என் அன்புத் தோழியே!

அன்று ஒரு நாள் நீயும் நானும்
தென்னை மரத்தடியில் அமர்ந்து
சிரித்துப் பேசி தேநீர் அருந்தியது
ஞாபகம் இருக்கிறதா?

அன்று நம் நட்பைக் கண்டு
தென்னை மரத்துக்கு கூட
பொறாமை வந்து விட்டது போலும்

அதனால் தானே அதன்
ஓலைகளை உதிர்த்து விட்டது
நாம் இருவரும் இரண்டு திசையில்
ஓட வேண்டும் என்பதற்காக

ஆனால் இறுதியில் என்ன ஆனது?
நீயும் நானும்
கைக் கோர்த்து கொண்டு
தானே பதறியடித்து ஓடினோம்

ஐயோ பாவம்
தென்னை மரம்
ஏமாந்து விட்டது

அதோ!
அழகாக வடிவமைக்கப்பட்ட
ஓர் அழகிய கூடையை
நீ எனக்கு பரிசளித்தாயே

என்ன இது
தென்னோலைக் கூடை தானே!
ஐயோ நாங்கள் தான்
இப்போது ஏமாந்து விட்டோமடி!

சிந்துத்து பாரடி!
தந்திரமாக தென்னை
நம் நட்புக்குள் இணைந்ததை
நீ இன்னும் அறியவில்லையா!

இது என்ன புதுமையடி
நாம் தோற்கவில்லை தோழியே!
தென்னையின் நட்பு தான்
இப்போது வென்று விட்டது

நீ ஒன்றை மட்டும்
அறிய வேண்டுமடி
உண்மையான நட்புக்கு
என்றும் தோல்வி இல்லை!

இன்று நாம் தென்னையின்
தோள் சாய்ந்து உறவாடுவது
கனவா நனவா என்று
புரியவில்லை எனக்கு!

தென்னை நமக்கு தந்த
அன்புப் பரிசு தான்
இந்த இளநீர்

என்ன ஒரு பாசம்
அந்த அஃறிணை ஜீவனுக்கு
அதன் மனம் போல
இந்த இளநீரும் குளிர்ந்ததே.

அதன் குளிர்ச்சியால்
நம் உள்ளங்களும் குளிர்ந்ததை
நீ அறிவாயோ?

தோழி நட்புக்கு பல
இலக்கணங்கள் இருக்கலாம்.
ஆனால் நட்பின்
முதல் இலக்கணம்
அன்பு மட்டுமே!

நீ இன்னொரு செய்தியை
கேள்விப் பட்டாயா தோழி!
இன்று உலகலவில் சொல்லும்
ஒரு வார்த்தை என்ன தெரியுமா!

“அன்பு ஒன்று தான் அநாதை”
என்று பலரும் சொல்வதை
நீ கேட்கவில்லையா?

இதை எப்படி நான் ஏற்பது தோழியே!
பதில் கூறு
அன்பின் கிளைகள் என்ன என்பதை
நான் உனக்கு சொல்லி தருகிறேன் கேள்.

பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு
காட்டுவதும் அன்பு தான்.
குழந்தை தனது தாய் தந்தையிடம்
எதிர்ப்பார்ப்பதும் அன்பு தான்.

சகோதரன் சகோதரியுடன்
சண்டை போடுவதும் அன்பு தான்
நண்பன் தோள்
கொடுப்பதும் அன்பு தான்

பிடித்தவன் கரம்
பற்றுவதும் அன்பு தான்.
கணவனுக்கு மனைவி
குழந்தையாவதும் அன்பு தான்.

ஆசிரியர் மாணவனை
தண்டிப்பதும் அன்பு தான்.
மனிதன் மனிதனுக்கு காட்டும்
மனித நேயமும் அன்பு தான்.

மனிதன் ஏனைய உயிர்களுக்கு
காட்டும் கரிசனையும் அன்பு தான்.
இப்படி பல கிளைகளை பரப்பி
நிழல் தரும் ஆழ மரம் தான் அன்பு!

“அன்பு ஒரு நாளும் அநாதை இல்லை”
நாம் தான் அதை
அநாதையாக்கி விட்டோம்!

இன்றைய நவீன உலகில்
அன்பு என்பத – எமது
கையடக்க தொலைபேசிக்குள்
முடக்கப்பட்டு விட்டதை
நீ அறிவாயோ?

தவறு நம் மீது இருக்க
எப்படி நாம் அன்பை
குறை கூறலாம்?

சொல் தோழியே! வா தோழா
எழுந்து வா!
நாம் பூமி முழுவதும் அன்பை விதைத்து
எங்கள் விரல்களை ஒன்றாக கோர்த்து
மனிதம் உலகில் வாழ்ந்திட செய்வோம்.

வா நண்பா
நட்பின் சின்னங்களாக
உதிக்க நீயும் எழுந்து வா!

Noor Shahidha.
Badulla

Leave a Reply