முஸ்லிம்களின் அறிவியல் பாரம்பரியம்.

  • 189
கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவையோற்றி 1985 ஆம் ஆண்டு வௌியிட்ட “அஸ்-ஸாதாத்  பொன் விழா மலர்”ரில் வௌியிடப்பட்ட கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி  அவர்களின் இஸ்லாமிய நாகரீக ஆய்வுக் கட்டுரை.

அரபுத் தீபாற்பத்தில் ஓர் ஆத்மீக சக்தியாக எழுச்சியுற்ற இஸ்லாம் குறுகிய ஒரு நூற்றாண்டு காலப்பிரிவில் மாபெரும் கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியம் ஒன்றை உருவாக்கும் சக்தி வாய்ந்த நாகரிகமாக வளர்ச்சியடைந்த சம்பவம் மனித இன வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான ஒரு சம்பவமாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலப் பிரிவுவரை அறிவியலின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் தாக்கத்தினை அவதானிக்க முடிகின்றது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு முன்னர் விஞ்ஞானத்தினதும் அறிவியலினதும் வெளிப்பாட்டு ஊடகமாக அரபுமொழியே விளங்கியது. அரபு மொழியானது அரபு முஸ்லிங்களுக்கும், அரபியல்லாத இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் மட்டுமன்றி, இஸ்லாமிய நாகரிகத்தின் செல்வாக்கிற்குற்பட்ட அனைத்து இனங்களினதும் பண்பாட்டு மொழியாக விளங்கியது. யூதர்கள்-கிறில்தவர்கள், பாரசீகர், பேர்பர் இனத்தவர், துருக்கியர் அனைவரும் இப்பிரிவில் அடங்குவர்.

அறிவுப்பணி என்பது எந்த இனத்தினதோ சமூகத்தினதோ பிறப்புரிமையன்று என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும். போர்கள், இயற்கையின் அழிவுகளின் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் நிலையாக ஒரிடத்தில் தங்கிவாழும் அமைதியான சூழல் அறிவுப்பணிக்கு அவசியமாகும். அமைதியான குழலும் செல்வ வளர்ச்சியும் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லாக் காலப்பிரிவிலும், சிந்திக்கும் ஆற்றலும், ஆர்வமும் படைத்த உள்ளங்கள் சிறப்பாக ஆய்வு நிகழ்த்தும் வாய்ப்பை அளித்துள்ளன. எனவே எந்த ஒரு இனம் நீண்ட காலம் அமைதியான, வளமான வாழ்வைப் பெறும் வாய்ப்பை அடைகின்றதோ, அந்த இனம் அறிவு வளர்ச்சிக்கும் கூடுதலான பங்களிப்பை செய்துள்ளது. முஸ்லிம்கள், அவர்கள் அரசியல் வாழ்வின் மிக உன்னத நிலையில் இருந்த காலங்களில் கூட அமைதியான நிலை மிகக்குறுகியதாகவே இருந்தது. ஆட்சி மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் மிகத்துரிதமாகவே நிகழ்ந்துள்ளன. ஆனால் முஸ்லிம் ஆட்சியின் சிறப்பம்சம் என்னவெனில் புதிதாக ஓர் ஆட்சி தோன்றி, அரசியல் ஸ்திர நிலையும் அதனடியாக பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டவுடன் விவசாயம், வணிகம் என்பனவற்றிற்குத் தூண்டுதல் அளிக்கப்பட்டு, அறிவியலும், கலைகளும் இலக்கியமும் வளர்ச்சியடைவதை நாம் காண முடிகிறது. இதன் காரணமாக முஸ்லிம்கள் அறிவியல் கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு மிக உன்னதமான பணியைப் புரிந்துள்ளனர்.

முஸ்லிம் வரலாற்றறிஞர்கள், அறிவியல் மேதைகள், சிந்தனையாளர்கள் எண்ணற்ற, நூல்களை உருவாக்கி அறிவுப் பணிபுரிந்தனர். இந்நூல்களில் இலட்சக்கணக்கானவை 1258ல் பக்தாதை மங்கோலியத் தாத்தாரியர் படை எடுத்த போதும், ஸ்பெயினை கிறிஸ்தவர் கைப்பற்றிய போதும் அழிக்கப்பட்டன. இப்பேரழிவிலிருந்து தப்பிய நூல்கள் மிகச் சிலவே, இன்று பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆயிரக்கணக்கானவை இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவும், சுவடிகளாகவும் லண்டனிலுள்ள பிரிடிஷ் மியூசியம், பாரிஸிலுள்ள BIBILOTHICA NATION ALE PARIS என்னும் நூதனசாலை நூல் நிலையம், துருக்கி, டமஸ்கஸ் கைரோ, ரபாத் ஆகிய இடங்களில் காணப்படும் நூல்நிலையங்களில் காணப்படுகின்றன. இத்துறையில் ஐரோப்பிய அறிஞரான கலாநிதி ஜோர்ஜ் ஸார்டன் (GEORGE SARTON) செய்துள்ள பணி அளப்பரியதாகும். அவர் விஞ்ஞான வளர்ச்சி முஸ்லிம் அறிஞர்கள் ஆற்றிய, அவர்கள் இத்துறையில் உருவாக்கிய நூல்களை வகைப்படுத்தி தனது “அறிவியலில் வரலாறும் தத்துவம்” (HISTORY AND PHILOSOPHY OF SCIENCE) எனும் நூலில் விளக்கியுள்ளார்.

அப்பாஸியர் காலப்பிரிவே முஸ்லிம்களின் அறிவுப் பணியில் உச்ச நிலையாக அமைந்தது. கிரேக்க பாரசீக, சமஸ்கிருத மொழியில் காணப்பட்ட அறிவியல் சார்ந்த முக்கிய நூல்கள் அனைத்தும் இக்காலப் பிரிவில் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் அறிஞர்கள் இந்நூல்களை விமர்சன நோக்கில் ஆராய்ந்து விளக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவுடன் பல்வேறு கலைகள் சார்ந்த நூல்களை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டானது “முஸ்லிம் நூற்றாண்டு எனக் கணிக்கத்தக்க வகையில் விரிவான அளவில் இப்பணி நடைபெற்றது. இக்காலப் பிரிவில் முஸ்லிம் அறிஞர்களே நாகரிகத்தின் தலைவர்களாக விளங்கினர். கணிதம் வானவியல், தத்துவம் போன்ற துறைகளிலும், அவை சார்ந்த ஏனைய கலைகள் பற்றியும் அல் – கிந்தி, அல் குவரிஸ்மி, அல்பர்காணி உட்பட எண்ணற்ற அறிவு நூல்களை உருவாக்கினர். வான நூல் குறித்து அல் பர்கானி (AL FARGHANI)யின் நூல் பிற்காலப் பிரிவில் ஹிப்ரு மொழியிலும், இலத்தின் மொழியிலும் பெயர்க்கப்பட்டு இத்துறையில் பிரபல்யம் வாய்ந்த நூலாக பல நூற்றாண்டு காலம் விளங்கியது – அபு மஃஷர் (ABU MASHAR) எனும் புவியியல் அறிஞர் சந்திரனுக்கும் கடலின் வற்றல் பெருக்கத்திற்குமிடையே உள்ள தொடர்பை அவரது நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

மத்தியகாலப் பிரிவின் புகழ்பூத்த தத்துவ ஞானிகள் அறிவுத்துறையில் பல்வேறு கலைகளையும் பொதிந்த கலைக்களஞ்சியங்கள் போன்று காட்சி நல்கின்றனர். ஐரோப்பாவி RHAZES எறும் பெயரால் பிரபல்யம் அடைந்த அடியார் அபுபக்ர் அர்றாஸி (கி.பி. 952) மத்திய காலப்பிரிவின் தலைசிறந்த மருந்துவ அறிஞராக விளங்கியது மட்டுமன்றி, இரசாயனம், பௌதிகம் பற்றிய துறைகளிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். சின்னம்மை (MEASLES) பெரியம்மை (SMALL FOX) குறித்து அவர் எழுதிய “கிதாபுல் (ஜூதரி வல் ஹஸ்பாவஹ்) ஸஸமுவல் ஜூத்ரி” எனும் நூல் அறிவியல் சார்ந்த சிறந்த ஆய்வு முயற்சியாகும். LAVIOSIER எனும் அறிஞரின் கண்டுபிடிப்பிற்கு முன்னர் உலோகங்களின் (METALS) தன்மைகள் (PROPERPIES) உட்பொதிவுகள் (CONSTITMTION) பற்றிய அவரது கருத்துக்கள் உலோகங்களின் ரசாயன அடிப்படைகள் குறித்து பல புதிய கருத்துக்களை உணர்த்தின.

இப்னு யூனுஸ், இப்னு ஹைதம் (கி.பி. 1039), அல்பெருனி (1048), இப்னுஸீனா (1037), உமர்கையாம் (1123), போன்ற அறிஞர்கள் இத்துறைகளில் ஆற்றிய பங்களிப்பு மகத்தானாதாகும். “காநூன் மஸஅதி” எனும் நூலில் பொதிந்துள்ள அல்பெரூனியின் கருத்துக்கள் வானவியல் அறிஞர்கள் வரிசையில் மிக உன்னத இடத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. மலர்களில் காணப்படும் இதழ்களின் எண்ணிக்கை, நீருற்றுக்களில் நீர் உயர்ந்து செல்லல், சிந்துந்தியின் பழமையான வரலாறு ஆகியன பற்றி அல்-பெரூனி தெரிவிக்கும் கருத்துக்கள் அவரை, இயற்கையை மிகக்கூர்ந்து அவதானித்து பல அறிவியல், வரலாற்று உண்மைகளை கண்டறிந்த அறிஞராக அவரைக் காட்டுகின்றன.

இப்னுஸினாவின்  “கானூன் பித்–திப்” எனும் நூல் எண்ணற்ற நூற்றாண்டுகள் மருத்துவக் கலையின் மகத்துவம் மிக்க ஒரே நூலாகக் கருதப்பட்டது. தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் முறையையும் அவர் கண்டுபிடித்தார். இப்னு ருஷ்த் அரிஸ்டோட்டலின் தத்துவ ஞானியாக மட்டுமன்றி, கண்ணுக்குப் பார்வையை வழங்குவதில் கண்ணின் மிகமுக்கிய பகுதியான RETINA வகிக்கும் பங்கை விளக்கிய மருத்துவ மேதையாகவும் விளங்கினார். வான நூல் துறையில் முஸ்லிம்கள் மகத்தான பங்களிப்பை செய்துள்ளனர், மரகாவில் (MARAGHA) ஹலாகுஹானின் அவதான நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த நாஸிருத்தின் தூஸி (கி.பி. 1201-1274) இத்துறை பற்றி பல அழகான நூல்களை எழுதினார். இந்நூல்களுல் “அல்முதவஸ்ஸிதாத்” எனும் நூல் புகழ் பெற்றதாகும். அவரது மாணவராக விளங்கிய குதுபுத்தீன் ஷீராஸீ டெஸ்கார்டிஸ் (DESERTES) என்னும் அறிஞருக்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே வானவில்லின் (RAINBOW) தன்மை பற்றி மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார்.

இப்னு ஹப்கல் (கி . பி . 925) இப்னு ஜுபைர் (1192) இப்னு பதுதா (1353) ஆகிய அரபுப்பயணிகளின் நூல்கள் பல்வேறு இனங்கள், புவியியல் தன்மைகள், பொருளா தார அமைப்புகள் பற்றிய பல முக்கிய, அரிதான உண்மைகளை உள்ளடக்கியுள்ளன . மைப்பியல் ஸஹ்ராவி (அபுல் காஸிம் அஸ் ஸஹ்ராவி) எனும் அறிஞர் மனிதனின் உடல் (ANATOMY) பற்றிய ஆய்வுத்துறையில் புகழ்பெற்ற அறிஞராக விளங்கினார். இவரது “அத்- தஸ்ரிப்” என்ற நூலில் இது குறித்த பல முக்கிய கருத்துக்கள் காணப்படுகின்றன இந்நூல் 1947ல் வெனிஸிலும் 1498ல் ஒக்ஸ்போட்டிலும் பதிப்பிக்கப்பட்டது. இப்னு நபீஸ் கண் நோய்கள், உணவின் சீரணம் பற்றிய பல முக்கிய உண்மைகளை விளக்கியதோடு தனது “ஷரஹ் தஷ்ரீஹ் இப்னு ஸீனா” எனும் நூல் மனித உடலில் இருதயத்தின் பங்கு பற்றியும், இரத்தச்சுற்றோட்டம் பற்றிம் விளக்கியுள்ளார்.

முஸ்லிழ் அறிஞர்கள் தாவரங்கள் பற்றிய ஆய்விலும் கவனம் செலுத்தினர். அபுல் அப்பாஸ் அந் – நபாதீ, இப்னுல் பைதார் ஆகியோரது மருத்துவ நூல்கள் தாவரங்கள் பற்றிய மிக அரிய உண்மைகளை உள்ளடக்கியுள்ளன. பல முஸ்லிம் மருத்துவ மேதைகள் மருந்து மூலிகைகள் பற்றிய ஆய்வுகளுக்காக ஆபிரிக்க கரைகளிலும், சிரியா செங்கடல் பகுதிகளிலும் பல பயணங்களை மேற்கொண்டனர். ஸ்பைனில் முஸ்லிம்களால் தொடங்கிவைக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான விவசாய முறையை ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவியது. இப்னுல் அவ்வாம் எழுதிய விவசாயம் பற்றிய “அல்-பிலாஹா” என்னும் மண்ணின் தன்மைகள், பசளைவகைகள் பற்றிய பல முக்கிய விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது. அல்-அஸ்மாயின் ஒட்டகத்தைப் பற்றிய “கிதாபுல் இபில்” என்னும் நூலும் குதிரை பற்றிய “கிதாபுல் கைல்” என்னும் நூலும் மிருகவியல் பற்றிய மிக அரிய குறிப்புகளைக் கொண்டுள்ளன. அத் – திபாசியின் “ஜவாஹிருல் அப்கார” என்னும் நூல் முஸ்லிம்கள் கனிப்பொருட்கள் (MINERALS) பற்றிய ஆய்வில் செலுத்திய அக்கரைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.

இத்தகைய மகத்தான ஒரு அறிவியல் பாரம்பரியத்தின் வாரிசுகளான முஸ்லிம்கள் மத்திய காலப்பிரிவில் அறிவுலகின் தலைமைப்பீடத்தைப் பெற்றிருந்தனர். அறிவுத்துறையின் எல்லாப் பிரிவுகளும் அவர்களது கைவண்ணத்தால் பொலிவுற்றது. குர்ஆனிய நோக்கில் உலகையும், அதன் பொருட்களையும், ஆழ்ந்து ஆராய்ந்த அவர்கள் அதில் மகத்தான இயற்கையின் இரகசியங்கள் பொதிந்திருப்பதைக் கண்டனர்.  அதில் விண்ணையும் மண்ணையும் வியத்தகு வான் வெளியையும் படைத்த வல்ல அல்லாஹ்வின் பேராற்றலையும் கண்டு வியந்து அவனைப் போற்றினர். அங்கு அறிவியலும், ஆத்மீகமும், விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் ஆராய்ச்சியும், இறைபக்தியும் ஒன்றாக இணைந்து அறிவியலின் வரலாற்றில் ஒளி வீசியது. இன்று ஆத்மீக அடிப்படையற்ற விஞ்ஞானமும் அறிவு வளர்ச்சியும், மனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயுள்ள உறவைத் துண்டித்து  அவனை லோகாயத வாழ்வில் சிக்கிவைத்துவிட்டது. அதனால் மனிதனின் மதிப்பீடுகள் தடம்புரண்டு மனித வாழ்வில் பேரழிவின் பாதையில் ஒவ்வொரு கணமும் நகர்ந்து கொண்டுள்ளது.

தமது வரலாற்றுப் பாரம்பரியத்தின் வழி நின்று நாம் செயல்பட்டு மீண்டும் அறிவியலையும், ஆத்மீகத்தையும் இணைந்து உலகை அல்லாஹ்வின் அருள்நெறிப் பாதையில் இட்டுச் செல்லும் மகத்தான பொறுப்பு முஸ்லிம்களைச் சார்ந்ததாகும். எமது வரலாற்றுப் பாரம்பரியம் இதற்கான தூண்டுதலை எமது இளஞ் சந்ததிகளுக்கு அளிக்குமாக.

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி
B.A. Hons (Cey), Ph.D (Edin)
தொகுப்பு: இப்னு அஸாத்

கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவையோற்றி 1985 ஆம் ஆண்டு வௌியிட்ட “அஸ்-ஸாதாத்  பொன் விழா மலர்”ரில் வௌியிடப்பட்ட கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி  அவர்களின் இஸ்லாமிய நாகரீக ஆய்வுக் கட்டுரை.…

கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவையோற்றி 1985 ஆம் ஆண்டு வௌியிட்ட “அஸ்-ஸாதாத்  பொன் விழா மலர்”ரில் வௌியிடப்பட்ட கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி  அவர்களின் இஸ்லாமிய நாகரீக ஆய்வுக் கட்டுரை.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *