இறைவனுக்காக ஒரு நொடி!

இறைவா! வழி தவறிப் போன
என் வாழ்க்கைப் பயணங்கள்
உன் அளவற்ற அருளால்
நேர்வழியில் சென்று அமைந்தது ஏகனே!

என் கனவு எல்லாமே நான் உனக்காக
ஒவ்வொரு நொடியும்
வாழ்ந்து மடிய வேண்டும் என்பதே!

எனது கண்கள் கவலையால் கலங்குவதும்
எனது இதழ்கள்
மகிழ்ச்சியால் புன்னகைப்பதும்
உனக்காக மட்டுமே இருக்க வேண்டும்
மாறாக இந்த அற்ப உலகின்
மாயங்களுக்காக இருக்க கூடாது ரப்பே!

நான் எப்போதும் உன்னிடம் கேட்பது
உன்னுடைய அளவற்ற அன்பை தவிர
நான் இந்த உலகில் யாருடைய
அன்புக்கும் அடிமையாக கூடாது

ஏனென்றால் மனிதர்களின் அன்பு
சூழ்நிலைக்கேற்ப நிறம் மாறக் கூடியது
இறைவா உனது அன்போ
என்றும் நிலைத்து நிற்க கூடியது!

நான் பயப்படுகிறேன் ரஹ்மானே!
ஏன் தெரியுமா?
மனிதனின் அன்புக்கு மயங்கி விட்டால்
நான் உன்னை விட்டு
தூரமாகி விடுவேனோ என்று

எனக்கு எந்த துன்பம் வந்தாலும்
அதை முதலில் நான் உன்னிடம்
தான் கூறி அழ வேண்டும்!

எனக்கு எத்தனை இன்பம் வந்தாலும்
முதலில் உனக்கே நன்றி செலுத்த வேண்டும்!
எனக்கு என்ன தேவை வந்தாலும்
முதலில் உன்னிடமே கேட்க வேண்டும்!

எனது இந்த சிறு இதயம்
உன் நினைவிலே
லயித்து இருக்க வேண்டும்!
எனது இரண்டு கண்களும்
உனது படைப்புக்களின்
ஆற்றல்களை பார்க்க வேண்டும்!
எனது செவிகளில்
உனது அழகிய திருநாமங்களை
செவியுற வேண்டும்!

எனது நாவால் உனது வசனங்கள்
மொழியப்பட வேண்டும்!
எனது இந்த உடலும் உயிரும் – உனது கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டும்!

நீ காட்டும் பேரன்புக்கு எப்போதும்
நான் உனக்கு நன்றியுடையவளாக
இருக்க வேண்டும்!

நித்தமும் எனது ஆத்மாவுக்குள்
உன்னை நான் உணர வேண்டும்!
ஏனென்றால் நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.

உனது அருள்களை கண்டு
உள்ளம் குளிர்கிறேன்.
எனது வாழ்வை
உனக்காக மட்டுமே வாழ்கிறேன்!

Noor Shahidha.
Badulla.

Leave a Reply