அமைதி இழந்த பொழுது.

நடைமுறையிலுள்ள எல்லாம்
முறைமைகளாக மாறி
பெரும் பயத்தை தோற்றுவிக்கின்றன

வாழ்வு பற்றிய கனவில்
இழப்பை தவிர
எதையும் யோசிக்க முடியாதபடி
ஆதிக்கத்தை கூர்மையாக்கி
வைத்திருக்கிறது காலம்

மொழிகளாலும், சாதி பேதங்களாலும்
ஆஸ்தி, அந்தஸ்து என்றும்
மனிதத்தை கூறுபோடும்
நடைமுறை சிக்கல்கள்

பணத்தால் மட்டுமே
ஓரளவேனும்
வாழ்வை தக்கவைக்கலாம்
என்றாகிப்போனதோர்
பொதி செய்யப்பட்ட ஜீவிதம்

செம்மையாக்கப்படாத
இந் நாழிகைகளில் சாத்தியமற்ற
ஆசைகளோடு மனசு
இறுகி இருக்கிறது பாறையென…

அச்சுறுத்தலுக்குள்ளான
இக்கணங்களில்
இழக்கவென்று
உயிர் தவிர
ஒன்றும் இல்லா நிலையிலும்
இயல்பான விடயங்கள் கூட
பாரிய அழுத்தம் தந்து
பயம் காட்டுகின்றன

எதற்கும்
முன் நின்று முகம் காட்டி
எதிர்க்க திராணியற்றதாய்
மலினப்படுத்தப் பட்டிருக்கும்
இயலாமை

குறிப்பாக;
நிறைவேறாதென அறிந்தும்
நீ என்மேல்
வலிந்து தினித்துவிட்டுப்போன
காதலும்தான்!

ரோஷான் ஏ.ஜிப்ரி

Leave a Reply

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: