மெதுமையின் சாரல்

ஜன்னலுக்கப்பால்
விழுந்து கிடக்கிறது
என் பொன்னிறத் தும்பி

அமானுஷ்ய இரவுகளில்
கோடுகளற்ற
வெற்றுக் கிண்ணத்தை
சொட்டுக் கண்ணீர்
கொண்டு உயிர்ப்பித்துக்
கொண்டிருக்கிறது தாகம்

செங்குருதி வியர்வை படிந்த
பிணந்தின்னும் கழுகுகளை
கரும்புகை மண்டலம்
வதைத்துக் கொண்டிருக்கிறது

சுயம் தொலைத்த ஓர் தேடல்
பரிசுத்த ஆன்மாக்களின்
உணர்வுத் தூண்டல்களை
நுரைச்சுரைப்போடு அணிவிக்கிறது

என் பேனை ஓர் மனவெளியில்
சிக்கிக்கொண்ட கரும்பாம்பாய்
சிவப்பு நட்சத்திரங்களை
விழுங்கி மூச்சையாகிறது.

மிஸ்ரா ஜப்பார்

Leave a Reply