பெண்களும் சாதனை புரியலாம்

பெண்களும் சாதனை புரியலாம்

இன்று பெண் என்றாலே அவள் அடுக்களைக்குத் தான் சொந்தம் என எம் சமூகத்தினர் வரையறை ஒன்றைக் கற்பித்துள்ளனர்.

பெண்கள் அடுக்களைக்கு மாத்திரம் தான் சொந்தமா? அவர்களால் சாதிக்க முடியாதா? முடியும். எங்களாலும் சாதிக்க முடியும். நாம் குடும்பத்தையும் நல்ல முறையில் கண்காணித்து சாதனைகளையும் புரியும் உரிமை (மார்க்கத்தின் வரையறைகளைப் பேணி) இஸ்லாத்தில் உண்டல்லவா?

நபியவர்கள் காலத்தில் எத்தனையோ முஸ்லிம் வீரப் பெண்மணிகள் திகழ்ந்துள்ளனர். நபியவர்களின் அத்தை ஸபிய்யா அம்மை கூட கைபர் யுத்தத்தின் போது இஸ்லாத்திற்காக வீரத்துடனும் துணிவுடனும் செயற்பட்டுள்ளார்கள்.

இன்றும் கூட எழுத்துத் துறையில், ஈழத்து தமிழின் நவீன கவிதைகளுக்குப் புதிய முகங்களைத் தருபவராகத் திகழும் சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிதாயினி அனார், மின்சக்தி மற்றும் மின் வலு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நூர் ரிஸ்னா அனீஸ் போன்ற வீரப் பெண்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் பெண்கள் நாங்களும் இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி எம் தூய மார்க்கத்துக்காக சாதனை புரிந்து சரித்திரம் படைக்க முடியும்.

அத்தோடு, பெண்களுக்கு பிரசவம் பார்க்க பெண் வைத்தியர்களைத் தேடி அலைந்து அவர்களையே நாடுகிறது இன்றைய சமூகம். ஆனால், பெண்கள் மேற்படிப்பு படித்து, அவர்களை வைத்தியத் துறைக்கு அனுப்ப பெரும்பாலானோர் நாட்டம் கொள்வதில்லை. விதை விதைத்தால் தானே நாளை விருட்சமாய் உருவெடுக்கும். அவ்வாறே பெண் கற்றாலன்றி எவ்வாறு பெண் வைத்தியர்கள் உருவாக முடியும்?

மேலும், எழுத்துத் துறையினூடாக நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு எத்தி வைப்பதும் ஒரு ஜிஹாத் தான். பெண்கள் நாங்களும் இஸ்லத்தில் பேணுதல் கொண்டு கற்கலாம். எழுத்துத் துறை எமக்கான வரமெனக் கொண்டு எழுதுகோலை எம் கரம் பற்றி வருங்காலம் வளமாய் அமைய நாமும் துணை புரியலாம். அதனூடாக சிறந்த ஈமானிய சமூகத்தைக் கட்டியெழுப்பலாம். இன்ஷா அல்லாஹ்.

கன்னியிவளின் கருத்தில் தவறுகள் இருப்பின் மன்னிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

ILMA ANEES
(WELIGAMA)
SEUSL
கட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்