்ப ஒங்கள தேடி வந்தீக்கி” சிறுவன் அல்மாஸ் கூவிக் கொண்டு வந்தான்.

“ஆஹ்… அஸ்ஸலாமலைக்கும் நானா. உள்ளுக்கு வாங்க. எனா செய்தி?”

“வாலைக்கும்முஸ்ஸலாம். நிப்ராஸ் நான் வந்த விஷயம்… இதுல கொஞ்சம் சாமன் ஈக்கி. என்னால ஏளுமான சின்ன ஸதகா இது. இத நீங்க அல்லாகாக ஏத்துகொலோனம். குத்தங் கொறயல் ஈந்த மன்னிச்சிகோங்க. ஒங்கட துவால எங்களயேம் சேர்த்துகோங்க”

“நானா மிச்சம் மிச்சம் ஜெதாகல்லாஹைரா. ஒங்களுக்கு அல்லா இன்னம் பரக்கத்த தரட்டும். இது எங்களுக்கு பெரிய ஒதவி நானா”

“சரி நிப்ராஸ் இண்டக்கி தல நோம்பு ராவு. தராபியா தொழோனம். நான் பெய்த்துட்டு வாரனே” முகமன் கூறி விடைபெற்றுச் சென்றார் அடுத்த வீட்டு செல்வந்தர் பாரூக் நானா.

“மிப்ரா இங்க பாருங்க அல்லாஹ்ட ஒதவி எபிடி வந்தீக்கண்டு”

“அல்ஹம்துலில்லாஹ். இதுல ஒரு மாஸத்துக்கு தேவயான சாப்பாட்டு சாமான் ஈக்கி” மிப்ராவின் உள்ளம் மகிழ்ச்சியில் சிறுபெண்ணாய்க் குதித்தது.

“ஓ அதோட இதுல எம்லப் கவரொண்டு அதுலயும் பத்தாய்ரம் சல்லி ஈக்குது” நிப்ராஸின் உள்ளமும் குதிக்கத் தான் செய்தது.

“உம்மா…. இவளவு நெறய சாமன். அப்ப இந்த மொற எங்கடூட்டுல சோட்டீஸ், கஞ்செல்லம் செய்யேலுமே உம்மா”

“ஓ மகன். நான் ஒங்களுக்கு எல்லா ஜாதீம் செஞ்சி தாரன்”

“அய்ய்ய்ய்ய் சுப்பிரி…. நானும் அப்ஸல போல எல்லம் தின்னேலும். உம்மா எல்லம் செஞ்சி தருவா… ஜோலி…”

கவரி மானாய் துள்ளிக் குதித்து சந்தோஷக் கூத்தாடினான் சின்னவன் அல்மாஸ்.

அதேவேளை அவனது தாய், தந்தை இருவரும் அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வதற்காக ஸுஜூதில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தனர்.

முற்றும்

ILMA ANEES
(WELIGAMA)
SEUSL
சிறுகதை வியூகம் வெளியீட்டு மையம்