கற்றலும் பின்னடைவும்

  • 15

குழந்தைகள் இயல்பாகக் கற்கக் கூடியவர்கள். பிறந்த குழந்தை புலன்களால் கற்கிறது. அது இயல்பாகவே நடைபெறுகிறது. சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் அறிவு கூர்மையடைவதோடு, அனுபவங்களையும் அது சேமித்துக் கொள்கிறது.

பிறந்தது முதல் ஆய்ந்து தேடிக் கற்றலில் ஈடுபடும் குழந்தை, இயல்பாக விருப்பத்தோடு அறிவு மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குழந்தை ஏன் பின்னர் கற்றவில் பலவீனப்படுகிறது ?காலப்போக்கில் கல்வியில் அக் குழந்தை ஏன் பின்னடைகிறது?

குழந்தைகளது கற்றலில் எப்போது வயது வந்தவர்களது தலையீடு இடம் பெறுகிறதோ வற்புறுத்தல்கள், தொந்தரவுகள், தொல்லைகள் அதில் மேலிடுகிறதோ அக் கற்றல் செயற்பாடு இயல்பு நிலையையும் விட்டும் தடம் புரண்டு சென்று விடுகின்றது. இயல்பான கற்றல் நிலை நெருக்கீட்டினால் திசை மாறி விடுகின்றது.

கல்வியிலுள்ள போட்டித்தன்மை, முண்டியடித்துக் கொண்டு முன் செல்லத் தூண்டுகின்றது. இக்கட்டத்தில் பெற்றோர்கள் நிதானமிழக்கின்றனர். ஒருபுறம் தான் பெறாத நிலைகளை, அடைவுகளை குழந்தைகள் மூலம் பெற பெற்றோர்கள் நினைக்கிறார்கள். கல்வியில் முறையான ஒரு நிலையை அடையாவிட்டால் குழந்தைகள் எதிர்கால சந்தையில் காணாமல் போய் விடுவார்கள் என்று அவர்கள் பதறுகிறார்கள். அதனால் பெற்றோர்கள் கல்விக்காக பலதையும் இழந்து முழுவதையும் பெற பிள்ளைகளை நிர்ப்பந்திக்கின்றனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை ஒரு வித கண்டிப்பான ஆதிக்கத்தின் கீழ் சிறை வைத்து சிகரம் தேடுகிறார்கள். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை விட தேர்வுகளை விட பெற்றோர்களின் ஆசைகளையும் கனவுகளையும் பூர்த்தி செய்யவேண்டிய சுமை பிள்ளைகளின் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. இத்தகைய சுமைகளால் பிள்ளைகள் நெருக்கீட்டிற்கு ஆளாகி, அவர்களது கல்வி வாழ்வு விருப்பற்றதாக மாறிவிடுகின்றது. அக்கணம் அவர்களது கல்வியிலுள்ள கவனம் குறைகிறது.

பாடசாலை கல்வியிலுள்ள நெற்றிக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பிரயத்தனங்கள், உப்புச் சப்பில்லாத பாடப் பரப்புகள், பரீட்சைக்கு மட்டும் தேவையான துண்டு துண்டான செய்திகள், அரச கல்விக் கொள்கைகளால் திணிக்கப்பட்ட வரலாற்று இதிகாசங்கள், மேலைத்தேய நாடுகளிலிருந்து களவாடப்பட்ட பொருத்தமற்ற சில உள் வாங்கல்கள், அடக்கியாளும் வகுப்பு வன்முறைகள், கிஞ்சிற்றும் இரசனை சுரக்காத கற்பித்தல் ஓலங்கள், தூக்க முடியாத புத்தக சுமைகள், அபரிமிதமான வீட்டு வேலைகள், பாட மீட்டீல் பயமுறுத்தல்கள் போன்றன பிள்ளைகளை பாடாய்ப்படுத்தி அவர்களை சக்கை பிழியும் போது அவர்கள் அவற்றிற்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சுத்திணறுகிறார்கள். இந் நிலையில் பிள்ளைகளின் கல்வி பற்றிய அவதானக் குவிப்பு கேள்விக்குறியாகிறது.

இந்நிலையிலிருந்து குழந்தைகளுக்கு எதனையும் மீறிச் செயற்பட முடியாத ஒரு வரையப்பட்ட ஒழுங்கு வட்டம் இருப்பது யதார்த்தமானது. அவர்கள் கல்வியின் பொறிமுறையொன்றுக்குள் வாழவேண்டிய நிர்ப்பந்த நிலையுள்ளது.

மேற்கூறிய வகையில் மனப் போராட்டத்தோடு ஒரு நெருக்கீட்டு நிலையில் தங்கள் குழந்தைகள் கல்வியைத் தொடர்கிறார்கள் என்ற யதார்த்தத்தைப் பெற்றோர்கள் புரிந்து, பிள்ளைகளுக்கு ஆசையும் ஆர்வமும் வருகின்ற வகையில் ஒத்துழைத்து உற்சாகப்படுத்துவதன் மூலம் நல்ல விளைவுகளை பிள்ளைகள் பெற்றுக் கொள்ள உதவலாம்.

எம்.ரிஸான் ஸெய்ன்

குழந்தைகள் இயல்பாகக் கற்கக் கூடியவர்கள். பிறந்த குழந்தை புலன்களால் கற்கிறது. அது இயல்பாகவே நடைபெறுகிறது. சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் அறிவு கூர்மையடைவதோடு, அனுபவங்களையும் அது சேமித்துக் கொள்கிறது. பிறந்தது முதல் ஆய்ந்து தேடிக் கற்றலில் ஈடுபடும்…

குழந்தைகள் இயல்பாகக் கற்கக் கூடியவர்கள். பிறந்த குழந்தை புலன்களால் கற்கிறது. அது இயல்பாகவே நடைபெறுகிறது. சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் அறிவு கூர்மையடைவதோடு, அனுபவங்களையும் அது சேமித்துக் கொள்கிறது. பிறந்தது முதல் ஆய்ந்து தேடிக் கற்றலில் ஈடுபடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *