காலம் பொன்னானது

  • 69

இறைவன் எமக்களித்த விலை மதிக்க முடியாத ஒரு பரிசுதான் காலம். காலத்தை சரிவர முறையாகப் பயன்படுத்துபவர்கள் தான் ஞாலத்தில் சிறந்து விளங்குவர். சரியான முறையில் காலத்தை பயன் படுத்தாத சிலர், காலத்தின் மீது பழி சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அடுத்த நொடிகள் நிச்சயமற்றவை, என்பதை கருத்திற் கொண்டு இருக்கும் காலத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

காலம் பொன்னிலும் மேலானது. இழந்து விட்ட பொன்னை மலையளவு செல்வம் கொடுத்தேனும் மீட்டி விடலாம். ஆனால் எவ்வளவு செல்வம் திரட்டினாலும் கடந்து சென்ற காலத்தின் எள்ளளவேனும் பெற முடியாது. காலத்தின் அருமை அதை தவறவிட்ட பின் தான் புரியும். இதனால் பலனேதும் கிட்டாது.

காலத்தை முறையாகப் பயன்படுத்தாவிடின் வாழ்வில் முன்னேறுவது கடினம். ஒரு நொடியின் பெறுமதியை ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தை பெற்றவன் நன்கு உணர்ந்திருப்பான், ஒரு நிமிடத்தின் பெறுமதியை ரயிலை தவறவிட்ட ஒரு பயணி உணர்ந்திருப்பான், ஒரு நாளின் பெறுமதியை கூலி வேலையைத் தவறவிட்ட ஒரு தொழிலாளி உணர்ந்திருப்பான், ஒரு மாதத்தின் பெறுமதியை குழந்தை பெற காத்திருக்கும் ஒரு தாய் உணர்ந்திருப்பாள், ஒரு வருடத்தின் பெறுமதியை உயர் தரப் பரீட்சைக்கு முதன் முதல் தோற்றி சித்தியடையத் தவறிய மாணவன் உனர்ந்திருப்பான். இவ்வாறு ஏதோ ஒரு வகையில் அனைவரும் காலத்தின் பெறுமதியை உணர்ந்து கொண்டாலும் அதனை முறையாகப் பயன் படுத்த தவறுகின்றனர்.

இன்றைய சமுதாயத்தினரின் பொன்னான தருணங்களை சமூக ஊடகங்கள் சூறையடுகின்றன என்பதே நிதர்சனம். காலத்தின் அருமை உணராமல் வீண் கேளிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதால் அவர்களது அனைத்து செயற்பாடுகளும் பின் தள்ளப் படுகின்றன.

“இன்று உங்களால் செய்ய முடிந்த எந்தவொரு வேலையையும், நாளை என தள்ளிப் போடாதீர்கள்” (பெஞ்சமின் பிராங்ளின்)

இவ்வாறு வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்தியதாலேயே சரித்திரப் பதிவேடுகளில் பெயர் பொறிக்க முடிந்தது. இது தவிர கல்வி கற்கும் காலங்களில் முறையாகக் கற்காது அரட்டை அடித்து திரிந்தவர்களின் நிலையும் பிற்காலத்தில் கவலைக்குரியதே.

சென்று கொண்டிருப்பவன் காலத்தை வென்று கொண்டிருக்கிறான், நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டிருக்கிறான். என்பதற்கமைய காலத்தை முறைகேடாகப் பயன்படுத்துபவர்கள், பின்னால் எப்போதேனும் கைசேதப்பட்டு கடலளவு கண்ணீர் சிந்தினாலும், மீண்டும் அந்தக் காலத்தை அடைய முடியாது என்பதைக் கருத்திற் கொண்டு, காலத்தை செவ்வனே பயன்படுத்தி,வெற்றிச் சிகரங்களைத் தொடும் இலக்குகளோடு வாழ்ந்தால், வாழ்க்கை நினைத்ததை விட அழகாகவும், பயனுள்ளதாகவும்மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Mishfa Sadhikeen
SEUSL.

இறைவன் எமக்களித்த விலை மதிக்க முடியாத ஒரு பரிசுதான் காலம். காலத்தை சரிவர முறையாகப் பயன்படுத்துபவர்கள் தான் ஞாலத்தில் சிறந்து விளங்குவர். சரியான முறையில் காலத்தை பயன் படுத்தாத சிலர், காலத்தின் மீது பழி…

இறைவன் எமக்களித்த விலை மதிக்க முடியாத ஒரு பரிசுதான் காலம். காலத்தை சரிவர முறையாகப் பயன்படுத்துபவர்கள் தான் ஞாலத்தில் சிறந்து விளங்குவர். சரியான முறையில் காலத்தை பயன் படுத்தாத சிலர், காலத்தின் மீது பழி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *