தாயே உனக்காக ஓர் மடல்

  • 4

ஆவலோடு நீ எதிர்ப்பார்த்து
காத்திருந்தாய் பெண்ணே!

அதோ முடிவும் கிடைத்தது
இனி நீ பெண்ணல்ல தாய்!

நீ தாய்மை
அடைந்ததை கண்டு
உன் முகமெல்லாம்
கோடி நட்சத்திரங்கள்
மின்னிச் சென்றதை
நான் அறிவேன்!

எப்பவுமே
துள்ளிக் குதித்து
நடக்கும் நீ இன்று
ஒவ்வொரு அடியையும்
பவ்வியமாக
எடுத்து வைக்கிறாயே
இது என்ன மாற்றமோ
மந்திரமோ
புரியவில்லை எனக்கு!

இன்று
உனது பொன்னுடல்
ஒரு ஜீவனை அல்லவா
சுமந்து கொண்டிருக்கிறது!

நேற்று நீ சுமந்த
புத்தகப் பொதிகளை
விடவும் இது மிகவும்
இதமானது தானோ?

உனக்கு
கால் நீட்டுபவரையே
பிடிக்காத போது
எப்படி உன் குழந்தை
உதைக்கும் போது மட்டும்
அதை நீ விரும்புகிறாய்

இது தாய்மை
செய்த சூழ்ச்சியா?

இரவு பகலாக
நீ வயிற்றில்
ஒரு சுமையுடன் நடக்கிறாய்
இருந்தும்
உன் பாதம் சோர்வடையாமல்
இருப்பது என்ன புதுமையடி!

நாணத்துடன்
திரைச்சீலையை நீக்கி
தலைவனை பார்க்கும்
தலைவியை போல
உனக்குள்ளும் பயம் மெல்ல
எட்டிப் பார்க்கிறது
அதை நீ இன்னும்
உணரவில்லையா?

உன் முகம் காண
உனது குழந்தைக்கும்
ஆவல் மேலோங்கி
விட்டது போலும்.
அதனால் தானே
நீ இப்போது
மகப்பேற்று அறையில்.

கசங்கிய மலராக
வாடிப் போய் மயக்கத்தில்
இருக்கிறாய்!

ஏதோ கூற முனைகிறாயடி
சொல் தாயே
என்னவென்று சொல்

“கொஞ்சம் பொறு தங்கமே!
நீ என்னைக் காண வேண்டிய
தளராத ஆசையால்
பதற்றமடையாதே மகனே!
இன்னும் கொஞ்சம்
பொறு என் செல்லமே”

ஓ வயிற்றை தடவி
உன் குழந்தைக்கு
நீ சொல்வது
எனக்கும் கேட்கிறது
பெண்ணே!

வேதனையின் உச்சகட்டத்தை
நீ அடைந்து விட்டாய் போலும்.
உன் போராட்டம் முடிந்து விட்டது
என்பதற்கு
உனது நாடி நரம்பெல்லாம்
கலங்கும் படியாக நீ
கத்தியது சான்று கூறியது.

வானில் வண்ண வண்ண
பட்டாசுகள் வெடித்து வானையே அழகுபடுத்துகிறதடி!
உன் போராட்டமும்
குழந்தையின் அழுகை
சத்தத்துடன் பிரகாசமாகியது!

இனி உன் வாழ்வும்
புதிதாக விடிந்து விட்டது
பெண்ணே!

உன் சோர்ந்த
உடலும் உயிரும் எதையோ
கடைக் கண்ணால் தேடுகிறது.


உன் கண்கள் உணவையா
இல்லை
தண்ணீரையா தேடுகிறது?

நீ புதுத்தெம்படைய
இது தானே மருந்து
உனக்கு என்று
நான் நினைக்கையிலே
ஏமாந்து விட்டேனடி
இல்லை இல்லை!

நீ தேடுவது
அட்சய கிண்ணத்தை
அல்லவா?
ஆம் அது தான்
உன் அன்புக் குழந்தையை!

ஸகராத் வேதனையை
ஒத்த பிரசவ வலியை
மறந்து நீ எவ்வாறு
சிரிக்கிறாய் பெண்ணே?
ஏன் எனக்கு அதிசயம் காட்டி
திண்டாட்டுகிறாய் சொல் தாயே!

உன் குழந்தையின்
அழு குரல் உன்னை
மகிழ்வடைய செய்கிறது
இது தான் தாய்மையின்
மதிப்பை உணர
நான் கண்ட காட்சி!

உலகிலேயே
விலை மதிக்க முடியாத
பொக்கிஷம் உன் அருகில்

இனி என்ன
வேண்டும் உனக்கு?
உன் பணி சிறக்க
வாழ்த்துக்கள் தாயே!

Noor Shahidha
Badulla

ஆவலோடு நீ எதிர்ப்பார்த்து காத்திருந்தாய் பெண்ணே! அதோ முடிவும் கிடைத்தது இனி நீ பெண்ணல்ல தாய்! நீ தாய்மை அடைந்ததை கண்டு உன் முகமெல்லாம் கோடி நட்சத்திரங்கள் மின்னிச் சென்றதை நான் அறிவேன்! எப்பவுமே…

ஆவலோடு நீ எதிர்ப்பார்த்து காத்திருந்தாய் பெண்ணே! அதோ முடிவும் கிடைத்தது இனி நீ பெண்ணல்ல தாய்! நீ தாய்மை அடைந்ததை கண்டு உன் முகமெல்லாம் கோடி நட்சத்திரங்கள் மின்னிச் சென்றதை நான் அறிவேன்! எப்பவுமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *