முஃமினின் வாழ்க்கையில் சோதனையும் இறைநெருக்கமும்.

  • 18

அல்லாஹூத்தஆலா இவ்வுலகை ஆறு நாட்களில் படைத்து அதில் அனைத்து ஜீவராசிகளையும் உருவாக்கி அவற்றுள் உயர்ந்த படைப்பாக ஆறறிவைக் கொண்ட மனிதனைப் படைத்து ஆண், பெண் சோடி சோடியாக அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கு இன்பம், துன்பம், வாலிபம் – வயோதிபம், ஏழ்மை – ஆடம்பரம், ஆரோக்கியம் – நோய், இறப்பு – பிறப்பு போன்ற பல்வகைப்பட்ட செயற்பாடுகளையும் அவர்களோடு இணைந்து படைத்து அவர்களைத் தனது பிரதிநிதிகளாக்கிக் கொண்டான். அத்தோடு அப்பிரதிநிதிகளுக்கு நன்மை – தீமை, சத்தியம் – அசத்தியம் என்பவற்றைப் பிரித்தறிவித்து நேர்வழிப் பெறச்செய்வதற்காகவும் ஈமானை வலுப்பெறச் செய்வதற்காகவும் காலத்துக்குக் காலம் நபிமார்களையும், ரஸூல்மார்களையும் அனுப்பிக் கொண்டே இருந்தான்.

அந்த வகையில் முஃமினின் வாழ்வு எனும் போது முதலில் நாம் முஃமின் என்ற பதத்தைப் பற்றி பார்க்கும் போது, ஈமான் என்ற சொல்லிலிருந்து முஃமின் என்ற பதம் வந்துள்ளது. இறை விசுவாசம், நம்பிக்கை எனப் பொருள்படும். அதே போன்று உள்ளத்தினால் உறுதிபூண்டு நாவினால் மொழிந்து, உறுப்புக்களினால் செயற்படுவது ஈமான் எனப்படும். அந்த வகையில் இச்செயற்பாட்டினைப் புரிபவனையே முஃமின் என்போம்.

ஈமான் பல படித்தரங்களைக் கொண்டது. அத்தோடு ஈமான் முஜ்மல், ஈமான் முபஸ்ஸல் என வகைப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று ஈமானின் சுவை மிகவும் இனிமையானது. வாழ்வுக்கு உரமூட்டும் இன்பகரமான தன்​மை வாய்ந்தது.

இதனைப்பற்றி நபி (ஸல்) கூறும் போது எவரிடம் இந்த மூன்று விடயங்கள் பொதிந்திருக்குமோ அவர் ஈமானின் சுவையை அடைந்தவராவார்.

  1. ரஸூலுல்லாஹ் மற்ற அனைவரை விடவும் நேசத்துக்குரியவராக மாறுவது.
  2. ஒருவர் மற்றவரை அல்லாஹ்காகவே நேசிப்பது.
  3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

என்பதாகும். அறிவிப்பவர் – அனஸ் ரழியல்லாஹூ அன்ஹூ ஆதாரம் – முஸ்லிம் :43 ( ஈமானின் சுவைப் பிரிவு)

இவ்வாறான மனவுறுதியுள்ளவர்களே முஃமின்கள் என்போம். இவர்களது பண்புகள் பற்றி அல்லாஹ் சூறா முஃமினூனில் அழகிய முறையில் எடுத்துரைத்துள்ளான்.

“முஃமின்கள் வெற்றி அடைந்து விட்டார்கள்” (ஸூறா முஃமினூன் : 01)

இவ்வடியார்களது வாழ்வு விசித்திரமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இவர்களது வாழ்வு கஷ்டங்களைக் கொண்டு பல்வேறுபட்ட அமைப்பில் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். என்றாலும் அவர்களது நிலை வித்தியாசமானதாகவே காணப்படும். அதனைப்பற்றி அல்லாஹ் அவனது திருமறையில் குறிப்பிடும் போது,

“நிச்சயமாக உம்மை நாம் பயத்தைக் கொண்டும், பட்டினியைக் கொண்டும், செல்வத்தைக் கொண்டும், ஆன்மாவைக் கொண்டும், கனிவர்க்கங்களைக் கொண்டும் சோதிப்போம். இன்னும் பொறுமையைக் கொண்டு நன்மாராயம் கூறுங்கள். பூமியில் ஏதும் பிரச்சினைகள், சோதனைகள், குழப்பங்கள் ஏற்பட்டால் நிச்சயமாக நாமெல்லாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். அவன் பக்கமே மீளுவோம்.” எனக் கூறுவர். (ஸூறா பகறா: 1551,56)

அதே போன்று இது தொடர்பான ஹதீஸ் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது, “இவ்வுலகமானது முஃமின்களுக்கு சிறைச்சாலை காபிர்களுக்கு சுவனப்பூஞ்சோலையாகும்” அறிவிப்பவர் : அபூ ஹூறைறா ரழியல்லாஹூ அன்ஹூ ஆதாரம்: முஸ்லிம்.

அந்த வகையில் முஃமின்களது வாழ்வில் பல்வகைப்பட்ட இடர்கள் ஏற்படும். அவனது குடும்பம், பிள்ளைகள், பொருளாதாரம், முன்னேற்றம், அயலவர்கள், அந்நியவர்கள் என பல்வேறுபட்டவர்களால் அவனது வாழ்வு சோதனைக்குட்படுத்தப்படும். இருந்த போதிலும் அவன் அனைத்தையம் விட அல்லாஹ், ரஸூலை அதிகம் நேசிப்பதினால் இவ்வேதனைகள், இவ்வுலகக் கஷ்டங்கள் எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வுக்கே நன்றி செலுத்தி அவனிடமே மீளுவான். இவ்வுலக விடயங்கள் அனைத்தும் அவனிற்கு அற்பமானதே. இது பற்றி ரஸூலுல்லாஹ் கூறும் போது,

“ஒரு முஃமினின் நிலை ஆச்சரியமானது. இந்நிலை ஓரு முஃமினிடத்தே தவிர வேறெவருக்கும் கிடையாது. அவனுக்கு ஒரு நலவு நடந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான்.அது அவனுக்கு நலவாகிவிடும். அதே போன்று ஒரு கெடுதி நடந்தால் பொறுமை காப்பான் அதுவும் அவனுக்கு நலவாகி விடும்.”அறிவிப்பவர் : அபூ யஹ்யா ஸூஐப் இப்னு ஸினான் ஆதாரம்: முஸ்லிம்.

எமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள், துன்பங்களை எமது கஷ்டங்கள், துன்பங்களோடு ஒப்பிடும் போது அற்பமானவையாகவே தெரிகின்றன. இவ்வுலகம் ஒரு சோதனைக்களமே,மேலும் அல்லாஹ் முஃமின்களைச் சோதிப்பேன் என்றும் கூறியுள்ளான். அந்த வகையில் எமது நபிமார்கள், ஸஹாபாக்கள், அனைவருமே இவ்வுலகில் சோதனைக்குற்படுத்தப்பட்டு மேலான சுவனபதிகளுக்கு வாக்களிக்கப்பட்டவர்கள். எனவே சோதனைகளைத் தாண்டாமல், வெற்றி கொள்ளாமல், பொறுமைகாக்காமல் நாம் எவ்வாறு சுவனத்தை எதிர்பார்க்க முடியும்? இறை திருப்தியையும் சுவனத்​தையும் எதிர்பார்க்கின்ற ஒரு முஃமின் கட்டாயம் சோதனைகளை தாண்டத்தான் வேண்டும்.

ஒரு குடும்பம் முழுமையாக உயிர்த்தியாகம் செய்த வரலாறும் இஸ்லாத்தில் உள்ளது. அவர்களது ஈமான் எத்துனை தூய்மையானது. நினைத்தாலே மெய் சிலிர்க்க வைக்கின்ற சம்பவம் அது. அந்தத் தியாகக் குடும்பம் அம்மார் பின் யாஸிர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களுடைய குடும்பமாகும்.

அம்மார் இப்னு யாசிர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களது தகப்பனார் யாசிர், தாயார் சுமையா ஆகிய மூவரும் மக்ஜும் கிளையைச் சேர்ந்த அபு ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இம்மூவரையும் அபு ஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் “அப்தஹ்” என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் உங்களிற்கு சொர்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது.” என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பாளர்களின் வேதனையாலேயே யாஸிர் ரழியல்லாஹூ அன்ஹூ இறந்து விட்டார்கள். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான ஸூமையா பின்த் கையாத் ரழியல்லாஹூ அன்ஹா அவர்களை அபு ஜஹ்ல் தனது ஈட்டியை அவர்களது பெண்ணுறுப்பில் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.

அவர்களது மகனான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீரில் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். “முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போது தான் உன்னை இத்தண்டணையிலிருந்து விடுவிப்போம்,” என்று கூறினர். வேதனை தாங்காத அம்மார் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைகளிற்கு இணங்கி விட்டார். அதற்குப்பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)

“(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொன்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையைக் கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன் மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது இல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.” (அல்குர்ஆன் 16:106)

இவ்வரிசையில் மூஸா நபியை எடுத்துக்கொண்டால் மூஸா நபியவர்கள் பிறந்த காலகட்டமானது அச் சமூகத்தில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளையும் பிர்அவ்ன் கொலை செய்ய கட்டளையிட்டிருந்த காலகட்டமாகும். ஆனால் அல்லாஹ் தன் பேரருளால் மூஸா நபியைக் காப்பாற்றினான். அல்லாஹ் மூஸா நபியை அந்த பிர்அவ்னின் அரண்மனையிலெ அவனிடமே வளர விட்டான்.

இவ்வாறிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் பிர்அவ்னின் அரண்மனையில் இருக்கும் பணிப்பெண் ஒருவர் தன் கையால் கீழே விழுந்த சீப்பினை பிஸ்மில்லாஹ் என்று கூறி எடுத்த போது அதனைக் கேட்ட பிர்அவ்னுடைய மகள் “எனது தந்தை தானே வணக்கத்துக்குறியவன், நீ யாருடைய நாமத்தைக் கூறுகிறாய்?” எனக் கட்ட போது “உன் தந்தையினதும் எனதும் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று தைரியமாகக் கூறினார். பின் பிர்அவ்னுடைய மகள் இது பற்றி பிர்அவ்னிடம் கூறினாள். பின் பணிப்பெண்ணை விசாரித்த பிர்அவ்னிடமும் அப் பணிப்பெண் அதே பதிலை தைரியமாகக் கூறினார். பின் ஆத்திரமடைந்த பிர்அவ்ன் பெரிய இரும்புப் பாத்திரமொன்றை வரவழைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க வைத்து அப் பணிப்பெண்ணின் பிள்ளைகளை அதில் போடுமாறு கட்டளையிட்டான். பின் அந்தப் பணிப்பெண் “எமது எல்லோருடைய எலும்புகளையும் ஒரு துணியில் ஒன்றினைத்து புதைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஒரு கோரிக்கையை முன் வைத்தாள். அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிர்அவ்னும் வாக்களித்தான். பின் ஒவ்வொருவராக அப் பாத்திரத்தில் போடப்பட்டனர்.

தனது குழந்தைகள் அனைவரும் இறைவனுக்காகவே கொல்லப்படுகின்றனர் என எண்ணி இறை அருளை மட்டும் எதிர் பார்த்தவளாக பொறுமையாகவும், தைரியமாகவும் இருந்தார்கள். பின் அவரது தாய்ப்பால் அருந்தும் சின்னஞ்சிறிய குழந்தையை போடப்போகும் போது அக் குழந்தை பேசியது. உலகில் நான்கு பேர் குழந்தைகளாக இருக்கும் போதே பேசினார்கள். அதில் இக் குழந்தையும் ஒன்று.

”தாயே கலங்காதீர் மறுமையின் வேதனையை விட இவ்வுலக வேதனை அற்பமானதே” எனக் கூறியது. பின் அக் குழந்தையும் நெருப்பில் போடப்பட்டது. அப் பணிப்பெண்ணும் அதில் போடப்பட்டாள். அவ்வேதனையைப் பொருத்தவளாய் அவ்வேதனைகளை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டவளாய் மாண்டு போனாள். பின் மிஃராஜ் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் சுவனத்தில் கஸ்தூரி மணம் போல் வீசும் மணம் யாருடையது என்று கேட்ட போது பிர்அவ்னுடைய வீட்டில் பணிபுரிந்த அப் பெண்மணியுடையது எனக் கூறப்பட்டது. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம்: அஹ்மத் (1-309)

இவ்வனைத்து சம்பவங்களும் கூறப்பட்டதற்கான காரணம் இவ்வுலகம் சோதனைக்களம் என்பதனால் முஃமின்கள் பல்வேறுபட்ட விடயங்களினால் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள். எனவே எந்தக்கட்டத்திலும் எமது ஈமானில் நாம் பலவீனமடையக் கூடாது. இவ்வாறு ஈமான் கூடிக்குறையக் கூடியது என்பதினால் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும். உண்மையிலே எமது வாழ்வில் இது போன்ற எந்த நெருக்கீடுகளும் வந்திருக்கமாட்டாது. ஆனால் எம் சமூகத்தின் துர்ப்பாக்கியநிலை அல்லாஹ், ரஸூலுக்காக உயிர் நீக்க வேண்டியோர். அற்ப சுகபாகங்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலநிலையே ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு ஈமானின் சுவையை உணர்ந்து ரப்பின் திருப்பொருத்தத்துடன் அவனிடம் எம்மை நெருக்கும் நல்ல அமல்களைப் புரிந்து சுவனத்தின் உயர் பதவிகளைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

அத்துடன் எமது வாழ்வில் ஏற்படும் எவ்வாறான சோதனையாக இருந்தாலும் மனம் நொந்து போகாமல், வாழ்வை வெறுத்து தற்கொலை முடிவுகளிற்குச் செல்லாமல், இணைவைப்பின் பால் மீளாமல் இவர்களின் வாழ்வின் கட்டங்களை முன்மாதிரியாக ஏற்று இறைவனின் நெருக்கத்தை அடைவதற்க்கு முயலுவோமாக! அவனது இறைநெருக்கத்தைப் பெறுவதற்காக பிரார்த்திப்பதுடன், அவனது ஏவல்களை அதிகம் வாழ்வில் பின்பற்றி நடப்பதுடன், விலகல்களைத் தவிர்த்து வாழ்ந்து ஈமானை வலுப்பெறச் செய்து கொள்வோமாக.

Mowlawiya AC. fathima Sajidha
(Ummu Adheeba)
SEUSL
Counselor(R)
Badulla

அல்லாஹூத்தஆலா இவ்வுலகை ஆறு நாட்களில் படைத்து அதில் அனைத்து ஜீவராசிகளையும் உருவாக்கி அவற்றுள் உயர்ந்த படைப்பாக ஆறறிவைக் கொண்ட மனிதனைப் படைத்து ஆண், பெண் சோடி சோடியாக அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கு இன்பம், துன்பம்,…

அல்லாஹூத்தஆலா இவ்வுலகை ஆறு நாட்களில் படைத்து அதில் அனைத்து ஜீவராசிகளையும் உருவாக்கி அவற்றுள் உயர்ந்த படைப்பாக ஆறறிவைக் கொண்ட மனிதனைப் படைத்து ஆண், பெண் சோடி சோடியாக அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கு இன்பம், துன்பம்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *