பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்

  • 41

ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணும் இதை மொழிந்திருப்பாளோ இல்லையோ. பாரதி சொன்ன இந்த வசனங்கள் இன்னும் எனக்கு நியாபகம் இருக்கிறது

“பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே தங்கம்”

ஆம். முன்பெல்லாம் ஒரு காலத்தில் பெண்குழந்தைகள் பிறந்தால் பிறந்த உடனேயே கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள். ஏதோ துரதிஷ்டம் பிடித்தவர்கள் போல குடும்பத்திற்கு ஆகாது என்பது போல வறுமைக்கு பயந்து, அதை வளர்ப்பதற்கு பயந்து மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்காக பெண் சிசுக்கள் கொல்லப்பட்டார்கள்.

ஏன் ஜாஹிலிய காலத்தில் கூட இது நடந்தேறியுள்ளதே! ஆண் வாரிசுகளை மட்டும் பார்த்து பார்த்து வளர்ப்பதும் பெண் குழந்தைகளை பீடை என்றெண்ணி உயிரோடு புதைத்து கொல்வதுமாய் கழிந்த அவர்களின் நாட்கள் அண்ணலார் வந்ததும் தூதுத்துவம் பெற்றதும் அல்லவா விடிவுக்கு வந்தது.

அது போக கொஞ்சம் காலங்கள் முன்னேறிய போதிலும் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை வைத்திய பரிசீலனை செய்து கண்டறிந்து விட்டு கணவனதும், மாமியாரினதும் கெடுபிடிகள் தாங்காமல் கலைத்த வரலாறுகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சரி, இது எல்லாவற்றிலும் இருந்து தப்பித்தும் பிறக்கின்ற பெண்குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது முடிகிறதா? என்றால் அதுவும் இல்லை.

அவளை பக்குவம் அடையும் வரை பத்திரமாக கண்கொத்தி பாம்பாக இருந்து பாதுகாத்து வந்த போதிலும் அடுத்து பாவிகளின் இச்சைகளுக்கு பலியாகி மாண்ட பச்சிளம் பாலகிகள் பற்றியெல்லாம் பத்திரிகையும் மின் ஊடகங்களும் அறிவித்து கொண்டே இருக்கின்றனவே.

அதிலிருந்து கூட தப்பித்து விட்டால் அடுத்து நடக்கிறது நமது சமூகத்தில் ஒரு கூத்து.

நன்றாக படித்து கொண்டிருக்கும் பிள்ளையை ஒரு பதினைந்திலோ, பதினாறிலோ மணமுடித்து கொடுத்து விடுகிறார்கள்.

அவள் படிக்க வேண்டும் என்கிற அவாவும் பறிபோகி, குடும்ப வாழ்க்கையை சரிவர கொண்டுசெல்ல தெரியாது எத்தனையோ இளம்பெண்கள் விவாகரத்து கோரி காதி நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர்.

இது பெற்றோர்கள் விழிப்படைய வேண்டிய தருணம். திருமணம் என்பது அவசியம் தான். ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் பெண்களை தயார் படுத்துங்கள். அதாவது பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கவும், புரிந்துணர்வோடு, சகிப்பு தன்மையோடு நடந்து கொள்ளும் ஒரு சாலிஹான பெண்ணாக உங்கள் பெண்ணை வளர்த்து பின்னர் அவளுக்கு திருமணம் செய்து கொடுங்கள். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் அருளால் மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்வார்கள்.

இந்த பண்புகளில் இருந்து சறுகிய பெண்ணும், சமூகத்தில் சாதாரண வாழ்க்கையை தொடங்கும் பெண்ணும் இன்னும் இன்னும் இன்னல்களை எதிர்நோக்கி கொண்டுதான் இருக்கிறாள்.

சீதனமும் அதில் ஒரு கேடு. இன்று எவ்வளவு தான் நவீன அறிவியல் முன்னேறினாலும் மனித மூளை சில சமயங்களில் மழுங்கிய சிந்தனையில் ஊறிப்போய் விடுகிறது. அந்த சீதன பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது.

வறுமையில் வாழ்கின்ற குடும்பத்து பெண்கள் எங்கணம் சீதனம் கொடுப்பது. எப்போது திருமணம் முடிப்பது. அப்படியே சிறுக சிறுக சேமித்த பணத்தில் சீதனம் கொடுத்து அவள் இன்னொரு வீட்டுக்கு மருமகளாகி விட்டால் இன்னும் எதையெல்லாம் பிடுங்கிறலாம் என்ற கோணத்தில் மாமியார் வீட்டுக்கும் தாய்வீட்டுக்கும் மாறி மாறி சங்கமிக்கிறாள். இங்கேயும் நசுக்கப்படுகிறாள்.

ஒரு குடும்பத்தை ஆண் தான் நிர்வகிக்கின்றான் என்றாலும் ஒரு பெண்தான் எப்போதும் அதை சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறாள். பிள்ளைகளை செவ்வென வளர்க்க வேண்டிய பொறுப்பு தாய்க்கு அதை அவள் சரியாக செய்யாவிடில் பிள்ளைகள் வழிதவறி தடம்மாறி சென்றுவிடும். நடக்கிறது தானே!

எவ்வாறு இருந்த போதிலும் இன்று பெண்கள் அதல பாதாளம் தொட்டு ஆகாய முகடுவரை சோதனைகளை தாண்டி சாதனைகளை படைத்து கொண்டும் உள்ளார்கள். எல்லா துறையிலும் பிரகாசிக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் பெண் வர்க்கத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அட்டகாசம், காழ்ப்புணர்வு, வக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல பெயர்கொண்டு வியாபித்து காணப்படுகின்றன. குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, அகதி முகாம்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள், உடல், உள, உணர்வு துஸ்பிரயோகங்கள், சீதனப்பிரச்சினை, வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என்றெல்லாம் வகை வகையாக அடுக்கி கொண்டே செல்லலாம்.

உண்மையில் பெண் என்பவள் குடும்பத்தின், சமூகத்தின், நாட்டின் கட்டுக்கோப்புக்கு அச்சாணியாக இருப்பவள். அவளுக்கு கொடுக்க மதிப்பை நாம் கொடுக்க வேண்டும். இஸ்லாமும் அதனையே போதிக்கிறது. பெண்ணுக்கு தனித்துவமான பண்புகள் உண்டு அவற்றை மதிக்க வேண்டும்.

ஆகவே, ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்களை சுற்றி உள்ள பெண்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். தங்களையும் அறியாமல் கலாச்சார போர்வையில் நீங்கள் வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். தங்களை சுற்றி உள்ள அன்பான பெண் உள்ளங்கள் உரிய உரிமையும் வாய்ப்பும் பெற வழிவகை செய்யுங்கள். அதேநேரம்
பல இடங்களில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் இருக்கிறாள். இந்த நிலை மாற வரட்டு கெளரவம், பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல் தவிர்த்து பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வழிவகுப்போம்.

“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப்பெருமை உனக்கேயடி தங்கமே தங்கம்.”
நன்றி.
A.L.பாத்திமா சன்பறா
அக்கரைப்பற்று.

ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணும் இதை மொழிந்திருப்பாளோ இல்லையோ. பாரதி சொன்ன இந்த வசனங்கள் இன்னும் எனக்கு நியாபகம் இருக்கிறது “பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே தங்கம்” ஆம். முன்பெல்லாம் ஒரு காலத்தில்…

ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணும் இதை மொழிந்திருப்பாளோ இல்லையோ. பாரதி சொன்ன இந்த வசனங்கள் இன்னும் எனக்கு நியாபகம் இருக்கிறது “பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே தங்கம்” ஆம். முன்பெல்லாம் ஒரு காலத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *