நல்ல மனிதர்களை சம்பாதிப்போம்

உலக மோகம் கொண்ட மனிதன் அதை முழுமையாக அனுபவிக்கத் தினந்தோறும்  பல மனிதர்களைப் பகைத்துக் கொண்டுள்ளான். ஆனால் அவனின் இறுதி முடிவோஅவன் சேமித்து வைத்த சொத்துக்கள் யார் யாருக்கோ சொந்தம் ஆகின்றது. அவன் சம்பாதித்த சொத்துக்களில் அவனின் இறுதிப் பயணத் தொழுகையில் கலந்து கொண்டு அவனுக்காகப் பிரார்த்னை செய்யும் ஷிர்க் செய்யாத 40 துக்கு மேற்பட்ட மனித உள்ளங்கள் தான் பொறுமதி மிக்கது.

ஏன் தெரியுமா?

அவர்களின் பிரார்த்தனை அவனின் பாவங்களை அழித்து நரகத்தை விட்டு அவனைக் காத்து அவனுக்கான நிரந்தர வீட்டைப் பெற்றுக் கொடுக்கும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய  புதல்வர்  ஒருவர் “குதைத்” அல்லது “உஸ்ஃபான்” எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைப்! மக்கள் ஒன்று கூடிவிட்டனரா? எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா? சொல்” என்றார்கள். நான் “ஆம்” என்றேன்.

“அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 1730. அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்)

சிந்திக்க மறந்த பகுதி.

தினந்தோறும் தனது வங்கிக் கணக்கின் மீதியை சரி  பார்க்கும் மனிதன். தான் மரணித்தால் தனது ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு தனக்காகப் பிரார்த்னை செய்ய  அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத எத்தனை பேரை நான் சம்பாதித்துள்ளேன் என்பதை சரிபார்க்கத் தவறி விட்டான்.

அல் ஹாபிழ் இன்திகாப் உமரி
இலங்கை

Leave a Reply