முஸ்லிம்கள் வளர்த்த நுண் கலை

0 Comments

இந்து சமுத்திரத்தின் முத்து
அதுவே ஈழத் திருநாடு
பல்லினத்தவர் கூடி வாழும் நாடு
நாலினத்தவருள்
ஓரினத்தவர்
நல்லோரான முஸ்லிம்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள்
சிறுபான்மையாக வாழ்ந்தாலும்
சிறுமையானதல்ல
நம் முன்னோரின்
சிறப்பான சேவை

வளர்த்த கலை பொற் கலை
அதிலே ஒன்று நுண்கலை
அழகும் கலையும்
இன்பமும் இரசனையும்
உண்மையும் நன்மையும்
இணைந்த கலைகளே
இஸ்லாமிய கலைகள்

இஸ்லாத்தின் வரையறையில்
இலங்கை முஸ்லிம்கள்
இசைக் கலையை வளர்த்தனரே!
நாட்டாரிசையும்
வானொலி இசையும்
வான் முழங்க ஒலித்ததுவே!

வியக்க வைக்கும் மாடங்களும்
விசாலமிக்க குப்பாக்களும்
விவேகமிக்க நம் முன்னோரின்
விண்ணைத் தொடும்
வேலைப்பாடுகள்

பூவேலைப்பாட்டு ஜன்னல்களும்
புதுமைமிகு நுட்பங்களும்
பரவசமூட்டும் முகப்புக்களும்
பார்க்க மெருகூட்டும் மிஹ்ராபும்
பண்பாட்டு வடிவங்களே!

அலங்காரத்தள விரிப்பும்
அலங்காரப் பின்னல்களும்
பன்னாலான பாய்களும்
பாரம்பரியக் கலைகளே!

சிலை சிற்பம் உருவம் தவிர்த்து
சிறப்பான அரபெழுத்தை
சிங்காரமாய் வடிவமைத்து
சிந்தையைக் கவர்ந்தனர்
நம் சிறப்பான முன்னோர்கள்

தமிழ் நாட்டுக் களியும்
கேரள நாட்டுக் கோல் களியும்
கோர்வையானதே
களிப்பு மிகு
களிக்கம்பு ஆட்டத்தில்

சந்தத்தோடு வண்ணம்
தவறாமல் ரபானடித்து
பதம்படித்து
பக்கீர் பைத்தோடு
தஹ்ரா இசைத்து
பரவசமூட்டி மகிழ்ந்தனர்

வடித்த கலைகள்
கண்கொள்ளாக் காட்சி
வரம்பு மீறா
நுண்கலைத் தேர்ச்சி இதுவே
நம் முன்னோரின் மாட்சி
இலங்கைத் தீவே
இதற்கோர் அத்தாட்சி

Faslul Farisa Asadh
(Porwaiyoor)

Leave a Reply

%d bloggers like this: