கலாநிதி சுக்ரி அவர்களின் கல்விப் பணி – ஒரு பார்வை

அல்லாஹ் எனக்கு நிறைய செல்வத்தைத் தந்துள்ளான். அல்ஹம்துலில்லா ஆனால் கல்விப் பாக்கியத்தைத் தரவில்லை. நான் படித்தது ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆனால் உங்களுக்கு அறிவைக் கொடுத்துள்ளான். நாங்கள் எங்களது செல்வத்தைப் பொருத்தமான வழியில் பயன்படுத்த உங்களைப் போன்ற படித்தவர்களின் உதவியும் ஆலோசனையும் அவசியம். அப்படியில்லாத நிலையில் மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் நீங்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும். எனக்கு சமூகப்பணியில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். (நளீம் ஹாஜியார்: வாழ்வும் பணியும் பக். 47-48).

இவை கலாநிதி எம்.ஏ.எம் சுக்கிரி அவர்கள், முதன் முதல் நளீம் ஹாஜியார் அவர்களைச் சந்தித்து உரையாடியபோது அவர் குறிப்பிட்ட வார்த்தைகளாகும். இதனைக் குறிப்பிட்டுள்ள காலாநிதி சுக்கிரி அவர்கள், சுல்தான் மஹ்மூத் கஸ்னவி – அல்பிரூனி சுல்தான் நூஹ் இப்னு மன்ஸுர், இப்னு ஸீனா, நிஸாமுல் முல்க் இமாம் கஸ்ஸாலி என்றவாறு ஆட்சியாளர்களையும் அறிஞர்களையும் தொடர்புபடுத்துகிறார். நாமும், எம்.ஸி. சித்திலெப்பைக்கு வாப்பிச்சி மரைக்கார் அமைந்தது போல, நளீப் ஹாஜியாருக்கு கலாநிதி சுக்ரியை அல்லாஹ் தொடர்புபடுத்தி வைத்தான் எனக் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

பொதுவாக, உலகின் கல்விப்பணி இரண்டு வகையில் இடம்பெறுகிறது. வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடு அதில் ஒன்றாகும். கற்பவரும் கற்பிப்பவரும் நேரடியாக தொடர்புகொள்கின்ற இந்தப் பணி கல்வி உலகில் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றது. இது இருவழித் தொடர்பாடலுக்கூடாக இடம் பெறுகின்றது. இதனை முறைசார் கல்வி எனவும் குறிப்பிடலாம். சில சந்தர்ப்பங்களில் உரையாடல் மூலம் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது நவீன கல்வி முறைகளோடு நெருங்கிய தொடர்புடையது. இவ்வகைக் கல்விச் செயற்பாடு, நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைள் போன்ற அச்சு ஊடகங்களுக்கூடாகவோ, அல்லது வானொலி, தொலைக்காட்சி, கணனி, இணையம் போன்ற மின்னியல் ஊடகங்களுக்கூடாகவோ இடம்பெறுகின்றது. இன்று பெருவழக்காக வளர்ந்து வருகின்ற தொலைக்கல்வி முறையும் இதிலடங்கும்.

பொதுவாக பாடசாலைகளிலும், மதுரஸாக்களிலும் கற்றல்-கற்பித்தல் இடம் பெறுகின்றது. ஆனால் பெரும்பாலும் அங்கு பாடங்களே கற்பிக்கப்படுகின்றன. அதாவது மொழி, கணிதம், வரலாறு, ஹதீஸ், தப்ஸீர் போன்ற பாடங்களை மையப்படுத்தியே கற்றல் கற்பித்தற் செயற்பாடு தொடர்கின்றது. இதன் முடிவில் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் மிகச் சிறியதொரு விளைவேயன்றி முதன்மையான விளைவு அல்ல. அறிவு, திறன், மனப்பாங்கு, பழக்கவழக்கங்களில் ஏற்படுகின்ற, எதிர்பார்க்கின்ற அடைவுகளைப் பெற்றுக் கொள்வதே கற்றல் கற்பித்தற் செயற்பாட்டின் இலக்காகும். மற்றொரு வகையில் சொல்வதானால் முழுமையான ஆளுமையுடைய தனிநபர்களை உருவாக்குவது என்று குறிப்பிடலாம்.

இதனை, “கல்வி என்பது பாட போதனைகளிலிருந்து வித்தியானசமானதும், ஒரு தனிமனிதனின் ஆளுமையின் பரிபூரண வளர்ச்சிக்குத் துணைபுரியக் கூடியதுமாகும். பாடபோதனையின் நோக்கம் ஒரு தனிமனிதனுக்கோ குழுவினருக்கோ ஒரு வேலையைத் திறம்படச் செய்வதற்குப் பயிற்சியளிப்பதாகும். ஒரு மனிதன் சிறந்த தச்சனாக, வழக்கறிஞனாக, மருத்துவனாக விளங்கலாம். அதே நேரத்தில் அவன் அரைகுறைக்கல்வியைப் பெற்ற, ஒழுக்க நடத்தையற்ற, பண்பாடில்லாத மனிதனாக இருக்கலாம். அத்தககையவர்கள் தமது தொழில் துறைகளில் போதனை பெற்று நிபுணத்துவம் அடைந்தவர்களேயன்றி கல்வியைப் பெற்றவர்களல்லர்.” (இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு, பக். 02) என்று கலாநிதி சுக்ரி எடுத்துக் காட்டுகிறார்.

இந்த நோக்கை, கல்லூரிகளிலும் மத்ரஸாக்களிலும் கற்பிக்கின்ற பாடங்கள் எந்தளவு தூரம் நிறைவு செய்கின்றன என்பது கற்றல் – கற்பித்தற் செயற்பாட்டில் ஈடுபடுவோரின் அணுகுமுறையில் தான் தங்கியிருக்கின்றது. கல்வியின் நோக்கம் மாணவரின் உள்ளத்தில் தகவல்களையும் உணர்வுகளையும் திணிப்பதன்றி அவனைத் தூய்மையும் நேர்மையும் நிறைந்த ஒரு வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவதாகும். இதுவே எல்லா முஸ்லிம் கல்வியாளர்களதும் ஏகோபித்த கருத்தாகும். (இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு பக். 20) என்று இதனை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கலாநிதி சுக்ரி அவர்களின் கல்விப்பணி, வகுப்பறைக் கற்பித்தலோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. கொழும்பு, களனி, பேராதனை பல்கலைக்கழகங்களில் அவர் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலம் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் அவர் வகுப்பறைக் கற்பித்தலில்  ஈடுபட்ட அதேவேளை அதற்கு வெளியே முறைசாராக் கல்வி மூலம் சமூகத்துக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய காலத்திலேயே அவரது ஆக்கங்கள் எமது நாட்டுப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்று வந்தன. அவரையும் ஆசிரியர் குழாத்தில் இணைத்துக் கொண்டு “அல் மதீனா” என்ற சஞ்சிகை அவரது ஆக்கங்களுக்கு இடமளித்தது. பிரசித்த பாடசாலைகள், ஆசிரிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வெளியிடும் சஞ்சிகைகளிலெல்லாம் அவரது கட்டுரைகள் இடம்பெற்று வந்தன. அதேவேளை வானொலி உரைகளும், பொதுச் சொற்பொழிவுகளிலும் சமூகத்துக்கு அறிவூட்டிக் கொண்டிருந்தன.

ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கியபோது அவரது கல்விச்சேவை இன்னும் விரிவடைந்தது. குறிப்பாக படித்த மத்தியதர வகுப்பினரை மையப்படுத்தி அவர் தனது கல்விச் செயற்பாட்டை விரிவுபடுத்தினார். அது முறைசாராக் கல்விப்பணியாகவே அமைந்தது. வகுப்பறையில் குறிப்பிட்ட பாடங்களைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களுள் ஒருவராகவன்றி, சமூகம் என்ற மாணவர் தொகுதிக்கு வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்பிப்பதில் அவர் ஈடுபாடு கொண்டார். அவரது பகிரங்கச் சொற்பொழிவுகள், வானொலி உரைகள், மாநாட்டுப் பேருரைகள், தொடக்கவுரைகள், ஆய்வுரைகள், விரிவுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் யாவும் இந்தப் பணியை நிறைவேற்றுவனாவாகவே உள்ளன.

அவரது கல்விப்பணி இளைஞர்களையும், படித்த மத்தியதர வகுப்பினரையும் மையப்படுத்தி நடைபோடுவதை அவதானிக்கலாம். பல்கலைக்கழகத்துக்கு வரும் பட்டதாரிகள் மூலம் கற்றுக் கொண்ட ஒரு பாடமாகவும் இதனைக் கருதலாம்.

நவீன உலகாயதவாதிகள் தமது பிரசார சாதனங்களான நூல்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற இலட்சியவாத சிந்தனைப் படை எடுப்புக்களுக்கு எமது இளைஞர் சமுதாயம் பலியாகி ஈமான் இஸ்லாம் என்பன சூறையாடப்பட்டுள்ளன. இப்பயங்கரமான காலகட்டத்தில் இளைஞர்களை இஸ்லாத்தின் பால் மீட்கும்பணி அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறது. இதுவே இன்றைய ஜிஹாத் ஆகும்.  இஸ்லாத்தின் உன்னத உயர்ந்த கருத்துக்களை நவீன தத்துவங்களோடு ஒப்பு நோக்கி விளக்கி இஸ்லாமிய போதனைகளை வழங்கும் நூல்களையும் சஞ்சிகைகளையும் வெளியிடுவதன் மூலமே இத்தகைய பயங்கர சவாலை சமாளிக்க முடியுமென்பது எமது ஆழ்ந்த நம்பிக்கையாகும் என்று மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களின் “காலத்தின் அறைகூவலும் நவயுகத்தின் சவாலும்” என்ற நூலின் அறிமுகத்தில் எழுதியுள்ள கலாநிதி சுக்ரி அவர்கள், அவரது ஆக்கங்களை இந்தப் பாணியிலேயே வடிவமைத்துள்ளார். இதற்கு இஸ்லாமும் மனித உரிமைகளும் (1995), மதமும் அறிவியலும் (1994), இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் (1999) முதலிய நூல்களையும், இஸ்லாமிய சிந்தனை இதழில் தொடராக எழுதிவரும் ஆய்வுக் கட்டுரைகளையும் ஆதாரமாகக் குறித்துக் காட்டலாம்.

இஸ்லாமிய சிந்தனைகளை புத்திஜீவிகளுக்கு மத்தியில் உருவாக்குவதும், பரப்புவதுமென்ற அவரது இலக்கை மையப்படுத்தியே அவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட ஷஷஇஸ்லாமிய சிந்தனை|| என்ற ஜாமிஆ நளீமிய்யாவின் ஆய்வுச் சஞ்சிகை வெளியாகிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் வாழ்வையும் அதனோடு தொடர்புடைய விடயங்களையும் இஸ்லாமிய சிந்தனை, உளப்பண்பு கண்ணோட்டம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதற்குப் புறம்பான நிலைகளில் அணுக முற்படுகின்றனர்.  பெரும்பாலானோர் பெயரளவில் முஸ்லிம்களாகவும், இஸ்லாத்துக்கு முரணான வகையில் செயற்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நிலை முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தின் சீர்குலைவுக்கு அடிப்படைக் காரணமாக அமைவதில் வியப்பில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் இந்த அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் இலட்சியத்தை முன் வைத்து ஷஇஸ்லாமியச் சிந்தனை| மலர்ந்துள்ளது என்று இஸ்லாமியச் சிந்தனையில் முதலாவது இதழில் (அக்டோபர் 1978) குறிப்பிட்டுள்ள அவர், அதன் தாக்கத்தை விளங்கிக் கொண்ட பின்னர் நூறாவது இதழில் ஷஇது சிந்திக்கும் வர்க்கத்தினரை நோக்கமாகக் கொண்டு| வெளியிடப்படுகிறது. எனவே அதன் வாசகர் மட்டம் குறுகியது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். இந்தக் குறுகிய வட்டம் சமூகத்தில் மிகக் கணிசமாக சிந்தனைச் செல்வாக்கைச் செலுத்தும் ஆற்றல் படைத்தது. மக்களின் அறிவு, சிந்தனை ரசனைக்கேற்ப ஷஇஸ்லாமிய சிந்தனை|யின் தரத்தைப் பேணுவதைத் தவிர்த்து இஸ்லாமிய சிந்தனையின் தரத்திற்கு மக்களின் அறிவையும் சிந்தனையையும் உயர்த்துவதே எமது நோக்கம் (இஸ்லாமிய சிந்தனை – டிசம்பர் 2003) என்று குறிப்பிடுகின்றார்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக முஸ்லிம் சமூகத்தில் பரந்த அளவிலான புத்திஜீவிகள் உருவாக வேண்டுமென அவர் விரும்புகிறார். இந்த யுகம் முஸ்லிம் உம்மத்தை நோக்கி விடுக்கும் அறைகூவல்களை சமாளிக்கும் ஆற்றல் பெற்ற கல்விமான்களும், அறிஞர்களும் தேவைப்படுகிறார்கள். பல்லின சமூகங்களைக் கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய ஷரீஆவை முஸ்லிம் சமூகத்தில் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிக்க “பிக்ஹூல் அகல்லியா” போன்ற துறைகளில் அறிவும் ஆர்வமும் படைத்த அறிஞர்கள் அவசியப்படுகிறார்கள். பல்வேறு மதங்கள் பற்றிய அறிவையும் விளக்கத்தையும் பெற்று மதங்கள் பற்றிய உரையாடலில் பங்குபற்றி இஸ்லாத்தின் கருத்தை எடுத்துக் கூறும் ஆற்றல் படைத்த அறிஞர்கள் தேவைப் படுகிறார்கள். இந்த நாட்டில் எமது இருப்பையும் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் ஆதாரபூர்வமாக நிறுவும் ஆற்றல் படைத்த வரலாற்று அறிஞர்கள் தேவைப்படுகிறார்கள் (இஸ்லாமிய சிந்தனை – ஒக்டோபர் – டிசம்பர் 1999) என்ற அவரது கருத்து அவதானமாக நோக்கப்பட வேண்டியதாகும்.

இங்கே மத்ரஸாக் கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் இணைத்து பேசுவதைக் காண்கின்றோம். கல்வியில் ஆன்மீகக்கல்வி, உலகக் கல்வி எனக் கூறுபோட்டுப் பார்ப்பதை அவர் எப்போதும் விரும்புவதில்லை. இதனை அவர் தனது பேச்சிலும், எழுத்திலும் வலியுறுத்தி வருகின்றார். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் ஓர் ஆத்மீகப் பரிமாணத்தை வழங்கி மனிதனின் முழு வாழ்வையும் ஒரு வணக்கமாக மாற்றும் சிறப்பம்சம் பெற்ற ஒரு மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது. முதலீடு. பொருளீட்டல், உழைப்பு செல்வப் பங்கீடு என்பன மதத்தோடும் ஆன்மீகத் துறையோடும் எத்தகைய தொடர்புமற்ற முற்றிலும் உலகியல் சார்ந்த முயற்சிகளாகவே பொதுவாகக் கருதப்படுகின்றன. ஏனைய மதங்களின் கண்ணோட்டமும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் இந்த முறையிலேயே உள்ளன. ஆனால் இவ்விடயத்தில் இஸ்லாத்தின் கண்ணோட்டம் முற்றிலும் வித்தியாசனமான வகையிலேயே அமைந்துள்ளது.

இஸ்லாம் மனித வாழ்வை லோகாயதம். ஆன்மீகமென்று இரு கூறாகப் பிரித்து நோக்கவில்லை. மதம் சார்ந்தவை, மதசார்பற்றவை என்ற பாகுபாடும் இஸ்லாத்துக்க முற்றிலும் அன்னியமானது. மனிதனின் தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், பொருளாதாரம், அரசியல், சமூக உறவு, கலை இலக்கிய முயற்சிகள் அனைத்தையும் பொறுத்தவரை அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் போதனைகள் வரையறைகள் பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு கட்டுக்கோப்பை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. பரந்து விரிந்த இப்பூமியை ஒரு வணக்கத்தலமாகவும், மனித வாழ்வு முழுவதையும் வணக்கமாகவும் மாற்றும் இப்பண்பு இஸ்லாத்தின் சிறப்பம்சமாகும். (ஸகாத்: கோட்பாடுகளும் நடைமுறையும் முன்னுரை ப II) இந்தக் கருத்தை மறுதலைப்படுத்தி ஆத்மஞானிகள் உலகைத் துறந்தவர்களல்லர். அவர்கள் உலக நலனுக்காக உழைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக கலாநிதி சுக்ரி அவர்களின் ஆத்மஞானிகளும் அறப் போராட்டமும் என்ற நூல் அமைந்துள்ளது.

வாழ்வைப் போன்றே கல்வியிலும் இந்த வேறுபாடு நோக்கப்படக்கூடாது என்பதை அவர் வலியுத்தி வருகிறார். ஜாமிஆவின் தோற்றமும் செயற்பாடும் விளைவுகளும் இதே சிந்தனையில் இடம்பெற்றுவருவதை அவதானிக்கிறோம். இஸ்லாமிய நோக்கில் அறிவியலுக்கும் மதத்துக்குமிடையில் மேற்குலகில் நிலவுவது போல எத்தகைய மோதலும் நிலவ முடியாது. ஏனெனில் விஞ்ஞானமும் மதமும் ஒன்றையொன்று அணிந்ததாக மனிதனின் இயற்கையிலேயே அமைந்துள்ளன. இஸ்லாம் உருவாக்க முனையும் மனிதனின் இந்த இரண்டு அம்சங்களோடும் தொடர்புடைய அறிவு எத்தகைய முரண்பாடோ மோதலோ இன்றி சமபலநிலையில் தொழிற்படும். ஏனெனில் ஒன்று அவன் இறைவனுக்கு அடிபணிந்து வாழத் துணைபுரிய மற்றது இறை சிருஷ்டிகளின் தன்மை, குணவியல்புகள், பிரபஞ்சத்தில் அதன் செயற்பாடுகள் பற்றிய அறிவைப் பெற தூண்டுகின்றது. அறிவியல் அறிவினதும், ஆத்மீக அறிவினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் விளைவாக இறை நம்பிக்கையும் இறையச்சமும் நிறையப்பெற்ற மனிதர்கள் உருவாவார்கள். இதனையே அல்குர்ஆனின் 35:28ஆம் வசனம் சுட்டிக் காட்டுகின்றது. (இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் பக். 10)

ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று முறைசாராக் கல்விக்குத் துணைபுரியும் பேச்சு, எழுத்து தொடர்பாக கலாநிதி சுக்ரி அவர்கள் தெளிவான கருத்தை முன்வைக்கிறார். எழுத்தாளன் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் இலட்சியங்கள், உணர்வுகள், ஆசாபாசங்கள் பிரச்சினைகள் அனைத்தும் அவனைப் பாதிக்கின்றன. ஆதலால் அவனது எழுத்தில் சமூகம் பிரதிபலிக்கும் சூனியத்திலிருந்து இலக்கியம் படைக்க முடியாது. (முஸ்லிம் எழுத்தாளர் முன்புள்ள பொறுப்பு பக். 9-10) என்று கூறும் அவர், ஒருவனுக்கு பேசக்கூடிய, எழுதக்கூடிய ஆற்றல் இருக்கின்றதென்றால் அவன் எதனையும் பேசவும், எழுதவும் முடியுமென்பது கருத்தல்ல. அது அல்லாஹ் அவனுக்களித்த அமானிதம். ஆதலால் அவனுடைய எழுத்தில், பேச்சில் இலட்சியம் இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் கலை கலைக்காக என்ற கோட்பாடு நிலவி வருகிறது. அவன் சமூகத்திலிருந்து விடுபட்டு நன்றாக உலகை சிருஷ்டித்து அதில் சஞ்சரிக்கின்றான். இதனால் அவனுக்கும் சமூகத்துக்கும் எத்தகையை தொடர்பும் இருப்பதில்லை. இதனை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கொள்கையோடு இலக்கியம் படைக்க வேண்டும் என்பதைத்தான் ஸூரதுஷ் ஷூஅரா எடுத்துக்காட்டுகின்றது. கலை வாழ்க்கைக்காக என்ற கருத்தை முன்வைக்கின்றது. ஓர் ஒழுக்கங்கெட்ட இலக்கியவாதியினால் சமூகத்துக்கு ஏற்படுகின்ற பேரழிவு, ஜெங்கிஸ்கானின் இராணுவத்தால் ஏற்பட்ட பேரழிவை விடப் பயங்கரமானது. (மேற்படி நூல். பக். 20-21)

இவ்வாறே கல்வியோடும், கற்றல் கற்பித்தலோடும் நேரடியாக தொடர்புடையவர்கள் என்ற வகையில், ஆசிரியர்களின் பொறுப்புக்கள் பற்றி அவர் நிறைய எழுதியும், பேசியும் வருகிறார். கல்வியமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், அஹதிய்யா மத்திய சம்மேளனம் போன்ற பல்வேறு மையங்களால் நடாத்தப்படும் ஆசியர்களுக்கான செயலமர்வுகளில் காத்திரமான கருத்துக்களை வழங்கி வருகிறார். இஸ்லாமிய கல்விப் பாடத்திட்டங்களை வகுப்பதிலும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகள், மாணவர்களுக்கான பாடநூல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் ஆலோசனை வழங்குவதிலும் அவருக்கு நிறைய பங்குண்டு. அந்த வகையில் அவரது கல்விப்பணி ஆசிரிய சமூகத்தால் எப்போதும் எதிர்பார்க்கப் படுவதொன்றாகும்.

இஸ்லாம் பாடம் தொடர்பாக அவர்; தெரிவிப்பதாவது, “மதம் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த அம்சமாகும். அது ஒரு பாடமாக போதிக்கப்படுவதால் மட்டும் இஸ்லாம் உருவாக்க விரும்பும் ஒழுக்க, ஆன்மீகப் பண்புகள் பொதிந்த ஆளுமையுடைய மனிதர்களை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே. முஸ்லிம் பாடசாலைகளைப் பொறுத்தவரை அது வகுப்பறைப் பாடமாக மட்டும் அமையாமல் முஸ்லிம் மாணவர்களின்; வாழ்க்கையோடு தொடர்புடைய நடைமுறை அம்சமாக போதிக்கப்படல் வேண்டும். இஸ்லாம் வெறும் பாடபோதனையாக, சிந்தனாரீதியாக அமையாமல் முஸ்லிம் மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய நடைமுறை அம்சமாகப் போதிக்கப்படல் வேண்டும். வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையதாக விளங்கும் வகையில் முஸ்லிம் ஆசிரியரின் குணநலங்கள், பண்புகள், ஆளுமை என்பனவும் முஸ்லிம் பாடசாலைகளின் சூழலும் அமைதல் வேண்டும்”. (இஸ்லாமிய சிந்தனை ஜூலை – செப். 1983) என்பதாகும்.

இவ்வாறு சிந்தனை ரீதியான கருத்துக்களை முன்வைப்பதில் மட்டும் அவர் நின்றுவிடவில்லை. முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புக்களையும் வழங்கி வருகிறார். ஜாமிஆ நளீமீய்யாவின் அபிவிருத்தியில் அவரது பங்களிப்புக்கள் மறைக்க முடியாதவை. அதே நேரத்தில் அந்த வட்டத்துக்கு வெளியே கலாநிதி சுக்ரி அவர்களின் பங்களிப்பை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் 1980ல் உதயமானது.

நளிம் ஹாஜியாருடன் உம்றாச் செய்துவிட்டுத் திரும்பிவரும் வழியில் இருவரும் கராச்சி இன்டர்கொண்டினன்டல் ஹோட்டலில் தங்குகிறார்கள். நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்திய நேரத்தில் நளீம் ஹாஜியாரின் உள்ளத்தில் முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வி தொடர்பாக கவலை மேலெழுகின்றது. அடுத்த படுக்கையில் தூங்க முயன்று கொண்டிருக்கும் சுக்ரி அவர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதன் விளைவாக இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் கருக்கொள்கின்றது.

முஸ்லிம் மாணவர்களின் உயர் கல்விக்காக எவ்வாறு உதவலாம் என்பது பற்றி தொடராக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு 1981ல் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் உருவாகின்றது. அதன் நிருவாகத் தலைவராக கலாநிதி சுக்ரி அமர்த்தப்படுகிறார். முஸ்லிம் பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியை வளர்ப்பதற்காக வார இறுதி நாட்களில் வளவாளர்கள் மூலம் வகுப்புக்களை மாவட்டம் தோறும் நடத்துதல், உயர்கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கல், தொழினுட்பக் கல்லூரி ஒன்றை அமைத்தல் என்ற கருத்திட்டங்களுக்கூடாக கலாநிதி சுக்ரி அவர்களின் தலைமையிலான நிருவாகக்குழு செயற்பட்டது.

இதன் காரணமாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1942 முதல் முஸ்லிம்களின் பல்கலைக்கழகப் பிரவேசம் 1.5% முதல் 2.9% வரையிலிருந்த விழுக்காடு இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் செயற்பாட்டுக்கூடாக  1984ல் 5.5% விழுக்காடாகவும் 1987-88ல் 8.17% விழுக்காடாகவும் உயர்ந்தது. பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கை பற்றிய அனுபவமுடைய கலாநிதி சுக்ரி அவர்களின் பங்களிப்பு, இயக்கத்தை உரிய இடத்துக்கும், உரிய நபர்களுக்கும் நகர்த்துவதில் பெரும் பணியாற்றியுள்ளது எனலாம். 1992ல் இக்ரா தொழினுட்பக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தில் மூன்றாவது மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நளீமிய்யா இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யப் போகின்றது என்பதை நளீம் ஹாஜியார் பிரகடனப்படுத்தினார். அதற்காகத் தூண்டியவரும், துணைநின்றவரும் கலாநிதி சுக்ரி தான் என்பதை எவரும் அறிவர். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையுடனும், பேராசிரியர்களுடனும் தொடர்புகொண்டு, ஆய்வாளர்களைத் தெரிவு செய்து, கட்டுரைகளைத் தொகுத்து, ஆய்வுரீதியான முன்னுரையொன்றை எழுதி “இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக பாரம்பரியத்துக்காக பார்வை” (1986) என்ற நூலை வெளியிடுவதில் கலாநிதி சுக்ரி அவர்கள் பெரும்பங்காற்றியிருப்பதை சமூகம் மறக்கமாட்டாது. (நளீம் ஹாஜியார்: வாழ்வும் மணியும் பக். 152-158) இது ஒரு சமூகப்பணி மட்டுமல்லளூ ஒரு கல்விப்பணியுமாகும்.

இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தன் பரந்த தன்மையை எடுத்துக்காட்டுவதில் கலாநிதி சுக்ரியின் பங்கு தட்டிக்கழிக்க முடியாதது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இஸ்லாம் ஆன்மீகப் பண்புகளை மட்டும் கொண்டதல்ல என்பதை எடுத்துக்காட்டும் அவர், அதற்காதாரமாக இஸ்லாத்துடன் தொடர்பற்றதாகக் கருதப்பட்டுவந்த பல கலைகளையும் அவற்றுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலான தொடர்பையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இஸ்லாமிய அரசியற் கோட்பாடு (13:1) இஸ்லாத்தின் நோக்கில் தொல்பொருளியில் (14:1) முஸ்லிம்களும் பல்கலைக் கழகப் பாரம்பரியமும் (18:3) முஸ்லிம்களும் வரலாற்றுக்கலையும் (20:2) இஸ்லாமிய நோக்கில் ஆய்வு (20:3) ஆய்வுக்கான அவசியமும் ஆய்வுபற்றிய இஸ்லாமிய நோக்கும் (25:6) நாகரிகம் பற்றிய இரு கண்ணோட்டங்கள் (21:1) அல்குர்ஆன் ஆய்வு முறையும், மேற்கத்திய ஆய்வுமுறையும் (22:1) இஸ்லாமிய அழகியற் கோட்பாடும் மேற்கத்திய அழகியற் கோட்பாடும் (22:3) முஸ்லிம்களின் இசைப் பாரம்பரியமும் (23:3) கட்டடக்கலைப் பாரம்பரியமும் அதன் வளர்ச்சியும் (24:1-2) இஸ்லாமிய உளவியலும் மேற்கத்திய உளவியலும் (25:4) போன்ற இஸ்லாமிய சிந்தனையில் வெளியான ஆய்வுக்கட்டுரைகளே இதற்குதாரணமாக எடுத்துக்காட்டலாம். அதே நேரத்தில் இஸ்லாமிய ஆன்மீகப் பண்புகளை விளக்குகின்ற ஆக்கங்களும் வெளியாகியுள்ளன. முஸ்லிம் அல்லாதோருக்குக் குறிப்பாக புத்திஜீவிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பணியும் அவரால் நிகழ்ந்து வருகின்றது. தேசிய, சர்வதேசிய மாநாடுகளில் நிகழ்த்தப்படுகின்ற அவரது உரைகள் இத்துறையில் பெரும்பணியாற்றி வருகின்றன.

இவ்வாறே, நவீன முஸ்லிம் உலகுக்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் முன்மாதிரியாகத் திகழ்ந்த சிந்தனையாளர்களையும் சீர்திருத்தவாதிகளையும் இவர் அறிமுகப்படுத்தி வருகிறார். இஸ்லாமிய சிந்தனைகளில் வெளியான ஷாஹ் வலியுல்லாஹ்வின் பங்களிப்பு (2:3) இமாம் கஸ்லாலியின் பங்களிப்பு (1:4, 2:3) இப்னு தைமிய்யாவின் தஸவ்வுப் கோட்பாடு (9:3) அல்பிரூனியின் மதங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வு (14:3) இப்னு பதூதா (17:1-2) முஹம்மத் அல்கஸ்ஸாலி (18:2) ஜமாலுத்தீன் ஆப்கானி (21:3) இப்னு கல்தூன் (25:3) மாலிக் பின் நபி (24:3-4) அபுல் ஹஸன் அலி நத்வி (22:2) என்ற தலைப்புகளில் இஸ்லாமிய சிந்தளையில் எழுதப்பட்ட ஆக்கங்கள் இதனை நிரூபிக்கின்றன.

எனவே, இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சிந்தனையை வளர்ப்பதில் கல்விப்பணியை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தி, முறைசார், முறைசாரா கல்விமுறைகளுக்கூடாக அதனைப் பரவலாக்கும் முயற்சியிலீடுபட்டு சமயக்கல்வியையும், உலகியற் கல்வியையும் சமநிலையில் வளர்ப்பதற்காக ஆக்கபூர்வமான உழைப்புக்களில் பங்குகொண்டு, இலங்கை முஸ்லிம்; கலாநிதிகளுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கின்ற கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களைப் பாராட்டுவது முஸ்லிம் சமூகத்தின் இன்றியமையாத கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா கலாநிதி சுக்ரி அவர்களின் மறுமை வாழ்வை ஒளியுள்ளதாகவும் கப்ருடைய வாழ்க்கையை சுவர்க்கத்திற்கான பூஞ்சோலையாகவும்  மாற்றியருள வேண்டுமென்று அனைவரும் பிரார்த்திப்போமாக.

எம்.எச்.எம். நாளிர்

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: