சமூக நலனும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதன் அவசியமும்

  • 92

ஒரு கட்டிடம் பலமாக இருக்க வேண்டுமெனில் அஸ்திவாரம் உறுதியாக காணப்பட்டால் அது சாத்தியமாகும். அவ்வாறே ஒரு சமூகத்தின் நிலையான உறுதியான இருப்பிற்கு சமூகத்தை வழிநடாத்தும் தலைமைகள் வலுவானதாக இருக்க வேண்டும். இருந்தாலே சமூகத்தினை நன்னெறி கொண்ட சமூகமாக ஆக்க முடியும்.

ஆகவே சமுகம் என்பது என்ன? தலைமைத்துவம் என்றால் என்ன? தற்கால சமூகமும் தலைமைத்துவமும் எவ்வாறு காணப்படுகின்றது? தலைமைத்துவத்திற்கு எவ்வாறு கட்டுப்படவேண்டும்? கட்டுப்படுவதன் அவசியம் என்ன? என்பதை இக்கட்டுரை அலசுகின்றது.

சமூகம் என்பது எல்லா வகையான உறவுகளையும் உள்ளடக்கியது அது தனி மனிதர்களுக்கிடையே ஏற்படும் உறவுகள், உணர்வுகள், ஒழுக்கங்கள், சமூகப்பிணைப்புகள் முதலியவைகளை குறிப்பதாகும் என சமூகவியலாளர்கள் கூறுவர். இஸ்லாம் சமுதாய அமைப்பின் ஆரம்ப அடிப்படை அலகாக தனி மனிதனை கருதுகின்றது தனிமனிதனுக்கு சமூகம் செய்ய வேண்டிய கடமைகளையும் சமூகத்திற்கு தனிமனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறியதன் மூலம் தனிமனிதனும் சமூகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதை வலியுறுத்துகின்றது. சமூகமானது நன்னெறி கொண்ட சமூகமாக முன்னேற வேண்டுமெனில் அதற்குரிய தலைமை சிறப்பாக காணப்பட வேண்டும்.

இத் தலைமைத்துவம் என்பது கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் கொடுக்கும் வரைவிலக்கணம் பின்வருமாறு “வலுக்கட்டாயமாற்ற வழிவகைகளை கொண்டு செயலாற்ற ஒரு குழுவை தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் இட்டுச்செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம் இந்த திசை முழு உலகுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் செல்லும் அளவுக்கு விசாலமானதாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான ஒரு மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு குறுகியதாகவும் இருக்கலாம்” என தலைமைத்துவத்திற்கு விளக்கம்  குறிப்பிட முடியும்.

இந்த தலைமைத்துவமானது மேற்குலகினுடைய பார்வையாக; வரலாறு நெடுகிலும் வாழ்ந்து வந்த அரிய சாதனை புரிந்த சாமர்த்தியம் மிக்க மனிதர்கள் என அவர்கள் கருதுபவர்களது வாழ்க்கை அனுபவங்கள், சாதனைகள் அடைவுகள் ஆகியவற்றிலிருந்து தமது தலைமைத்துவ கோட்பாட்டை வகுத்துள்ளனர். அந்த ஆளுமைகளின் பிரதிபலிப்புகளே தலைமைத்துவப் பண்புகள் என அவர்களுடைய ஏட்டில் வகுத்துள்ளனர்.

இவ்வாறு பலவீனமான மனித அனுபவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதல்ல இஸ்லாமிய தலைமைத்துவம் அது  இறைவனால் அருளப்பட்டவை ஆகும். அருளப்பட்டது மாத்திரமின்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களாலும் நடைமுறையில் வெற்றிகரமாக செயற்பட்டு உலகுக்கு முன் உதாரணங்களாக இன்றும் மனித சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பரிணமிக்கின்றது.

இருந்தபோதிலும்  சமூகத்தின் நலிவுநிலையைக் காணமுடிகின்றது. சமூகநலன் பேணப்பட்ட போதும் நலிவடைந்த நிலையே அதிகமாக காணப்படுகின்றது. அந்த வகையில் இளைஞர்களே அதிக போதைவஸ்துக்கு அடிமைப்பட்டு காணப்படுகின்றனர் இதனால் குடும்ப கட்டுக்கோப்புகள் சீர்குலைந்து காணப்படுகின்றது. சூழல் மாசடைவு, துஷ்பிரயோகங்கள், அவ்வாறே சமூக நிறுவனங்களான பாடசாலை, சமய அமைப்புக்கள் போன்ற பல நிறுவனங்கள் சமூக நலன்குன்றி சரிவடைந்து காணப்படுகின்றது. இதற்குத்தலைமைகள்  நோக்கமின்றி செயற்படல், திட்டமற்ற வேலை ஒப்படைப்பு, தாமதமான தீர்மானம், தெளிவற்ற பொறுப்பு ஒப்படைப்பு, குறிப்பிட்ட சில பணிகளுக்கு அதிக ஈடுபாடு முக்கியமான சில விடயங்கள் கவனிக்கப்படாமை, சுய அபிவிருத்தியின்மை திட்டமற்ற தொடர்பாடல், சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கமின்மை சர்வாதிகார போக்கும், வெளிப்படைத் தன்மை இன்மை போன்ற காரணங்களாலும்; தமது அபிப்பிராயத்திற்கு தலை அசைக்கும் நிர்வாகிகளை விரும்புகின்றனர். தனது முடிவுக்கு மாற்றுக் கருத்துக்களை தெரிவிப்பவர்களை எதிரிகளாக பார்க்கின்றனர். சிலபோது அபிப்பிராயம் கேட்பதே இல்லை என்கின்ற நிலைக்கு நிலைப்பாட்டை கடைபிடிக்கின்றனர். அவ்வாறே அவர்களது சுய இலாபத்திற்காக அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கும் தலைமைப் பொறுப்பை பயன்படுத்துகின்றனர்.

இதுதான் இயக்கங்கள் அமைப்புகளின் வீரியத்தை கெடுப்பதுடன் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றது. சுன்னாவைப்பேண வேண்டும் என்று போதிக்கும் அமைப்புக்கள் தமது அமைப்பின் நிர்வாக விடயங்களில் நபி அவர்களின் தலைமைத்துவப் வழிமுறைகளை புறக்கணிப்பதுதான் அமைப்புகளின் அழிவுக்கும் இழிவுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு சமூக நலன் குன்றுவதை தடுக்கவும் சமூகநிலை மேலும் பேணவும் தலைமைத்துவம் என்பது அவசியமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு தலைமைத்துவம் அவசியத்தை அல்குர்ஆனும் சுன்னாவும் மனித சமூகத்திற்கு எடுத்துக்காட்டிய வண்ணமே இருக்கின்றது.

“விசுவாசிகளே! உங்களுக்குள் யாதொரு விடயத்தில் பிணக்கு ஏற்பட்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஒப்புக்கொள்ளுங்கள் இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்” (4:59)

தனித்துச் செயற்படுவதையும் பிரிந்து வாழ்வதையும் கண்டிக்கும் இஸ்லாம் சமூகமாக வாழ தலைமை அவசியம் என்பதையே இது வலியுறுத்துகின்றது “உங்களில் மூன்று பேர் பயணம் மேற்கொண்டாலும் ஒருவரை தலைவராக நியமித்து கொள்ளட்டும்”(புகாரி)

இவ்வாறு தலைமைத்துவம் அவசியமாகும் எந்த  சந்தர்ப்பத்திலும் தலைமைத்துவம் இன்றி செயற்பட முடியாது என்ற நிலையை குர்ஆன் சுன்னா சுட்டிக்காட்டுகின்றது. அவ்வாறு தலைமைத்துவம் தோன்றும் போது அதற்கு கட்டுப்படுமாறும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது அல்லாஹ் றஸூக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு அடுத்தாற்போலுள்ள தரத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றன.

அவ்வாறு தலைமைத்துவம் சிறப்பாக சீரான முறையில் இடம்பெற அது தகுதி பண்புகளை பெற்றிருப்பதோடு சில ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்கப்படுகிறது தலைமைத்துவத்தின் வெற்றி அது பெற்றிருக்கும் பண்புகளை பொறுத்தே அமையும். இஸ்லாம் தலைவர்களிடத்தில் முழு மனதுடனான அர்ப்பணத்தையும் தனது சமூக நலனை கருத்திற்கொண்டு செயற்படுதலையும் வேண்டி நிற்கின்றது. இஸ்லாமிய தலைமைத்துவம் மூன்று முதன்மை தூண்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல், பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி தேவையான உட, உள, அறிவு, ஆற்றல் உணர்வுகள் ரீதியான வலிமையை பெற்றிருத்தல். கலந்தாலோசனை மூலமாக காரியம் ஆற்றல். இவை தலைமைத்துவத்தை சுற்றுச்சூழலும் மூன்று முக்கியக் கூறுகளாகும்.

நபியவர்களும் அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள், தளபதிகள் தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரும் சமமாகவோ அல்லது கூடுதல் குறைவாகவோ இந்த பண்பு நலன்களைக் கொண்டிருந்தனர்.

தலைமைத்துவம் குறித்து தலைமைத்துவக் கட்டுப்பாட்டின் அவசியத்தை குறித்தும் புனித இஸ்லாம் வலியுறுத்தியது போன்று வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளம் அதன் தலைமைத்துவத்தின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளது. மாத்திரமல்லாமல் அதன் எழுச்சியும் வீழ்ச்சியும் தலைமைத்துவ கட்டுப்பாட்டில் தங்கியுள்ளது தலைமைத்துவத்திற்கு கட்டுப்பாடாது மாறு செய்வது பெரும்பாவமாகும்.

இது குறித்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “தம் தலைவரிடம் குறை எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையை கடைப் பிடிக்கட்டும் ஏனெனில் ஒருவர் இஸ்லாமிய கூட்டமைப்பில் இருந்து ஒரு சாண்அடி அளவுக்கு பிரிந்து பயணித்தாலும் அவர் அறியாமைக்கால (ஜாஹிலிய்ய) மரணத்தை தழுவுகிறார்.(அல்புகாரி)

இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளை இடப்படாத வரை ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையை) செவி ஏற்பதும் (அதற்க்கு) மாறு செய்யும்படி கட்டளையிட்டால் செவி ஏற்பதோ கட்டுப்படுவதோ கூடாது (அல் புகாரி)

தலைமைத்துவ கட்டுப்பாட்டின் அவசியத்தையும் அதன் வரையறைகளையும் அல்குர்ஆனின் நிழலில் விளக்கமுடியும்.

“அல்லாஹ்வுக்கும் இன்னும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் எனும் நேரடிக் கட்டளை அல்குர்ஆனில் சூறா ஆலு இம்ரான்:32, சூரா அன்நிஸா:59, அல் அன்பால்:20, அன்நூர்:54, முஹம்மத்:33 ஆகிய ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது. இவ்வசனங்களில் ஆரம்பத்தில் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்சொன்ன வசனங்களில் மாத்திரம் அல்லாஹ்வுக்கும் இன்னும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் எனும் கட்டளை ஓடு சேர்த்து பொறுப்பதிகாரிகளுக்கும் கட்டுப்படுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். தலைமைத்துவ கட்டுப்பாட்டின் அவசியம் இவ்வசனம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு முஃமின் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முழுமையாக கட்டுப்படுவதுபோன்று தலைமைத்துவத்திற்கு முழுமையாகக் கட்டுப்படுவதை அவசியமா? இல்லையெனில்  தலைமைத்துவ கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் குர்ஆன் வசனங்கள் எடுத்துக்காட்டுகின்றது.

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் இன்னும் ரஸூலுக்கும் கட்டுப்படுங்கள் இன்னும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்படியுங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதற்கும் தலைமைத்துவத்துக்கு கட்டுவதற்கும் இடையிலான  வேறுபாட்டை  இந்த வசனம் எடுத்துக்காட்டுகின்றது.  அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முழுமையாக கட்டுப்படுவதுபோன்று தலைமைத்துவத்திற்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. எனினும் அதிகாரம் உடையவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட்டு குர்ஆன் சுன்னாவுக்கு மாறு செய்யாவிடின் தலைமைத்துவ கட்டுப்பாடு கடமையாகும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைமைத்துவத்திற்கு மாறு செய்வது பெரும் பாவமாகும் அவ்வாறு கண்மூடித்தனமான தலைமைத்துவக் கட்டுப்பாடு அல்குர்ஆனில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இவ்வசனம் போதுமான சான்றாகும்.

“அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எந்த ஒரு உயிரினத்திற்கும் கட்டுப்பாடு கிடையாது”

திர்மிதி, முஸ்னத் அஹ்மத் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இந்த ஹதீஸின் மூலம் தலைமைத்துவக் கட்டுப்பாட்டுக்கான வரையறை நபியவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள் நபியவர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவம் இதனை மேலும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

“நபி(ஸல்)அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைப் தளபதியாக்கி அவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள் அந்த அன்சாரி ஒருகட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு “நீங்கள் எனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா? என்று கேட்டார் அவர்கள் “ஆம்” என்றனர் அப்போது அவர் விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடுமாறு உங்களுக்கு நான் உத்தரவிடுகின்றேன்” என்றார்.

அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் நுழைய முயற்சித்த போது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர் “(நரக) நெருப்பில் இருந்து தப்பிப்பதற்காகவே நாம் நபி(ஸல்) அவர்களை பின்பற்றினோம் அவ்வாறிருக்க அதில் நாம் நுழைய வேண்டுமா?” என்று கேட்டார்.

இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரது கோபமும் தணிந்தது. நபியவர்கள் இடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது அப்போது நபியவர்கள் அதில் மட்டும் அவர்கள் புகுந்து இருந்தால் “அதில் இருந்து ஒருபோதும் வெளியேறியிருக்கமாட்டார்கள் கீழ்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்” என்றார்கள். (புகாரி)

தலைமைத்துவம் தவறுமிடத்து அதனை சுட்டிக் காண்பிப்பது, கண்ணியமாக விமர்சிப்பது, ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிப்பது, தலைமைத்துவத்தை அவமதிப்பதாகவோ கட்டுப்பாட்டை மீறியதாகவோ ஆகாது மாறாக அதில் நலவே எமக்கு இருக்கின்றது.

இவ்வாறு இஸ்லாம் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதன் அவசியத்தை விளக்கியதுபோன்று பின்பற்றுகின்ற தன்மையினையும் விளக்குகின்றது. ஒரு நல்ல தலைவருக்கு நல்ல பின்பற்றுபவர்கள் தேவை என்பதை இஸ்லாம் வலியுறுத்தி நிற்கின்றது. தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதை நபித்துவத்திற்கு கட்டுப்படும் நிலைக்கு இஸ்லாம் மாத்திரம் உயர்த்தியுள்ளது. இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

“யார் தனது தலைவரை பின்பற்றுகிறாரோ அவர் என்னை பின்பற்றியவராவார் யார் தலைவருக்கு மாறு செய்கின்றாரோ அவர் எனக்கு மாறு செய்தவராவார் (புகாரி)

ஆகவே ஒரு தலைமைத்துவத்திற்கு ஒரு சமூகம் கட்டுப்பட்டு நடக்குமானால் அந்த சமூகம் சிறந்த ஒரு சமூகமாக வரலாறு பேசுகின்ற ஒரு சிறந்த சமூகமாக மேம்படும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

N.SOHRA JABEEN
AKKAAKKARAIPATU
SOUTH EASTERN UNIVERSITY OF SRILANKA

ஒரு கட்டிடம் பலமாக இருக்க வேண்டுமெனில் அஸ்திவாரம் உறுதியாக காணப்பட்டால் அது சாத்தியமாகும். அவ்வாறே ஒரு சமூகத்தின் நிலையான உறுதியான இருப்பிற்கு சமூகத்தை வழிநடாத்தும் தலைமைகள் வலுவானதாக இருக்க வேண்டும். இருந்தாலே சமூகத்தினை நன்னெறி…

ஒரு கட்டிடம் பலமாக இருக்க வேண்டுமெனில் அஸ்திவாரம் உறுதியாக காணப்பட்டால் அது சாத்தியமாகும். அவ்வாறே ஒரு சமூகத்தின் நிலையான உறுதியான இருப்பிற்கு சமூகத்தை வழிநடாத்தும் தலைமைகள் வலுவானதாக இருக்க வேண்டும். இருந்தாலே சமூகத்தினை நன்னெறி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *