மோமிக்கை நீதான் விடுவிக்கனும்

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 14】

“ந நான் என்ன பண்ணனும்.” என தடுமாறி கொண்டே கேட்டாள் ஐரிஸ்.

“மோமிக்கை நீதான் விடுவிக்கனும். யோசிக்காதே! மீன்தானே போனா போகுதுன்னு விடவேண்டாம்.” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது லில்லியும் ஜிம்சனும் அங்கு வந்தார்கள். யுவானுடைய தோற்றத்தை கண்டு ஆச்சர்யப்பட்டார்கள்.

“நீங்க எதுக்காக இங்க. என்ன ட்ரெஸ் இது. இங்கே என்ன நடக்குது ஐரிஸ்.” என்று கேட்டாள் லில்லி. ஜிம்சனும் சந்தேகித்து பார்த்தான்.

“இங்க பாரு ஐரிஸ் யோசிக்க நேரமில்லை. சீக்கிரமா நான் சொன்னதை செய். மேலே எங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் உடனே போயாகனும்.” என்றவன் மறுபடியும் லாவகமாக படிகளில் ஏறி கேன்டீனுக்குள் நுழைந்து மேல்தளத்திற்கு சென்றான். லில்லியும் ஜிம்சனும் ஐரீஸுடைய விளக்கத்துக்காக காத்திருந்தனர். முந்தைய நாள் ஆரம்பித்து இப்போது வரை நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்தும் சொல்லி முடித்தாள் ஐரிஸ்.

“அடச்சே! எவ்வளவு மோசமான இடத்தில் நாம வேலை பார்த்து கிட்டு இருக்கோம். எனக்கு அப்போவே சின்னதா சந்தேகம் வந்திச்சு” என்றாள் லில்லி.

“அப்போ இங்க நடக்குற குற்றங்களை கண்டுபிடிக்க தான் யுவான் சயின்டிஸ்ட் மாதிரி வந்தானா?” என்றான் ஜிம்சன்.

“ஆமா. நாம ஏதாவது பண்ணியாகனும்.” என்றாள் ஐரிஸ்.

“சரி நாங்களும் உன் கூட இருக்கோம். இப்போ என்ன செய்வது?” என்று கேட்டாள் லில்லி.

“கடலுக்குள் போய் மோமிக்கை விடுவிக்குமாறு யுவான் சொல்லிட்டு போறான். நாம இப்போது அதை தான் செய்ய போறோம்.” என்றாள் ஐரிஸ்.

மூவரும் வழக்கம் போலவே நீச்சல் உடையில் பயிற்சி பெறுவது போல் நீருக்குள் குதித்தனர். ஒருவருக்கு ஒருவர் சைகை காட்டி கொண்டே கட்டிடத்தின் கீழ் நோக்கி கடலுக்குள் சென்றனர். மோமிக்கை கண்டுபிடிக்க ஐரிஸுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. அது அடைக்க பட்டிருந்த கூண்டில் அதன் பெயர் கரையில் உருக்கில் எழுதப்பட்டு இருந்தது. இவர்கள் வேலைக்கு சேருவதற்கு முன்னர் இருந்தே இதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளும் மேல் தளத்தில் இருந்த டெக்னீசியன்களால் செய்யப்பட்டு இருந்தது.

ஐரிஸ் அந்த கூண்டை திறக்க முயற்சி செய்தாள். முடியவில்லை. லில்லியும் ஜிம்சனும் இணைந்து மூவரும் கூண்டை திறக்க எத்தனித்தார்கள். அந்த மீனும் தன்னை விடுவிக்க தான் இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கூண்டை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது.

அப்போது ஐரிஸ் வழக்கமாக பந்து விளையாடும் அந்த சுறா மீன் வந்தது. அதற்கு புரியும் வகையில் ஐரிஸ் சில சைகைகளை காட்ட சுறாமீன் திரும்பி சென்றது. அதற்கு புரியவில்லை என்று எண்ணி ஐரிஸ் வருத்தப்பட மீண்டும் தூரத்தில் இருந்து வேகமாக அந்த மீன் வருவதை கண்டு ஐரிஸ் லில்லியையும் ஜிம்சனையும் வேகமாக கூண்டை விட்டு தள்ளி விட்டு அவளும் விலகி ஓட வேகமாக வந்த மீன் கூண்டில் மோத கூண்டு திறந்து கொண்டது.

கீழே கூண்டு உடைக்கப்பட்டதும் மேலே அபாய எச்சரிக்கை ஒலித்தது. யுவான் மகிழ்ச்சி அடைந்தான். தப்பித்த சுறா மீன் நன்றி உணர்ச்சியுடன் மற்ற சுறாவை தலையால் தொட்டு நன்றி தெரிவிக்க இவர்கள் அனைவரும் அதை மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தனர். மேலே கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒருவன் ஓடிவந்து சுபிரீயண்ட் கிட்ட,

“தப்பு நடத்துடுச்சு சார். இன்னிக்கி ஆராய்ச்சிக்கு வச்சிருந்த சுறா மீன் தப்பிச்சி போயிடுச்சு” என்றதும் அவர் கோபத்துடன் எழுந்தார்.

“எப்படி எப்படி இது நடந்தது. ஒவ்வொரு முறையும் ஆராய்ச்சிக்கு வெச்சிருக்குற மீன்கள் எப்படி தப்பிக்குதுங்க.” என்று கத்தினார்.

கீழே இனி ஐரிஸ் அவை இங்கே இருந்தால் ஆபத்து என்று உணர்ந்து சைகையால் அவற்றை போகும் படி சொல்ல இரண்டு சுறாக்களும் வேகமாக அங்கிருந்து சென்று விட்டன. மூவரும் அங்கிருந்து மேலே நீந்தி வந்தனர். துரதிஷ்டவசமாக மேலே தலையை எடுத்த போது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

“மாட்டி கிட்டோம் என்று நினைக்குறேன்.” என்றாள் மெதுவாக லில்லி. பயத்துடன் மூவரும் மேலே ஏறி வந்தனர்.

தொடரும்.
A.L.F. Sanfara

Leave a Reply