புனித மாதத்தில் களங்கப்படும் மனித மானம்

  • 6

எந்தப் புனித மாதத்தின் புனித நாட்களில் நபிகளார் மனித மானத்தைப் புனிதமாகப் பேசினார்களோ அதே மாதத்தின் அதே நாட்களில் அந்த மானங்கள் சாதாரணமாகக் களங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனையான விடயம். இதன் மூலம் நபிகளாரின் பொன் வார்த்தைகளையே களங்கம் செய்கின்றோம்.

நபிகளார் அவர்கள் புனித மக்காவில் புனித துல் ஹஜ் மாதத்தில் தன்னுடைய இறுதி ஹஜ்ஜுப் பேருரையில் :

“உங்களுடைய (புனிதமான) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானங்களும் புனிதமானவையாகும்” என்று பல தடவைகள் கூறினார்கள்.

மனித மானங்களில் அத்துமீறுவது மக்கா நகரின் புனிதத்தில் அத்துமீறுவது போலாகும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

மற்றொரு ஹதீஸில்:

“ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்”.

இன்று உங்களிடம் பிறர் மானங்களை களங்கம் செய்வோர் நாளை உங்களது மானங்களை அடுத்தவர்களிடம் களங்கம் செய்து உங்கள் மரியாதையையும் சீர்குலைக்கத் தயங்க மாட்டார்கள். அவர்கள் பேசி எழுதுவதற்கு ஆரவாரம் செய்து பாராட்டி ஊக்கப்படுத்துவதை விட்டுவிட்டு  எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். மார்க்கத்தை மறந்து செயற்படும் இப்படியானவர்கள் எதையும் செய்வதற்குத் துணிவர். அல்லாஹ்தான் அவர்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்.

இன்று பிறர் மானம் எவ்வளவு மலிவாகிவிட்டது. அதுவும் புனிதமான மானங்கள் இப்புனிதமாக்கப்பட்ட மாதத்தின் மிக சிறப்புமிகு பத்து நாட்கள் என்று கூடப்பாராமல் களங்கம் செய்யப்படுவது நமது ஈமானின் பலவீனத்தையே காட்டுகின்றது. யார் யார் பற்றியும் எதுவும் பேசலாம், எழுதலாம் என்ற நிலை. தன் சொந்த விடயம் போல் பல நியாயங்கள் கூறிக்கொண்டு அடுத்தவர் விடயத்தில் அத்துமீறல் எவ்வளவு மோசமான விடயம்.

“வைலுன்” என்ற அரபுச் சொல்லின் கருத்து கேடு என்பதை சுற்றியே வரும். அல் குர்ஆனில் இரண்டே இரண்டு சூராக்கள் மட்டும்தான் இந்தக் கடுமையான சொல்லைக் கொண்டு எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கின்றன. இரண்டுமே மனிதர்களின் விடயத்தில் அநியாயமாக நடந்து கொள்கின்றவர்கள் பற்றியே பேசுகின்றன.

  1. பிறரின் சொத்து செல்வங்களில் அநியாயமாக நடந்து கொள்வோர். (83 வது சூரா)
  2. பிறரின் மானங்களில் களங்கம் செய்வோர். (104 வது சூரா)

மிஃராஜில் நபிகளார் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கண்டார்கள். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் கொடுக்கப்பட்டு தமது முகங்களையும் நெஞ்சுகளையும் கீறிக் கிழித்துக் கொண்டிருந்தார்கள். ஜிப்ரீலே இவர்கள் யார் எனக் கேட்க மக்களின் மானங்களில் அத்துமீறி குறை கூறி அவர்களது மாமிசங்களைச் சாப்பிட்டவர்கள்” எனப் பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம். அவன் வேதனையைப் பயந்து கொள்வோம். ஒரேயொரு விடயம்: புனிதமான பிறர் மானத்தில் அத்துமீறல் செய்துவிட்டு எந்தத் தௌபாவுமின்றி அல்லாஹ்விடமிருந்து தப்பி விடலாம் என்று மட்டும் நினைக்க முடியாது.

இறைவா! எமது பாவங்களை மன்னித்து விடு. பிறர் விடயத்தில் எமது தவறுகளை மன்னித்து விடு. மனம் வருந்தி உன்னிடம் கேட்கிறேன். சிலர் மனித மானங்களில் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களுக்கு உன் நேர்வழியைக் காட்டிவிடு. நீயே போதுமானவன்.

பாஹிர் சுபைர்

எந்தப் புனித மாதத்தின் புனித நாட்களில் நபிகளார் மனித மானத்தைப் புனிதமாகப் பேசினார்களோ அதே மாதத்தின் அதே நாட்களில் அந்த மானங்கள் சாதாரணமாகக் களங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனையான விடயம். இதன் மூலம் நபிகளாரின் பொன்…

எந்தப் புனித மாதத்தின் புனித நாட்களில் நபிகளார் மனித மானத்தைப் புனிதமாகப் பேசினார்களோ அதே மாதத்தின் அதே நாட்களில் அந்த மானங்கள் சாதாரணமாகக் களங்கப்படுத்தப்படுவது மிகவும் வேதனையான விடயம். இதன் மூலம் நபிகளாரின் பொன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *