இறுதி நபியின் இறுதி ஹஜ்ஜுப் பேருரை. மனித உரிமைகளுக்கான அஸ்திவாரம்

  • 13

நுழைவதற்கு முன்: நாமிருப்பது புனித மாதங்களில். தேர்தலுக்காக பிறர் உரிமைகளும் புனித மாதங்களும் கலங்கப்படுத்தப்படுவது மிகப் பெரும் அத்துமீறல்.

துல் ஹஜ் மாதம் நபிகளாரின் இறுதி ஹஜ்ஜினூடாக அவர்களின் இறுதிப் பேருரை எமக்குக் கிடைத்த மாதம். நபிகளார் தன் சமூகத்துக்கு ஆற்றிய உணர்வு பூர்வமான அந்த உரை மனித உணர்வுகளுக்கும், உரிமைகளுக்குமான அஸ்திவாரம். மனித சமூகத்தின் உரிமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் அமைந்திருந்தது அவர்களின் அந்தப் பேருரை.

மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நபியவர்கள் பண்பாடு மிக்க, ஒழுக்கமிகு சமுதாயத்தையும் உருவாக்கினார்கள். மட்டுமல்லாது தான் மரணிப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் அவர்கள் ஆற்றிய இந்த உரையிலும் பண்பாட்டுக்கும் மனித உரிமைக்கும் பாரியதொர் இடத்தையும் வழங்கியிருந்தார்கள்.

அந்த உரையை நோக்குமிடத்து ஒழுக்கம், மனித உரிமைகள் என்பது பற்றியெல்லாம் கர்ஜிக்கும் இன்றைய செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில் இஸ்லாம் சுமார் 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித உரிமைகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கி அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளது என்பது புலனாகின்றது.

அந்த உரையில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் சில இதோ:
  • நபிகளாரின் இறுதி உரையும் அவர்கள் எமக்கு மார்க்கத்தை எத்திவைத்ததற்கான சாட்சியும்:

இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: “நபியவர்கள் தன் தலையை உயர்த்தி, ‘இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?’ என்றும் கூறினார்கள்.

என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்”.

  • பிறர் உரிமை மற்றும் மானம் பற்றிய எச்சரிக்கை:

“நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று பல தடவை கூறினார்கள்”.

  • பிறர் சொத்தில் கைவைக்க வேண்டாம்:

“மனம் விரும்பித் தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் பிறருக்கு ஆகுமாகாது”

  • மக்கள் சமமானவர்கள், சிறந்தவன் என்பதற்கான அளவுகோல் இறையச்சம் மட்டுமே என்ற பிரகடனம்:

“மக்களே! நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். நிச்சயமாக உங்களுடைய தந்தையும் ஒருவர் தான். ஓர் அரபிக்கு அரபியல்லாத அஜமியை விடவும், ஓர் அரபியல்லாத அஜமிக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர”

  • தன் மரணத்தின் பின் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாமென்ற உத்தரவு:

“நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் பற்றி விசாரிப்பான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்”

  • ஜாஹிலியப் பண்புகள் இனிமேல் வரவேகூடாது என்ற எச்சரிக்கை:

“அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன”.

  • மனைவியர் விடயத்தில் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்:

“பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுள்ளீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டுதான் அவர்களது கற்புகளை ஆகுமாக்கிக் கொண்டீர்கள்”.

  • வந்தவர்கள் வராதவர்களுக்கு அந்த உரையை எத்திவைக்குமாறு வேண்டுகோள்:

“இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு எத்திவையுங்கள்”

எவ்வளவு அழகான உபதேசங்கள். இவை மீறப்படுவதால்தான் எங்கும் பிரச்சினைகள்.

நபிகளாரைப் பின்பற்றும் அன்புச் சகோதரர்களே! இப்போது நாமிருப்பது புனித மாதங்களில். அத்துடன் தேர்தல் காலம். இக்காலத்தில் புனித மாதங்களை சங்கைப் படுத்துவதுடன் நபிகளார் போதித்த பிறர் உரிமைகளயும் மதித்து நடக்கவேண்டிய கடமையுள்ளது. தேர்தலுக்காக மனித மானங்கள் சூறையாடப்படுவதும் புனித மாதங்கள் கலங்கப்படுத்தப்படுவதும் மிகவும் வேதனையான அம்சம். இக்காலங்களில் செய்யப்படும் பாவங்கள் மிகவும் பாரதூரமானவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அல்லாஹ்வே! உன் நபியவர்களை முழுவதுமாகப் பின்பற்றும் பாக்கியத்தை வழங்குவதுடன் நாம் அறியாமையால் செய்யும் பாவங்களை மன்னித்து அருளையும் தருவாயாக.

பாஹிர் சுபைர்

நுழைவதற்கு முன்: நாமிருப்பது புனித மாதங்களில். தேர்தலுக்காக பிறர் உரிமைகளும் புனித மாதங்களும் கலங்கப்படுத்தப்படுவது மிகப் பெரும் அத்துமீறல். துல் ஹஜ் மாதம் நபிகளாரின் இறுதி ஹஜ்ஜினூடாக அவர்களின் இறுதிப் பேருரை எமக்குக் கிடைத்த…

நுழைவதற்கு முன்: நாமிருப்பது புனித மாதங்களில். தேர்தலுக்காக பிறர் உரிமைகளும் புனித மாதங்களும் கலங்கப்படுத்தப்படுவது மிகப் பெரும் அத்துமீறல். துல் ஹஜ் மாதம் நபிகளாரின் இறுதி ஹஜ்ஜினூடாக அவர்களின் இறுதிப் பேருரை எமக்குக் கிடைத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *