சீறற்ற ஸகாத்தால் சீரழியும் சமூகமும் சீர் திருத்தப்பட வேண்டிய ஸகாத் விநியோகமும்.

ரமழான் மாதம் 27 ஆம் (21.05.2020) நோன்பு என்பது பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் புனிதமாக மதிக்கப்படும் ஓர் தினங்களில் ஒன்றாகும். சமூக ஒழுங்கில் முஸ்லிம்களால் அடிப்படைக் கடமைகளான தொழுகை¸ நோன்பு¸ ஸகாத் என்பன ஓரே தினத்தில் நிறைவேற்றப்படும் ஓர் தினமாகும். 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக் காரணமாக முக்கியமாக ஒற்றுமை¸ அடிக்கடி சமூக ஒன்று கூடல் என்பவற்றுக்கு பெயர் போன முஸ்லிம் சமுகத்திற்கு, இவற்றை தனிமையில் நிறைவேற்ற வேண்டியேற்பட்டுள்ளமை கவலையான விடயாகும். என்றாலும் நேற்றைய தினம் (21.05.2020) பதிவாகியிந்த 4 மரணங்களில்¸ தன்னுயிரை மாய்த்து இன்னொரு உயிரை காப்பாற்றிய வீரன் என்று ஓர் மரணத்தை நினைத்து சந்தோஷப்படும் அதேவேளை¸ இஸ்லாத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவென ஒருவாக்கப்பட்ட ஸகாத்¸ ஸதகா கடமைகளை முறையாக நிறைவேற்றாமையினால் மூன்று உயிர்களை இழந்தோம் என கவலைப்படுகிறேன்.

இத்தருணத்தில் ஸகாத்¸ ஸதகா விடயத்தில் நாம்¸ முஸ்லிம் சமுகத்தில் உள்ள தனவந்தர்களையும்¸ ஏழைகளையும் குற்றாவாளிக் கூண்டில் வைக்காமல்¸ முஸ்லிம் சமுகத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டும்.

ஸகாத் என்றால் என்ன?

இஸ்லாமானது ஐம் பெரும் கடமைகள் மீது உருவாக்கப்பட்டுள்ள ஓர் மார்க்கமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது எழுப்பட்டுள்ளது.

  1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி மொழிவது.
  2. தொழுகையை கடைபிடிப்பது.
  3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.
  4. (இயன்றோர் இறையில்லம் கஃபாவில்) ஹஜ் செய்வது.
  5. ரமழானில் நோன்பு நோற்பது.

(புஹாரி 08)

மேற்குறிப்பிட்ட கடமைகளுல் அல் – குர்ஆனில் பல இடங்களில் தொழுகையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ள, செல்வந்தர்களின் மீது கடமையாக்கப்பட்ட ஓர் வணக்கமே ஸகாத்தாகும். இது பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள். ஸகாத்தையும் கொடுங்கள் (2:110)

ஸகாத் என்பது முஸ்லிம்களின் சொத்தின்/ செல்வத்தின்/ வளங்கள் மீது அல்லாஹ் விதியாக்கியுள்ள கடமையாகும். அதாவது முஸ்லிம்களின் வளங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில்¸ நிஸாபுடைய அளவை அடைந்தால் அவற்றில் குறிப்பட்ட சதவீதத்தை¸ குறிப்பிட்ட சாரார் மீது வழங்கும் நடவடிக்கையாகும்.

இஸ்லாம் ஆன்மீகத்தை மாத்திரம் நோக்காக கொண்ட மார்க்கமல்ல. ஆன்மீக¸ லௌகிக அபிவிருத்தியை இலக்காக கொண்ட மார்க்கமாகும். அவ்வகையில் உலகில் பொருளாதார சமனிலையை ஏற்படுத்தவும், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள மிக முக்கியமான கடமையே ஸகாத்தாகும். எனவே, ஈருலக நலன்கள் நிறைந்த ஸகாத்தை தகுதிபெற்ற அனைத்து முஸ்லிம்களும் ஆண்டுதோறும் முறையாக கணிப்பிட்டு வழங்க வேண்டும்.

ஸகாத் பெறத் தகுதியானவர்கள்

ஸகாத் செல்வந்தர் மீது கடமையாகும். அதனை யார் யாருக்கு விநியோகிக்க வேண்டும் என்ற வழிகாட்டாலும், அதனை யார் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டாலும் இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் ஸகாத் பெறத்தகுதியானவர்கள் பற்றி தெரிவிக்கையில்¸

(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும்¸ ஏழைகளுக்கும்¸ ஸகாத் வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்¸ புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும்¸ அடிமை விடுதலை செய்வதற்கும்¸ கடனில் மூழ்கியவர்களுக்கும்¸ இறைவழியில் செலவிடுவோருக்கும்¸ வழிப்போக்கருக்கும் உரித்தானதாகும். இது அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும் (9:60)

ஸகாத்தின் சமூகக் கட்டமைப்பு

ஸகாத் விடயத்தில் இன்று சமுகத்தில் முஸ்லிம் கிராமங்களிலும் பிரதான நகர்களிலும் உள்ள நடைமுறைகள் பின்வருமாறுதான் உள்ளது.

ஸகாத்¸ ஸதகா நோன்பில் மாத்திரமே வழங்கப்படும் நடைமுறையுள்ளது. ஆனால் அது தவறு ஒவ்வொரு வியாபாரியும் தமது வியாபாரத்தின் ஒவ்வொரு ஆண்டின் முடிவில் வருமானக்கூற்று¸ நிதிநிலமைக்கூற்று தயாரித்து அதனூடாக ஸகாத்தைக் கணித்து ரமழான் மாதம் வரை காத்திருக்காமல் உடன் வழங்கிட வேண்டும்.

அவற்றை அறுவடை செய்யும் போது¸ (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தை (ஸகாத்) கொடுத்து விடுங்கள். (6:141)

அதாவது வியாபரத்தின் அறுவடையான இலாபம் கிடைத்தவுடன் ஸகாத்தை வழங்கிட வேண்டும்.

குறிப்பாக இன்று காலி¸ மாத்தறை¸ கொழும்பு போன்ற பிரதான நகர்களில் உள்ள இன்னொரு நடைமுறையுள்ளது. ஏழைகளும் வறியவர்களும் செல்வந்தர்களின் வீடுகளை நாடிச் செல்ல வேண்டும். அவ்வாறு நாடிச் செல்வோருக்கு கொடுக்கும் நடைமுறையுள்ளது. ஆனால் இஸ்லாம் பிச்சை கேட்கும் சமுகத்தை உருவாக்கும் இலக்கையுடைய சமூகமல்ல.

இஸ்லாம் எதிர்பார்க்கும் ஸகாத்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம்.’’ என ஸூபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1471)

இவ்வாறு குறிப்பிட்டுள்ள நபி (ஸல்) அவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் உதவி கேட்ட வந்த ஒருவருக்கு சுய தொழிலொன்றை ஆரம்பிக்கும் விதமாக “கோடாரியொன்றை வாங்கி¸ காட்டுக்கு சென்று விறகு வெட்டி வந்து விற்பனை செய்யுமாறு வழிகாட்டியுள்ளார்கள்.

ஸகாத் வசூலிக்கும் பணி

அதவாது இங்குள்ள நடைமுறைகளைப் பார்க்கும் போது செல்வந்தர்கள்¸ நேரடியாக ஏழைகளிடம் ஸகாத்தை வழங்கும் நடைமுறையுள்ளது. அது தவறல்ல ஆனால் அதனை விடச் சிறந்த நடைமுறை அல்- குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளது.

அதாவது ஸூறா தவ்பாவின் (9) 60 ஆம் வசனத்தின் படி ஸகாத் பெறத் தகுதியுடைய ஓர் கூட்டமாக ஸகாத் வசூல் செய்யும் ஊழியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிகாட்டல் பின்வருமாறு உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும் படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால்¸ அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான். என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகிற ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான். என அவர்களுக்க அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.’’ இதை முஆத் இப்னு ஜபல்(ரலி) யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1496)

அதாவது இங்கு ஸகாத் வசூலித்து விநியோகிக்கும் நபராக யமன் நாட்டுக்கு அனுப்பட்ட ஆளுனர் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் யமன் நாட்டில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடைத்தரகாக செயற்பட்டுள்ளார்கள்.

எனவே, இந்த வழிகாட்டாலுக்கமைய தனிப்பட்ட ரீதியில் ஸகாத்தை வழங்காமல், அதனை கூட்டாகவும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்த ஸகாத் வசூல் செய்யும் ஊழியர்களை நியமிக்க வேண்டும். மேலும், ஸகாத்தை நிறுவன மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வகை ஸகாத் இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியில்லை. என்பதால், நடைமுறைப்படுத்தக் கஷ்டம் எனக் கூறமுடியாது. ஏனேனில் ஓரே தலைமைத்துவத்தின் கீழ் இல்லாவிடினும் ஒரு ஜமாத்தின் தலைமைத்துவத்தின் கீழ் அல்லது ஓர் பள்ளி நிருவாகத்தின் தலைமைத்துவத்தின் கீழ்தான் முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அத்தலைமைத்துவத்தினூடாக இவற்றை நடைமுறைப்படுத்த முடியும். தற்போது கிழக்கு மாகாணத்தில் சில பள்ளிவாசல்களில் இவ்வாறு கூட்டு ஸகாத் நடைமுறைப்படுத்தப்படுவது ஓர் முன்னேற்றகரமான விடயமாகும். கவலையான ஓர் விடயமும் உள்ளது. இன்று சில தனிநபர்கள் தமது சொந்த நலனுக்காக குறிப்பாக கொரோனா காலத்தில் தாம் ஸகாத்¸ ஸதகாகளை வசூலித்து விநியோகிப்பவர் எனக் கூறி நிதி மோசடிகளில் ஈடுபடுவோரும் உள்ளனர். எனவே தனிநபர்களுக்கு பதிலாக சட்ட அங்கீகாரமுள்ள பள்ளி வாசல் ஜமாத்கள் அல்லது கிராம சேவகர்களுடன் ஓர் நிறுவனம் (பைத்துல்மால்) ஊடாகத்தான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஸகாத்தின் நோக்கம்

தொழுகையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ள ஸகாத் கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பயன்களை பற்றி அல்-குர்ஆனில் கூறும் போது பின்வருமாறு கூறியுள்ளான்.

அல்லாஹ்வின் உவப்பைப் பெற வேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் ஸகாத் அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர். (30:39)

உங்களில் உள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்கு (இவ்வாறு) பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது. (59:07)

மேற்குறித்த அல் குர்ஆன் வசனங்களின் படி ஸகாத் கொடுப்பதன் மூலம் செல்வம் சமூகத்தில் பங்கிடப்படுவதுடன்¸ அதனூடாக பொருளாதரம் அபிவிருத்தியடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் செல்வந்தர்கள் தனியாகவோ¸ கூட்டாகவோ ஸகாத் வழங்கினாலும் இங்கு நாளுக்கு நாள் ஸகாத் பெறத் தகுதியானவர்கள் அதிகரிக்கின்றதேயொழிய ஏழைகளின் வாழ்வில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஏற்படுவதை அவதானிக்க முடிவதில்லை

நபி (ஸல்) அவர்களோ திடகாத்திரமுள்ள ஏழைகள் உதவி கேட்ட சந்தர்ப்பங்களில் ஏழைகளின் வாழ்வில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தொழிலொன்றுக்கான (விறகு வெட்டுதல்) வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.

இன்று நடைமுறையில் ஸகாத் விநியோகம் பின்வருமாறுதான் இடம்பெறுகிறது. அதாவது செல்வந்தரொருவர் 100¸000.00 ஸகாத்தாக வழங்க வேண்டும் எனில் அதனை 1¸000.00 வீதம் 100 பேருக்கு பகிர்ந்தளிக்கின்றனர். இவ்வாறு 1¸000.00 பெறும் நபரொருவருக்கு அப்பணம் அன்றைய உணவுச் செலவுக்கே அது செலவாகின்றது. இதனால் குறித்த ஏழையின் ஒருநாள் வாழ்வுதான் ஒளிமயமாகிறது. ஆனால் இன்று அதே ஸகாத் விநியோகம் மூன்று ஏழைகளின் உயிரை பலியேடுத்து¸ கொரோனா அவசரகால சட்டத்தை மீறியோர் என்று குற்றவாளிக்கூண்டில் முஸ்லிம்களை ஏற்றியுள்ளது.

ஸகாத் விநியோகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள்

இச் சந்தர்ப்பத்தில் ஸகாத் விநியோகத்தை எவ்வாறு நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் விதத்தில் விநியோகிக்கலாம் என அவதானிப்போம்.

முதலாதாக தனியாக ஸகாத் விநியோகிப்போர் அதனை 100 ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டாம். மாறான ஓராண்டுக்கு ஓர் ஏழையின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்தும் விதத்தில் ஓர் ஏழையை தெரிவுசெய்து வழங்கவும். அதனை பின்வருமாறு நடைமுறைப்படுத்தலாம்.

இன்று சமுகத்தில் கற்றல் ஆளுமை இருந்தும் உயர்கல்வி கற்க வசதியற்ற பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவ்வாறான மாணவர்களை தத்தமது ஊரிலுள்ள பாடசாலை அதிபரிடம் அல்லது ஊரில் உள்ள கற்பித்தல் துறைசார்ந்தவர்களிடம் கேட்டு அறியலாம். உதாரணமாக தற்போது ஸகாத் வழங்க வேண்டிய ஒருவருக்கு கடந்த 2019 ஆம் சாதாரணப் பரீட்சைக்கு தோற்றி உயர்கல்வியை தொடரவுள்ள மாணவர்களில், திறமையுள்ள வறிய மாணவனை அதிபரூடாக அறிந்து, குறித்த மாணவன் மற்றும் பெற்றோர்களுடன் கதைத்து, அம்மாணவன் விரும்பும் துறையை அறிந்து கற்பிப்பதற்கான ஏற்பாடு செய்யலாம்.

அதாவது இங்கு உயர் கல்வி கற்கும் போது மேலதிக வகுப்புகளுக்கும்¸ விடுதியில் தங்குவதாக இருந்தால் விடுதிக் கட்டணச் செலவை மாதந்தம் குறித்த மேற்பார்வையாளர்களுக்கு¸ நேரடியாக வழங்க முடியும். அவ்வாறே ஒவ்வொரு தவணை முடிவிலும் மாணவனின் கற்பித்தல் செயற்பாட்டை பற்றியும் குறித்த செல்வந்தன் மேற்பார்வை செய்ய வேண்டும்.

இன்று சமுகத்தில் இன்னொரு பிரச்சினைதான் உயர் கல்வி கற்று பட்டதாரிச் சான்றிதழ் பெற்றாலும் வேலையில்லாத திண்டாட்டம். அதாவது குறித்த நபர்களிடம் ஓர் தொழிலை செய்யும் ஆளுமையிருந்தும் அவர்களிடம் அதற்கான நிதியிருக்காது. எனவே, இவ்வகை இளைஞர்களை இனங்கண்டு. அவர்களுடன் கலந்துரையாடி, தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்க நிதி உதவியை ஸகாத் பணத்தினூடாக வழங்க முடியும்.

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டு பல குடும்பங்கள் உள்ளது. பொதுவாக பெண்களுக்கு சிற்றுண்டி சமைத்தல்¸ தையல் கலை தெரிந்திருக்கும். எனவே பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்களை இனங்கண்டு அத்துறைசார்ந்த தொழிலை ஆரம்பிக்க நிதி வழங்கலாம்.

இன்று சமுகத்தில் தொழில் செய்ய சக்தியற்ற முதிய ஆண்களும்¸ பெண்களும் கிராமங்களில் தன்னந்தனியாக வாழ்வோர் உள்ளனர். அவ்வாறான தனிநபர்களை இனங்கண்டு ஸகாத் பணத்தைக் கொண்டு மாதமாதம் உலர் உணவுகளை வழங்கவும் மருத்துவச் செலவுக்கும் வழங்கலாம்.

சமுகத்தில் சிலருக்கு தொழிலிருந்தும் தமக்கு கிடைக்கும் வருமானம் மூலம் தமது வீடுகட்டும் வேலைகளை பூரணப்படுத்த முடியாமல் உள்ளனர். அவ்வகை குடிசைகளிலும்¸ பாதியளவில் கட்டப்பட்ட வீடுகளையும் இனங்கண்டு அவற்றை பரிபூரணப்படுத்தி வழங்கலாம்.

செல்வந்தர்களே! இனியும் இவ்வாறான பரிதாப மரணங்கள் ஏற்படாமல் இருக்க உங்கள் ஸகாத் பணங்களை மேலுள்ள விதங்களில் வழங்குவது பற்றி சிந்தியுங்கள். ஔிமயமான முஸ்லிம் சமூகத்தை உருவாக்கும் நிதி உங்களிடம்தான் உள்ளது.

ஸகாத் பற்றிய மேலதிக வாசிப்புக்கு

Ibnuasad

Article of Ibnuasad

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: