கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி என்ற அறிவாளுமை (ஆலவிருட்சம்) அமைதியாக சரிந்தது

0 Comments

எனது அறிவுத் தந்தை, என்னை அறிவால் வார்த்தெடுத்த சிற்பி, எனது உதாரணபுருஷர் (Role Model) கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் மரணச் செய்தி ஓரு பேரிடியாக வந்து சேர்ந்தது. ஒரு நிமிடம் நிலைகுலைந்து, இறைசித்தத்தை மனதிலிருத்திய பின்னர் சுதாகரித்துக் கொண்டு இதனை எழுதுகின்றேன்.

ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி கற்கும் போது அவரின் ஒவ்வொரு செயலாலும் நான் ஆகர்சிக்கப்பட்டேன். அவரின் மிடுக்கான நடை, பணிவான பார்வை, கனிவான பேச்சு, கணீர் என்ற குரல், ஆன்மீக ஈடுபாடு, ஆற்றொழுக்கான எழுத்து, அறிவாளுமை அனைத்துமே எனக்குள் வரித்துக் கொள்ள முடியுமான முன்மாதிரிகளைத் தந்தது. அவரைப் போலவே பேச வேண்டும். அவரைப் போலவே புத்தகமொன்றைக் கையில் வைத்திருக்க வேண்டும். தொலைபேசியில் பதிலளிக்கும் போது கூட அவரைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பேராசை என்னிடமிருந்தது. பலபோது நான் அவரைப் போல் மிமிக்ரி பண்ணியிருக்கின்றேன்.

சூபித்துவ சிந்தனையை அவர் கொண்டிருந்த போதிலும் அவர் தற்காலத்திற்கேற்ற ஆன்மீக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கோட் சூட் போட்ட சூபி என்று அவரை நினைத்துக் கொண்டு ஒரு மேடையில் பேசிய ஞாபகம் இருக்கிறது.

அவரின் ஆற்றொழுக்கான, அமைதியான உரை அனைவரையும் கவரும் வல்லமை கொண்டது. மிக நீண்ட காலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பெருநாள் விசேட உரையாக கலாநிதி சுக்ரி உடைய உரையையே ஒலிபரப்பி வந்தது.

ஒரு முறை எமது அழைப்பின் பேரில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வந்து, இஸ்லாமிய தத்துவம் தொடர்பாக ஓர் அழகான உரையை நிகழ்த்தினார். அவ்வுரை முடிவடைந்ததும் தத்துவஞானத்தை விசேட துறையாக கற்று வந்த ஒரு மாணவன் என்னிடம் வந்து ‘இன்றுதான் தத்துவஞானம் என்றால் என்ன என்று எனக்கு விளங்கியது’ என்றார். அந்தளவிற்கு தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் அவர் பேசுவார்.

அவரைப் போலவே அவரின் எழுத்துக்களும் அமைதியானவை. அறிவுப்பூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அமைந்த அவரின் ஆக்கங்கள் இலகுவாக வாசித்து விளங்கிக் கொள்ள முடியுமானவை.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் 2005ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் ஆரம்ப வெளிவாரி அங்கத்தவராக இருந்து, பீடத்தின் வளர்ச்சிக்காக காத்திரமாகப் பங்காற்றியவர். அதன் கலைத்திட்டத்தை செம்மைப்படுத்துவதில் தனது புலமையை வெளிப்படுத்தியவர். வெளிவாரிப் பரீட்சகராக இருந்து சேவையாற்றியவர்.

அவரைப் போன்ற ஒரு கலாநிதியாக மாற வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அல்லாஹ் அக்கனவை நிறைவேற்றித் தந்தான். அதனை அவரிடம் சொன்ன போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

என்னை உருவாக்கிய இந்த தேசத்தின் புலமைச் சொத்து இன்று (25ஆம் நோன்பு) எம்மை விட்டும் பிரிந்து செல்கின்றது. உலக வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்களாக அவரை வழியனுப்பி வைப்போம். பிரார்த்தனைகளில் அவரை மறவாதிருப்போம். இன்ஷா அல்லாஹ் அவருக்கு சுவர்க்க வாழ்வு கிட்டும்.

கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர்

Leave a Reply

%d bloggers like this: