ஓய்வு நேரம்

ஓய்வைப் பொறுத்தவரை அது எல்லோருக்கும் மிகப் பிரியமானதோர் விடயமே! ஏனெனில் நாள் முழுதும் பல்வேறு வேலைப் பளுக்களுக்கு மத்தியில் பம்பரமாய் வலம் வந்து கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் இவற்றில் இருந்து சற்று ஓய்வு கிடைக்காதா? எனப் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் தருணமதில் அனைத்து வேலைகளிலிருந்தும் விடுபட்டு ஓய்வு எனும் நிலையை நாம் அடையும் போது அது எம்மில் மட்டில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

உண்மைதான்! ஓய்வு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையாகும். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கூட ஓய்வானது ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாகும். எனினும் நாம் எமக்குக் கிடைக்கும் இவ் ஓய்வான பொழுதுகளை வெறுமனே கழிக்காமல் பயனுள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளினூடாக அவற்றை கழிக்கும் போது அது நமக்கு மட்டுமல்லாது பிறருக்கும் நன்மைகள் விளையக் காரணமாக அமையும் அதேவேளை அதனூடாக நாமும் கூட ஈருலகிலும் பிரதிபலனை அடையக் காரணமாய் அமையும். (இன்ஷா அல்லாஹ்)

அந்தவகையில் இஸ்லாம் மார்க்கமானது முழு வாழ்க்கைக்குமான வழிகாட்டி என்ற வகையில் இவ் ஓய்வு குறித்தும் அது பேசியுள்ளது. எனவேதான்,

“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1) ஆரோக்கியம், 2) ஓய்வு” என நபி (ஸல்ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு)

மற்றுமொரு ஹதீஸிலும் 05 விடயங்கள் வருவதற்கு முன்பு 05 விடயங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இஸ்லாம் பணிக்கின்றது.அவற்றுள் ஒன்றே வேலைப்பளு வருவதற்கு முன்பு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாகும். மற்றவை பின்வருமாறு:-

  1. முதுமை வரும் முன் இளமை
  2. நோய் வரும் முன் ஆரோக்கியம்
  3. வறுமை வரும் முன் செல்வம்
  4. மரணம் வரும் முன் வாழ்நாள்

என்பனவாகும்.

எனவே நாம் எமது ஓய்வு நேரங்களைப் பல பயனுள்ள வழிகளில் கழிக்கலாம். குறிப்பாக அவற்றை எம் ஆன்மீக மேம்பாட்டுக்கான செயற்பாடுகளுக்காகவும், எமது அறிவை விருத்தியாக்கும் நடவடிக்கைகளுக்காகவும் எம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான விடயங்களிற்காகவும் அல்லது எம் எதிர்கால சமூகத்தின் தேவையை உணர்ந்து அதனை விருத்தி செய்வதற்கான செயற்பாட்களுக்காகவும் பெற்றோருக்கான குடும்ப உறுப்பினர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்காகவோ அந் நேரத்தைப் பயன்படுத்தலாம்.

எனவே இதனடிப்படையில் ஆன்மீக வழியில் எம் ஆன்மாவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளான அல்குர்ஆன் ஓதுதல், அதன் வசனங்களை மனனமிடல், அல்குர்ஆன் ஓதுவதைக் கேட்டல் மற்றும் ஹதீஸ், துஆக்களை மனனமிடல், அவற்றின் பொருள்களை அறிதல், திக்ர் செய்தல், மார்க்க சொற்பொழிவுகளைக் கேட்டல் போன்ற பல ஆன்மீகம் சார்ந்த செயற்பாடுகளை எம் ஓய்வு நேரங்களில் முன்னெடுத்து அதனைப் பிரயோஜனமான பொழுதுகளாக ஆக்கலாம். (இன்ஷா அல்லாஹ்)

இதேபோன்று அறிவை, எம் திறனை வளர்க்கும் செயற்பாடுகளிலும் கூட எம் ஓய்வான பொழுதுகளைச் செலவிடலாம். அந்தவகையில் புத்தகங்கள் வாசித்தல், வேற்று மொழிகளைக் கற்றல், அவ்வாறான வேற்றுமொழிகளில் அமையப் பெற்றுள்ள புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்தல், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம், அரபு எழுத்தணி போன்ற இலக்கியப் படைப்புக்களைப் படைப்பதில் ஆர்வம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

இன்னும் எம் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையிலான உடற்பயிற்சிகள், பயனுள்ள விளையாட்டுக்கள் மற்றும் வீட்டுத் தோட்டம் செய்தல், சைக்கிளோட்டம் போன்றவற்றிலும் ஈடுபடலாம். இதனால் எம் உடல் புத்துணர்ச்சி அடைவதுடன் உடல் ஆரோக்கியமும் பேணப்படுகின்றது. வீட்டுத் தோட்டம் செய்வதன் மூலம் எமக்குத் தேவையான மறக்கறிகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடிவதனால் எமக்குத் தேவையான போசனைகளை சரியான முறையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் கூடக் கிடைக்கின்றது.

அதுமட்டுமல்லாது எமது எதிர்கால சமூக நலன் கருதிய திட்டங்கள், செயற்பாடுகள் போன்றவற்றிற்கான ஆயத்தங்களை இவ் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி செய்து கொள்ளுமிடத்து அவை சமூகத்திற்கு நலவாகவும் நம் இறப்பின் பின்னரான நன்மைகளை ஈட்டித்தரும் செயலுக்கான அடிப்படையாகவும் அமையும். அந்தவகையில் சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கான தீர்வுத் திட்டங்களை வகுத்தல், ஆய்வுகள் செய்தல், சமூகத்தின் அபிவிருத்தியை மையப்படுத்தியதான கொள்கைகளை வகுத்தல், புத்தாக்க விடயங்களில் ஈடுபடல் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்தல் போன்ற பல நல்ல விடயங்களை எம் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி மிகக் கச்சிதமாக செய்து முடிக்க முடியும். (இன்ஷா அல்லாஹ்)

எனவே இவ்வாறாக ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஓய்வு நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் ஓர் தனிமனிதன் மட்டுமல்லாது அதனூடாக ஓர் குடும்பம் மற்றும் சமூகம் ஆகியனவும் பரவலான அமைப்பில் நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றன.

எனவே நாமும் அல்லாஹ் எமக்கு வழங்கியுள்ள ஓய்வு எனும் அருளை சரியான வழியில் பயன்படுத்தி அதனூடாக ஈருலகிலும் வெற்றி பெற வல்லவன் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வோமாக!

Jafeer Noorul Shifa
Jaffna
SEUSL

ஓய்வைப் பொறுத்தவரை அது எல்லோருக்கும் மிகப் பிரியமானதோர் விடயமே! ஏனெனில் நாள் முழுதும் பல்வேறு வேலைப் பளுக்களுக்கு மத்தியில் பம்பரமாய் வலம் வந்து கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் இவற்றில் இருந்து சற்று ஓய்வு கிடைக்காதா?…

ஓய்வைப் பொறுத்தவரை அது எல்லோருக்கும் மிகப் பிரியமானதோர் விடயமே! ஏனெனில் நாள் முழுதும் பல்வேறு வேலைப் பளுக்களுக்கு மத்தியில் பம்பரமாய் வலம் வந்து கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் இவற்றில் இருந்து சற்று ஓய்வு கிடைக்காதா?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *