எரியும் குடிசைக்குள் மலரும் பெருநாள்!

ஓலைச் சுவருக்கு
நடுவில் – மெழுகாய்
உருகிக் கொண்டிருக்கிறேன்
விதவைத்தாயாக!

என்னைச் சூழ எனது
குழந்தைகளின் அரவணைப்பு!
என் மனதிலோ
பல்லாயிரம் தவிதவிப்பு!

இன்னும் இரண்டு
நாட்களில் பெருநாள்!
இருந்தும் கையிலேதும்
இல்லை பலநாள்!

யாரோ உடுத்தி விட்டு
ஒதுக்கிய கிழிஞ்சல்
சட்டைகளை –  புத்தாடையாக
அணிந்து அழகு பார்க்கும்
என் பிஞ்சுகள்!

மிஞ்சிய உணவுப்
பண்டங்களை சுவைத்து
ருசி பார்க்கும்  நாக்கள்!

வறுமையிலும் கிடைத்ததைக்
கொண்டு திருப்தி
அடையும் இதயங்கள்!

ஆடம்பரமாக கழிக்கப்படும்
எத்தனையோ பெருநாட்களுக்கு
மத்தியில் ஏழ்மையான
பெருநாள் ஒன்றே போதும்
இறைவனைப்  புகழ!

Noor Shahidha.
Badulla.

Leave a Reply